மரபணு ஆய்வு கூடம் இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை – ரவூப் ஹக்கீம்

hakeemபழுலுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: நீதியமைச்சின் கீழுள்ள அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் மரபணு ஆய்வு கூடம் செயல்பட ஆரம்பிப்பது இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அண்மையில் நடைபெற்ற விஞ்ஞான நிபுணர்களுடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

பெலவத்தையில் அமைந்துள்ள அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் புதிய கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந் நிகழ்வில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் கூறியதாவது,

குற்றங்கள் புரிவோரை சரிவர அடையாளம் கண்டுகொள்வதில் கைவிரல் அடையாள பரிசோதனை நூறாண்டுகளுக்கு மேலாக முக்கிய இடத்தை பெற்றிருந்தது. இப்பொழுது டீ என் ஏ எனப்படும் மரபணு பரிசோதனை குற்றவாளிகளை திட்டவட்டமாக இனங் காண்பதில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் நிகழ்ந்த இடத்திலிருந்து கண்டெடுக்கப்படும் உரோமம், சிகரெட் போன்றவற்றின் எஞ்சிய பாகம், ஆடையில் படிந்துள்ள விந்து, பெண்ணின் யோனித்துவாரத்தின் திரவம் போன்றவற்றை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் குற்றம் இழைத்தவர்களை திட்டவட்டமாக கண்டு பிடிப்பது இதனூடாக சாத்தியமாகியுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரை டீ என் ஏ பரிசோதனை குற்றவியல் காரணங்களுக்காக 2002 ஆம் ஆண்டில் முதன் முறையாக நடைமுறைக்கு வந்தது. கடந்த பத்து ஆண்டு காலத்துக்குள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மரபணு பரிசோதனை பெரிதும் பயனளித்துள்ளது.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குழந்தையின் தாய் தந்தையரை சரிவர கண்டு பிடிப்பதில் சிக்கல் அல்லது சர்ச்சை ஏற்படும் பொழுது மரபணு பரிசோதனை மிகவும் பயனளித்துள்ளது. இலங்கையில் இதுவரை இவ்வாறு உரிய பெற்றோர் ஆறாயிரம் பேரை அடையாளம் காண்பதில் டீஎன்ஏ பரிசோதனை உதவியுள்ளது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை கடற்கோள் அனர்த்தத்தின் போது கல்முனைப் பிரதேசத்தில் பேபி (குழந்தை) 81 என்ற அபிஷேக் உடைய பெற்றோரை உரிய முறையில் சரிவர அடையாம் காண்பதில் மரபணுப் பரிசோதனை மிகவும் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.

அவ்வாறே மேல் நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிடியவின் படுகொலை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும் மரபணு பரிசோதனை உதவியுள்ளது. பிரதான குற்றவாளியின் வாந்தியை டீஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தியதன் மூலம் அது சாத்தியமாகியது.

பெரும் பரபரப்புக்குள்ளான றோயல் பார்க் இளம் யுவதியின் கொலைச் சம்பவத்தில் குற்றம் புரிந்த இளைஞனை திட்டவட்டமாக இனங்காண்பதற்கும் டீஎன்ஏ பரிசோதனை உதவியது. அண்மையில் மஹர கடவத்தை பிரதேசத்தில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் பெண்மணிகளின் சடலங்கள் மீதான விவகாரத்திலும் டீ என் ஏ பரிசோதனை பயன்படுத்தப்பட்டது.

யுத்தம் நிலவிய காலத்தில் இலங்கையில் பரவலாக படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கொலையுண்டோரின் உடற் பகுதிகளை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தியதன் மூலம் சடலங்கள் யாருடையன என்பன கண்டறியப்பட்டது. ஹபரணை, திகம்பத்தனவில் எல் ரீ ரீ ஈ தாக்குதலில் பலியான 70 கடற்படையினரின் உடற்கூறுகளை அவர்களின் நெருங்கிய உறவினர்களின் குருதியை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி அவை யாருடையவை என அடையாளம் காணக் கூடியதாக இருந்தது.

வழக்குகளின் அறிக்கைகளை துரிதப்படுத்துதற்கும், வழக்குத் தாமதங்களை வெகுவாக குறைப்பதற்கும் மரபணு பரிசோதனை அதிகம் உதவுகின்றது. இதுவரை தனியார் நிறுவனம் மேற்கொண்ட மரபணு பரிசோதனை எனது அமைச்சின் கீழ் வரும் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் 2014 ஜனவரி 17 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படும் என்ற நற்செய்தியை கூறுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்

ஊடகச் செயலாளர்.

Published by

Leave a comment