பாம்ஒயில் இறக்குமதி செய்வதாக ஆவணங்களை காண்பித்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்த 16,000 லீற்றர் எதனோல்

customsகொழும்பு: பாம்ஒயில் இறக்குமதி செய்வதாக ஆவணங்களை காண்பித்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்த 16,000 லீற்றர் எதனோலை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சுமார் 20 அடி நீளமான கொள்கலனுக்குள் 80 பீப்பா எதனோல் இருப்பதை சுங்க அதிகாரிகள் நேற்று கண்டுபிடித்தனர். எதனோலை இறக்குமதி செய்ததாக கூறப்படும் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 32 இலட்சம் ரூபா பெறுமதியான எதனோலுக்கு சுங்க வரியாக இலங்கையில் ஒருகோடி ரூபாவை செலுத்த வேண்டும். எதனோல் இறக்குமதி செய்வதற்குரிய அனுமதிப் பத்திரம் இன்மை மற்றும் ஒரு கோடி ரூபா வரி ஏய்ப்பும் செய்யப் பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

சுங்க திணைக்களத்தின் ஒருகொடவத்தை கொள்கலன் இறங்குதுறையில் நேற்று குறித்த கொள்கலன் கைதான நபருக்கு முன்னால் திறக்கப்பட்டபோது அதனுள் 80 எதனோல் பீப்பாகள் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன.

customs

முதலில் இறக்கப்பட்ட பீப்பாய் திறக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. Therm o Scientific Portable Optical Analyzer மூலமாக பகுப்பாய்வாளர் ஹர்ஷா ரொட்ரிகோ எதனோலை பகுப்பாய்வு செய்து உறுதி செய்தார்.

குறிப்பிட்ட கொள்கலன் மலேஷியாவின் சிளான்க் துறைமுகத்திலிருந்து Northern Prelude என்ற கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டு 02/12/2013 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கொட்டாஞ்சேனையிலுள்ள நிறுவனம் ஒன்றின் பெயரில் கொள்கலனில் பாம் ஒயில் இறக்குமதி செய்வதாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. போலி ஆவணங்களை சமர்ப்பித்து கொள்கலனை துறைமுகத்திலிருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. எனினும் சமர்ப்பிக்கப்பட்டவை போலி ஆவணங்கள் என கண்டுபிடிக் கப்பட்டதையடுத்து சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.

தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தியபோதும் வழங்கப்பட்ட தகவல்களில் உண்மைத் தன்மை இல்லாத காரணத்தினால் கொள்கலனை திறக்க சுங்க அதிகாரி முடிவு செய்துள்ளனர். இதன்படி நேற்று கொள்கலன் திறக்கப்பட்டது.

எதனோல் இறக்குமதி செய்வதற்கான அனுமதிப் பத்திரம் இன்மை மற்றும் ஒருகோடி ரூபா வரி ஏய்ப்பு போன்ற இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள் ளன. சுங்க திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஜகத். பி. விஜேவீரவின் வழிகாட்டலின் பேரில் சுங்க திணைக்கள வருவாய்த்துறை பணிப்பாளர் கே. டி. நிக்கலஸ், பிரதி பணிப்பாளர் சிறிபால எதிரிமான்ன, சுங்க அதிகாரி பராக்கிரம பஸ்நாயக்க, வசந்த ரந்தெனிய, ஜீ. பி. ஞானராஜ் உட்பட சுங்க அதிகாரிகள் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக ‘எதனோல்’ இறக்குமதி செய்த 10 கொள்கலன்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவிக்கிறது.

இவற்றை இறக்குமதி செய்துள்ளவர் களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது.

10 எதனோல் கொள்கலன்களில் ஒரு கொள்கலனுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கு முடிவடைந்து தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது. இதில் அரைவாசி பணத்தையே செலுத்தியுள்ளார்கள். மிகுதி பணத்தை நீதிமன்றம் ஊடாக அறவிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் திலக் பெரேரா தெரிவித்தார்.

இன்னும் இரண்டு கொள்கலன்களுக் கான வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 7 கொள்கலன்கள் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்வதற்குரிய விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

– தினகரன்

Published by

Leave a comment