கொழும்பு: மத்திய அரசாங்கத்துடன் இணக்கம் காணப்படும் விடயங்களில் பரஸ்பரம் விட்டுக்கொடுப்புகளுடன் இணைந்து செயற்பட வடமாகாண சபை முன்வந்துள்ளதாக நம்பகரமாத் தெரியவருகிறது. முரண்பாடுகள் ஏற்படின் அவற்றைப் பேச்சு வார்த்தை நடத்தித் தீர்த்து வைப்பதுடன் பிரச்சினைகளைப் பெரிதுபடுத்தாதிருக்கவும் இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதற்காக இரு தரப்பினரும் பரஸ்பரம் சில விட்டுக் கொடுப்புக்களை நல்லெண்ண அடிப்படையில் விட்டுக் கொடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வட மாகாண சபையின் முதல மைச்சர்சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து உரையாடியதன் பின்னர் வட மாகாண சபையின் செயற்பாடுகளில் ஒருவிதமான நெகிழ்வுப் போக்கைக் காணக்கூடியதாகவுள்ளது. முதலமைச்சரின் சந்திப்பைத் தொடர்ந்து தமிழகம் சென்றுள்ள தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடுதிரும்பியதும் அடுத்த வாரமளவில் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடவுள்ளார்.
இதனைக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உறுதி செய்துள்ளார். தமிழ்க் கூட்டமைப்பின் இந்த மனமாற்றம் குறித்து வடபகுதி மக்களும், புத்தஜீவிகளும் தமது திருப்தியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். இம்முடிவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்பவோ எடுத்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலமாகவே மாகாண சபை நிர்வாகத்தைத் திறம்பட நடத்த முடியும் என்பதே உண்மை எனவும் புத்திஜீவிகள் தெரிவித்தனர்.
– தினகரன்
Published by

Leave a comment