கொழும்பு: மதகுருமார் தமது மதம் சார்பான விடயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்துக் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் தாம் அரசியலில் நேரடியாகக் களமிறங்கி அரசியல்வாதியாக தம்மை மாற்றிக் கொண்டு ஓர் அரசியல்வாதி போன்று அரசியலில் ஈடுபட வேண்டும்.
இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் இல்லாத பொல்லாத சோடிக்கப்பட்ட பொய்களைக் கூறி நாட்டின் தலைமைக்கும், இறைமைக்கும் குந்தகத்தை ஏற்படுத்துவது எந்தவொரு மதகுருவினதும் பணியல்ல. அது வீம்பிற்காகச் செயற்படும் எதிர்க்கட்சியினரது பொய்ப் பிரசார வேலை எனச் சர்வமதத் தலைவர்களும், கல்விமான்களும், சிவில் சமூகத்தினரும் கூட்டாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாடு பயங்கரவாதப் பிடியிலிருந்த போது கொடூரமான பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற முனைந்த சில மதகுருமார் இப்போது மீண்டும் அதேமாதிரியான தொழிலில் ஈடுபட்டு வருவதனைக் காண முடிகிறது. இவர்களுக்குத் தாளம் இசைக்கும் வகையில் சில தமிழ் இணையங்களுடன் சேர்ந்து சில உள்ளூர் தமிழ் ஊடகங்கள் சிலவும் துணை நிற்பது மேலும் கவலை தரும் விடயமாகும் எனப் புத்திஜீவிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதகுருமார் தமது பணியை மறந்து தடம்மாறி அரசியல் நோக்குடன் பயணித்து தமக்கும், தமது மதத்திற்கும் பிரசாரம் தேட முயல்வது எவ்வகையிலும் பொருத்தமற்ற செயற்பாடாகும். அதிலும் இந்நாட்டுப் பிரஜை களாக இருந்து கொண்டு தமது தாய் நாட் டையே காட்டிக் கொடுத்துச் செயற்பட்டு வருவது மிகவும் பாரதூரமான விடய மாகும் எனக் கல்விமான்கள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகள் போன்று யுத்த காலத்தில் பாவிக்கப்பட்ட ஆயுதங்களின் வகைகள், மாதிரிகள் பற்றியும், யுத்த களத்தில் நின்று கணக்கெடுத்தவர்கள் போன்று இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றியும் வெளிநாட்டு ராஜதந்திரிகளிடமும், ஐ.நா. பிரதிநிதிகளிடமும் பொய்யான கருத்துக்களைத் தெரிவித்து வருவதானது இவர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பிருந்து வந்ததை உறுதி செய்வதாகவே உள்ளது. அத்துடன் இவர்களில் சிலர் புலத்தில் வாழும் புலி ஆதரவாளர்களின் டொலர்களுக்காக இங்கே குழப்பதை விளைவிப்பவர்களாகச் செயற்பட்டு வருகின்றனரோ எனும் பெருத்த சந்தேகத்தையும் எழுப்புகிறது எனச் சிவில் சமூகத்தினர் தெரிவிக்கின்றனர். தாம் சார்ந்த மதம் தொடர்பாக மக்கள் மதகுருமார் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இவர்கள் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவே உணரமுடிகிறது. எந்தவொரு நாட்டிலும் தமது சொந்த தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்தவொரு மதகுருமாரையும் காண முடியாது. அதிலும் இங்குள்ள சில மதகுருமார் நடக்காத விடயங்களை நேரில் நின்று பார்த்து நடந்தது போன்று காட்டிக் கொடுப்பில் செயற்பட்டு வருவது மிகுந்த வேதனை தரும் விடயமாகும்.
குறுகிய நோக்குடன் செற்படும் இத்தகைய மதகுருமார் தொடர்பாக சமூகம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். மதகுரு எனும் சமூகத்தில் வழங்கப்பட்டிருக்கும் அதிஉயர்ந்த அந்தஸ்தை இன்னொருவரது அல்லது குழுவினரது தேவையை நிறைவேற்றுவதற்காக ஒரு போதும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அது அவர்கள் சார்ந்த மதத்தையும், அம்மதத்தைப் பின்பற்றும் மக்களையும் குறைத்து மதிப்பிடச் செய்யும். எனவே இனிமேலாவது அரசியல் விவகாரங்களில் மதகுருமார் ஈடுபடுவதாயின் அவர்கள் அரசியலில் நேரடியாக இறங்கி அரசியல் செய்ய வேண்டும் என சர்வமத குருமார் சிலர் தெரிவித்தனர்.
இதேவேளை மதகுருவாக இருந்து தமது சமயப் பணிகளுடன் சமூகப் பணியாக நாட்டினதும், தாம் சார்ந்த சமூகத்தினதும் நன்மைக்காக தமது மதகுரு எனும் அந்தஸ்த்து எல்லைக்குள் நின்று உண்மையாகச் செயற்பட்டு வரும் பல மதகுருமார்களை நாம் உண்மையில் பாராட்டவே வேண்டும். அவர்களது
தேசப் பற்று, சமூகப் பற்று, சமயப் பற்று ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்று, ஆனால் மதகுருமார் சிலர் மேற்கொள்ளும் குறுகிய செயற்பாடு நல்லவர்களான இவர்களையும் பாதிப்படையச் செய்வது துரதிஷ்டமே எனவும் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சில அரசியல்வாதிகள் தமது சுயநல, சுயலாப அரசியலுக்காக இவ்வாறு காட்டிக் கொடுப்புக்களில் ஈடுபடுகிறார்கள் எனில் ஏன் ஒரு தேவையுமில்லாத மதகுருமார் இத்தகைய செயல்களில் தம்மை இணைத்துக் கொள்ள வேண்டும் எனச் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
– தினகரன்
Published by

Leave a comment