வங்கதேச தேர்தல்: ஹஸீனா கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது
– SHM
டாக்கா: வங்காளதேசத்தில் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு ஏற்கனவே 153 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 147 தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலை வங்க தேசத்தின் முக்கிய எதிர்கட்சியான வங்கதேச தேசிய கட்சி புறக்கணித்தது.
தேர்தலை தடுக்கும் வகையில் 18 எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளும் கட்சியினருக்கும் எதிர்கட்சியினருக்கும் இடையே நிகழ்ந்த மோதல்களிலும், கலவரக்காரர்கள் மீது பொலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.
இந்நிலையில், தேர்தலை ஏராளமான மக்கள் புறக்கணித்ததால் 40 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகின. இதனால் தேர்தல் முடிவுகள் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
வாக்குப்பதிவு நடைபெற்ற 147 தொகுதிகளில் 79 தொகுதிகளை அவாமி லீக் வேட்பாளர்கள் கைப்பற்றினர். அவாமி லீக்குடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த ஜடியா கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக அமரும் தகுதியை அக்கட்சி பெற்றுள்ளது.
ஷேக் ஹசினா
அவாமி லீக்கின் இதர 3 கூட்டணி கட்சிகள் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. சிறிய கட்சி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் 13 தொகுதிகளை கைப்பற்றியுள்ளனர். எனவே 300 தொகுதிகளில் 232 தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்ற ஷேக் ஹசினாவின் தலைமையிலான அவாமி லீக் கட்சி நான்கில் 3 பங்கு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
வங்கதேசத்தின் பத்தாவது பிரதமராக ஷேக் ஹசினா பதவி ஏற்கும் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது உண்மையான வெற்றியல்ல என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
Leave a comment