மகாவலி: நான் அரசியல் ரீதியில் எவருடனும் கருத்து முரண்பாடு கொண்டதில்லை.நான் ஒரு அரசாங்க அதிகாரி எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார வரம்புக்குள் மட்டுமே நின்று செயற்பட முடியும் என தெரிவித்துள்ள வடமாகாண பிரதம செயலாளர் திருமதி.விஜய லட்சுமி ரமேஷ் எனக்கெதிராக விடப்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பில் பொலீஸில் முறைப்பாடும் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலைய கேற்போர் கூடத்தில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அரசின் உயர் பதவியில் வகிக்கும் தனக்கு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பிலும்,ஊடகங்களில் அண்மைய சில தினங்களாக வெளிவந்த வண்ணமுள்ள சில செய்திகள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் இந்த செய்தியாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பிரதம செயலாளர் மேலும் கருத்துரைக்கையில் –
வடமாகாண சபை இயங்க ஆரம்பித்த நாள் முதல் நான் அந்த சபையின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருகின்றேன்.அது எனது பணியும் கூட, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களால் முன்மொழியப்படும் திட்டங்கள் தொடர்பிலும்,அதனை நடை முறைப்படுத்துவதிலும் எனது பணி உரிய முறையில் இடம் பெறுகின்றது.
வடமாகாண பிரதம செயலாளர் திருமதி.விஜய லட்சுமி ரமேஷ்
எமது மாகாணத்தை பொறுத்த வரையில் இங்கு தேவைப்படுவது அபிவிருத்திகளே, அதனை இந்த மாகாண சபை அமைய முன்னரும்,அமைந்த பின்னரும் எனக்குள்ள அதிகாரங்கள், அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் என்பவைகளுக்கமைய முறைாயக செய்துள்ளேன்.என்மீது எவ்வித மோசடி தொடர்பிலான குற்றச் சாட்டுக்களும் இல்லை.
ஆனால் அண்யைமக காலமாக ஊடகங்கள் மூலம் எனக்கெதிரான சில குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்படுவதை அறிய முடிகின்றது.அதற்கு தெளிவை வழங்க வேண்டியது எனது கடமையாகும்.
யுத்த அழிவின் பின்னர் இடம் பெறும் அபிவிருத்திகள், மீள்குடியேற்றம் என்பன தொடர்பில் மிகவும் அவதானத்துடனும், மிகவும் முன்னுரிமை வழங்கியும் செய்து வருகின்றேன்.நிர்வாக ரீதியாக எவருக்கும் பாகுபாடுகள் இன்றி அவற்றை சரியாக நிறைவேற்றிவருகின்றேன்.சில பணிகளை எனது எல்லையினை மீறி செய்ய முடியாது. அவ்வாறு செய்வதாயின் இதற்கு மேல் அதனுடன் தொடர்புபற்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடியே செய்ய வேண்டியுள்ளது.
ஆனால் அதனை மீறி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்பது எனது தவறல்ல.அதற்காக சட்ட வரையறை மற்றும் அரசாங்க சுற்றறிக்கைகள் என்பவைகளை மீறி செல்ல முடியாது.
இது சிலருக்கு பிரச்சினையாக இருக்கலாம்.அந்த வகையில் என்மீது வித்தியாசமான பார்வை அவர்களால் பார்க்கப்படுவதாக அறிகின்றேன்.முதலமைச்சருக்கும் எனக்கும் இடையில் பிரச்சினைகள் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.முதலமைச்சரை பொருத்த வரையில் அவர் ஒரு நீதியரசராக இருந்தவர்.சட்ட நடை முறைகளை தெளிவாக தெரிந்தவர். அப்படிப்பட்ட ஒருவருடன் இணைந்து வடமாகாணத்தில் பணியாற்றக் கிடைத்தமையை நான் மெச்சுகின்றேன்.
உங்களுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்தவர் முதலைமைச்சரா ?என ஊடகவியலளார் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதம செயலாளர் விஜய லட்சுமி ரமேஷ், இது தொடர்பில் நான் முறைப்பாடு செய்துள்ளேன். ஆனால் அதனை எவர் செய்தார் என்பது இன்னும் தெரியவில்லை என்றும் கூறினார்.
குறிப்பாக அரச அதிகாரிகளுக்கு இடப்படும் அச்சுறுத்தல் அரச இயந்திரத்தின் செயற்பாட்டினை சீர்குலைக்கும் என்பது தெளிவாகிறது.இதன் மூலம் வடமாகாணத்தில் உள்ள அதிகாரிகள் அச்ச சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறித்தும் நான் இங்கு கூற வேண்டும் என்றும் பிரதம செயலாளர் திருமதி.விஜய லட்சுமி ரமேஷ் கூறினார்.
Leave a comment