யாழ்ப்பாணம்: 30-12-2013 அன்று வடக்கு மாகாண கல்வி அமைச்சில், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கௌரவ. குருகுலராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற வலயக் கல்விப்பணிப்பாளர்கள், மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் விஷேட வளவாளராக கலந்து கொண்டு மக்கள் பிரதிநிதி என்றவகையில் ஒரு சில கருத்துக்களை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டார்.
குறித்த சந்திப்பின்போது வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ. அஸ்மின் அவர்கள் முன் வைத்த கருத்துக்களின் சுருக்கம்:
கௌரவ அமைச்சர் அவர்களே, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளே..!
உங்கள் அனைவருக்கும் என்னுடைய வந்தனங்கள். இவ்வாறான ஒரு நல்ல வாய்ப்பினை
ஏற்படுத்தித் தந்துள்ளமையினையிட்டு எனது நன்றிகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அமைந்திருக்கின்ற வடக்கு மாகாணசபை சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்திருக்கின்றது. குறிப்பாக தமிழ் மக்களிடையே
அது அளப்பரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது.13வது திருத்தச்சட்டமூலம், மாகாண சபை அதிகாரங்கள் தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன. அதிகாரங்கள் குறித்தும் அதிகாரங்களை
நடைமுறைப்படுத்துவது குறித்தும் பல்வேறு சிக்கல்கள் இருப்பதை நாம் காண்கின்றோம்.ஆனாலும் எமக்கு நம்பிக்கை தருகின்ற பல அம்சங்கள் மாகாணசபை முறைமையில் இருக்கின்றன. அத்தகைய விடயங்களுள் ஒன்றாகவே ‘கல்வித்துறை’ அமைந்திருக்கின்றது. அதிலும் குறிப்பாக முதல் நிலை, மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி என்கின்ற மாணவ சமூகத்தில் அதிகமானவர்களை மையப்படுத்திய கல்வி நடவடிக்கைகள் மாகாண கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படுகின்றன.
யுத்தத்திற்குப் பின்னரான சூழலில், மீளக்குடியேற்றம் நடைபெறுகின்ற சமூகமொன்றில், மீளெழுச்சி காணும் சமுதாயமொன்றில் கல்வியின் முக்கியத்துவம் நான் குறிப்பிட்டு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயமல்ல. மாறாக, எமது வடக்கு சமுதாயத்தின் ஒரேயொரு நம்பிக்கையாக இருப்பது கல்வி மாத்திரமே. அந்த வகையில் கல்விப்பணி செய்கின்ற அனைவரும் சிறப்பானவர்களே. அது மாத்திரமல்ல அவர்களுக்கு ஒரு மகத்தான பொறுப்பும் கடமையும் இருக்கின்றது. அதனடிப்படையில் வடக்கின் கல்விச் செயற்பாடுகளின்போது நாம் கவனிக்க வேண்டிய ஒரு சில விடயங்களை அடையாளப்படுத்துவது சிறப்பானதாக இருக்கும் என கருதுகின்றேன்.
இலங்கை நாட்டில் ஒரு தேசிய கல்விக் கொள்கை அமுலில் இருக்கின்றது. அது சர்வதேச அபிவிருத்தி நியமங்களுக்கு ஏற்ப உலக வங்கிஇ மற்றும் சர்வதேசிய நாணய நிதியம் என்பவற்றின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படுகின்றது. எனினும் அது அதீத விமர்சனங்களை எதிர்நோக்குவதுடன் சுதேசிய நியமங்களையும் அடைவுகளையும் உள்ளடக்கியதாக காணப்படவில்லை என்ற குறைபாடும் இருக்கின்றது.
எது எவ்வாறாயினும் வடக்கு ஒரு தனித்துவமான பூமியாகும். தனித்துவமான சமூக அமைப்பைக் கொண்டதுமாகும். எனவே வடக்கிற்கென தனியான கல்விக் கொள்கை குறித்து நாம் சிந்திக்கவும் செயலாற்றவும் வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
வடக்குஇ யுத்தத்தின் கோரப்பிடிகளுக்குள் சிக்கிய பிரதேசமாகும். எல்லாப் பிரதேசங்களும் யுத்தத்தினால் நேரடியாகப் பாதிக்கப்படவில்லை. ஒரு சில பிரதேசங்கள் நகர்ப் புறங்களாகவும் வசதி வாய்ப்புகள் உள்ள பிரதேசங்களாகவும், இன்னும் சில பிரதேசங்கள் பின் தங்கிய பிரதேசங்களாகவும்
இருக்கின்றன.எனவே பொதுவான நடைமுறைகள் எதிர்காலத்தில் சாத்தியப்படுமாயினும் குறிப்பாக தற்போது நிலைமைகளை சீர்செய்வதற்கு விஷேட தேவையுடைய பிரதேசங்களை
அடையாளப்படுத்தி ஒரு வலயமாகவும், ஏனைய பிரதேசங்களை மற்றுமொரு வலயமாகவும் அமைத்துக் கொள்வது கல்வியில் துரித வளர்ச்சியை பின் தங்கிய பிரதேசங்கள் பெற்றுக் கொள்ள வாய்ப்பாக அமையும் என நான் கருதுகின்றேன்.வடக்கின் ஆசிரியர்கள் குறிப்பாக யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள் இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் கடமையாற்றியிருக்கின்றார்கள். தற்போதும் கடமையாற்றுகின்றார்கள். அவர்களின் உச்சப் பயன்பாட்டை நாம் எமது மாகாணத்தின் கல்வித் தேவைகளுக்காக பயன்படுத்த முன்வர வேண்டும். அவர்களை நெறிப்படுத்துகின்ற செயற்திட்டமொன்றினை நாம் உருவாக்க வேண்டும். சுழற்சி முறையில் பின் தங்கிய மற்றும் நகர்ப்புறப் பாடசாலைகளில் அவர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு பொறிமுறையினை நாம் உருவாக்கினால் ஆசிரியர் பற்றாக்குறை என்னும் குறைபாட்டை எம்மால் நிவர்த்திக்க முடியும்.
ஆளுமை மிக்க ஆசிரியர்களாக எமது ஆசிரியர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும். மாணவர்களின் ஆளுமையில் தாக்கம் செலுத்தக்கூடிய ஆசிரியர்களாக எமது ஆசிரியர்களை வடிவமைப்பதற்கு போதுமான பயிற்சிகளை கல்வி அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என நான் இவ்விடத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.
கடந்த வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது நான் குறிப்பிட்ட அறநெறிப் பாடசாலைகள் விடயத்தில் கல்வி அமைச்சு கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலம் எமது சமூகத்தில் காணப்படுகின்ற கலசார சீரழிவுகளில் இருந்து மாணவர்களை தடுக்கின்ற ஒரு ஆரம்ப முயற்சியினை மதரீதியான போதனைகளின் மூலம் முன்னெடுக்க முடியுமாக இருக்கும். எனவே அதனையும் இங்கே வலியுறுத்துவதோடு சிறுபான்மை சமூகங்களின் வரலாறு, கலசாராம்இ பாரம்பரியம் போன்றன திட்டமிட்ட அடிப்படையில் சிதைக்கப்படுவதையும், குறிப்பாக மாணவர் சமூகத்தின் மீது நடாத்தப்படுகின்ற சிந்தனா ரீதியான ஆக்கிரமிப்புகளையும் களைவதற்கும், பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனவே இத்தகைய பொதுவான நன்மைகளை நிலைநாட்டுவதற்காக நாம் அரசியல் முரண்பாடுகளுக்கும் ஏனைய சமூக முரண்பாடுகளுக்கும் அப்பால் சென்று சிந்திக்க வேண்டியவர்களாகவும்இ செயலாற்றவேண்டியவர்களாகவும்
இருக்கின்றோம். குறிப்பாக கல்வித் துறையில் எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் இடம் தர முடியாது. எந்தக் கட்சிகளாக இருப்பினும் அவை தமது சொந்த நலன்களை அரங்கேற்றுகின்ற இடமாக கல்வித்துறையினை அமைத்துவிடக்கூடாது. அழுத்தங்களுக்கு உட்பட்டு கல்விச் சேவையில் சீரழிவுகளுக்கு எவரும் இடம் தரக்கூடாது எனவும் நான் தங்கள் எல்லோரிடமும் வினயமாக வேண்டி நிற்கின்றேன்.இறுதியாக நான் சார்ந்திருக்கின்ற முஸ்லிம் சமூகம் குறித்து ஒரு சில வார்த்தைகள் சொல்வது பொருத்தமானது என நினைக்கின்றேன்.
1990களின் பலவந்த வெளியேற்றத்தின் பின்னர் முஸ்லிம் சமூகம் தற்போது சிறுகச்சிறுக மீளக்குடியேறி வருகின்றது. பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மீளக்குடியேறும் முஸ்லிம் சமூகத்தின் கல்வித் தேவைகள் மிகவும் அடிப்படையானவை. அவற்றை நிறைவு செய்வதில் தங்களுடைய பங்களிப்புகள்
அத்தியாவசியமாகின்றது.அதுமட்டுமல்ல, இடம்பெயர்ந்த பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களை மையப்படுத்தி மன்னார் வலயத்தின் கீழ் 6 பாடசாலைகள் புத்தளத்தில் இயங்குகின்றன. அவற்றுக்கான வளப்பகிர்வானது மன்னார் வலயத்திற்கு இடையூறாக இருப்பின் அதனை தனி வலயமாக அமைத்து இன்னும் சிலகாலத்திற்கு இயங்குவதற்கு ஆவண செய்யவேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது. அத்துடன் வடமேல் மாகாணத்தில் தற்காலிக இணைப்புடன் கடமையாற்றுகின்ற ஆசியர்களையும் தொடர்ந்தும் அவ்விடங்களில் கடமையாற்றுவதற்கு அனுமதிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
எனவே மேற்படி விடயங்களை தாங்கள் அனைவரும் கவனத்தில் எடுத்துக்
கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.இவ்வாறான ஒரு சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமைக்கு கௌரவ கல்வி அமைச்சருக்கு மீண்டும் எனது நன்றியறிதல்களைத் தெரிவித்து விடைபெறுகின்றேன்.
நன்றி, வணக்கம்!
Published by

Leave a comment