கல்முனை: கல்முனை மாநகர சபை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்ட அறிக்கை அமைச்சர் ஹக்கீமின் தலையீட்டை தொடர்ந்தே சரி என ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் மேற்படி அறிக்கை பிழையானது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக அக்கட்சி மேலும் தெரிவித்திருப்பதாவது,
கல்முனை மாநகர சபையில் உள்ள அதிகப்படியான உறுப்பினர்கள் மேயர் நிசாம் காரியப்பரினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தை நிராகரித்திருந்தார்கள். ஆனாலும் அது மேயரினால் உடனடியாக ஒத்தி வைக்கப்பட்டு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கல்முனைக்கு அழைக்கப்பட்டு சமரசம் செய்ததன் மூலம் வரவு செலவுத்திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் பிழையானது என கூறப்பட்ட மேற்படி வரவு செலவுத்திட்ட அறிக்கையின் பிழைகள் எதுவும் திருத்தப்படாமலேயே ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் கேலிக்கூத்தே வெளிக்காட்டப்பட்டுள்ளது.
அதே போல் மேற்படி வரவு செலலவுத்திட்டம் பிழையானது என எகிறிக்குதித்த பிரதி மேயர் சிராஸ் அது திருத்தப்படாமலேயே சரியானது என ஏற்றுக்கொண்டதன் மூலம் மீண்டும் தனது சிறு பிள்ளைத்தனமான அரசியலை வெளிக்காட்டியுள்ளார். ஏற்கனவே மேயர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என வீறாப்பு பேசிவிட்டு தடாலடியாக சரணடைந்தவர் இப்போது வரவு செலவுத்திட்ட விடயத்திலும் கேவலமாக சரணடைந்ததன் மூலம் தனக்கு அரசியலோ சமூக யதார்த்தமோ தெரியாத குழந்தை என்பதை காட்டியுள்ளார். இவ்வாறான அரசியல் தெரியாதவர்களுக்கு கட்சி என்பதற்காக மக்கள் வாக்களிப்பதனால் ஏற்படும் மோசமான நிலைகளே இவை.
அத்துடன் மேயர் நிசாம் காரியப்பரினால் மக்கள் வரவேற்பை பெறக்கூடிய வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்க முடியவில்லை என்பதும் வெளிச்சமாகியுள்ளது. ஒரு அறிக்கையை தயார் செய்ய முடியாதவர் எவ்வாறு கல்முனையின் வரவு செலவை நியாயமாக கவனிப்பார் என்பது சந்தேகத்துக்குரியதே.
ஆகவே மேற்படி வரவு செலவுத்திட்ட அறிக்கையை கல்முனையில் உள்ள சகல ஜும்ஆ பள்ளிவாசல்கள் மற்றும் கல்முனையை தளமாக கொண்டியங்கும் முஸ்லிம் மக்கள் கட்சிக்கும் அனுப்பி வைப்பதன் மூலம் மேற்படி அறிக்கை சரியானதா என்பதை பொது மக்களால் புரிந்து கொள்ள முடியும். இல்லாவிடில் இந்த அறிக்கை என்பது கல்முனை மாநகர ஆளுந்தரப்பு உறுப்பினர்களின் ஊழலுக்கு ஆதரவாக தயாரிக்கப்படுள்ளது என்பதே புரியப்பட்ட செய்தியாக இருக்கும்.
Published by

Leave a comment