கொழும்பு: மேல் மற்றும் தென் மாகாண சபைகள் நேற்று (12) நள்ளிரவு 12 மணியுடன் கலைக்கப்பட்டன. இதனை மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானாவும் தென் மாகாண ஆளுநர் குமாரி பாலசூரியவும் தினகரனுக்கு உறுதிப்படுத்தினர்.
மேற்படி இரு மாகாண சபைகள் கலைக்கப்பட்டமையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல்கள் ஆளுநர்களின் கையொப்பங்களுடன் தயாராகியிருப்பதாகவும் தெரிய வருகிறது.
இரண்டு மாகாண சபைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவிலேயே கலைக்கப்பட வேண்டிய போதும் முதலமைச்சர்களில் வேண்டுகோளு க்கமைய மேல் மற்றும் தென் மாகாண ஆளுநர்கள் உரிய காலத் திற்கு முன்பாகவே மாகாண சபைகளை கலைத்து ள்ளனர். இதன் படி, மேல் மற்றும் தென் மாகா ணங்களுக்கு புதிய மாகாண சபை களை நியமிப் பதற் கான மாகாண சபைத் தேர்தல்கள் மார்ச் மாத இறுதியில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, மேல் மற்றும் தென் மாகாண சபைகள் கலைக்கப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவித்தல் உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெற்றதும் இரண்டு மாகாணங் களிலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென தேர்தல்கள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
மாகாண சபைகள் கலைக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பினைத் தொடர்ந்து 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் 10 (1) பிரிவுக்கமைய தேர்தல்கள் திணைக்களத்தினால் வேட்புமனுக் கோரப்படும். ஒரு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை பெயர் குறித்து போட்டியிடும் வேட்பாளர்கள் தொகை வேட்புமனு வழங்குவதற்கான காலக்கேடு மற்றும் வேட்புமனு கையேற்கும் இறுதித் திகதி ஆகியவற்றையும் தேர்தல்கள் திணைக்களம் வர்த்தமானியில் வெளியிடும்.
இந்த வர்த்தமானி வெளியிடப்பட்ட தினத்திலிருந்து 14 ஆவது நாளிலிருந்து வேட்புமனுத் தாக்கல் ஆரம்பிக்கப்பட்டு 21 ஆம் நாள் நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுக்கள் கையேற்பது முடிவுக்கு கொண்டு வரப்படும்.
வேட்பு மனு தாக்கல் நிறைவுபெற்றதும் மிக குறுகிய காலத்தில் மாகாண சபைகள் சட்டத்தின் 22 (1) பிரிவிற்கமைய மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரினால் தமது மாவட்டத்தில் மாகாண சபைகள் தேர்தலுக்காக போட்டியிடும் அரசியல் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள், சின்னங்கள், வேட்பாளர்களது பெயர் விபரம் அவர்களது விருப்பு இலக்கங்கள், வாக்கெடுப்பு நிலையங்கள் பற்றிய விபரங்கள் உள்ளடங்கிய அனைத்து அம்சங்களையும் கொண்டதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்.
மாகாண சபைகள் சட்ட விதிமுறைக்கமைய குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்ட திகதியிலிருந்து 05 வாரங்களுக்கு குறையாததும் 08 வாரங்களுக்கு மேற்படாததுமாக வரும் சனிக்கிழமையன்று தேர்தல்கள் திணைக்களம் மேற்படி இரு சபைகளுக்குமான தேர்தலை நடத்தும்.
– தினகரன்
Published by

Leave a comment