நரேந்திர மோடி பிரதமரானால் இந்தியாவுக்கு பேரழிவு: மன்மோகன்சிங்

Prime Minister, Dr. Manmohan Singh– SHM

டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டுக்குப் பேரழிவுதான் ஏற்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் சாடியுள்ளார். டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் நடத்திய இந்த செய்தியாளர்கள் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்பட்டது.

இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின் போது தொடக்கத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விவரித்தார். அப்போது தாம் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கமாட்டேன் என்பதையும் தெளிவுபடுத்தினார். பின்னர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது நரேந்திர மோடி பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. நரேந்திர மோடி குறித்து பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்த கருத்துகள்: நாட்டின் அடுத்த பிரதமரையும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான் தேர்ந்தெடுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டுக்குப் பேரழிவுதான் ஏற்படும்.

என்னைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதா கட்சியினர் பிரசாரம் செய்வதைப் போல நான் பலவீனமான பிரதமர் அல்ல. என்னைப் பொறுத்தவரையில் நரேந்திர மோடியைப் போல ஆயிரக்கணக்கானோரை பலிவாங்கியவன் அல்ல.

அகமதபாத் தெருக்களில் அப்பாவி பொதுமக்களைக் கொலை செய்ய அனுமதித்தது தமது திறமை என மோடி நம்பிக்கைக் கொண்டிருக்கிறார். அதையெல்லாம் ஏற்க முடியாது. அப்படிப்பட்ட ஒருவர் பிரதமராவதை நாடும் விரும்பாது. நரேந்திர மோடி பிரதமராகும் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றார்.

Published by

Leave a comment