நாவிதன்வெளி: நாட்டின் எதிர்காலம் என்பது இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலேயே தங்கியிருப்பதால். எங்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், மேலாதிக்க வாதம் என்பது ஒரு பிரச்சினையாக இருந்த போதிலும், அதனை வெற்றிகொள்வது எவ்வாறு என்பதை உரிய முறையில் அணுகுவதை விடுத்து குறுகிய நோக்கத்தில் அதனைக் கையாளாமல் பெருந்தன்மையோடு சில விடயங்களை அணுக வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறினார்.
இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் செவ்வாய்க்கிழமை (31) மத்திய முகாம், பிரதான வீதி ஆலையடிச் சந்தியில் நடைபெற்ற பிரண்ட்ஸ் விளையாட்டு கழகத்தின் 5 ஆவது ஆண்டு விழா அதன் ஸ்தாபகத் தலைவரும், முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச கொள்கை பரப்பு செயலாளருமான ஏ.எம். மௌருப் தலைமையில் நடைபெற்ற பொழுது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
அவர் அங்கு உரையாற்றும் போது மேலும் தெரிவித்தவையாவன,
இது பலவிதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற ஒரு பிரதேசமாகும். 1952 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கல்ஓயா திட்டத்தில் இதுவரை இரண்டு தலைமுறைகள் இங்கு உருவாகியிருக்கலாம். இந்த காலப்பகுதியில் புத்திஜீவிகளையும், கல்விமான்களையும் இந்த பிரதேசம் பெற்றுத் தந்திருக்கிறது.
கடந்த மூன்று தசாப்த காலத்திற்குள் தலைதூக்கியிருந்த வன்முறை அரசியலின் தாக்கம் இப் பகுதியிலும் வெகுவாக பிரதிபலித்திருந்தது. ‘ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் நான் ஈடுபட்டிருந்த 25 ஆண்டு காலத்திற்குள் இதனை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். வன்முறை அரசியலின் இரண்டு மோசமான சம்பவங்களை நான் இங்கு நேரடியாகவே வந்து கண்டிருக்கின்றேன்.
விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த நிலையிலும், பேச்சுவார்த்தைகளில் இருந்த அவர்கள் விலகியிருந்த நிலையிலும் இங்கு முழு கடைத்தெருவையும் தீயிட்டுக் கொழுத்தி பாரிய நாசத்தை உண்டு பண்ணியதை நான் நேரில் கண்டேன்.
இந்த மக்களுடைய கஷ்ட வாழ்க்கையின் மத்தியில் அவர்களது பொருளாதாரத்தை இலக்கு வைத்து, தங்களுடைய குறுகிய நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக இலக்கு வைத்து செயல்பட்ட நிலைமை மாறி இன்று மூன்று சமூகங்களுக்கு இடையிலும் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டத்திலும், துரதிருஷ்ட வசமாக சில சிக்கல்கள் சம்பவிக்கின்றன. இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்துவதில் நாங்கள் மிகவும் இதய சுத்தியுடன் நடந்து கொள்கின்றோம்.
ஏனென்றால், இந்த நாட்டின் எதிர்காலம் என்பது இனங்களுக்கிடையிலான ஐக்கியத்திலேயே தங்கியிருக்கிறது. எங்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு நாங்கள் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்.
மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஓர் அங்கமாக இருந்த – இருதுருவங்களாக இருந்த நாவிதன்வெளியையும், இறக்காமத்தையும் இரண்டு பிரதேச செயலகங்களாக வேறாக பிரித்துக்கொடுத்தார்.
இந்த நாவிதன்வெளிப் பிரதேசத்தை அண்டியுள்ள எல்லா குக்கிராமங்களிலும் வசிக்கும் முஸ்லிம்களுக்கு ஒரு சிறிய சவாலாக அது மாறினாலும் கூட, பெருந்தன்மையோடு முடிவுகளை காண வேண்டும் என்பதற்காக மக்கள் அதற்கு இணங்கினார்கள்.
மேலாதிக்க வாதம் என்பது எங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருந்தாலும், மேலாதிக்க வாதத்தை வெற்றிகொள்வது எவ்வாறு என்பதை உரிய முறையில் அணுகுவதை தவிர, குறுகிய நோக்கத்தில் அதனை நாங்கள் கையாள முடியாது. பெருந்தன்மையோடு சில விடயங்களை அணுக வேண்டிய அவசியம் இருக்கின்றது.
நாவிதன்வெளி பிரதேச சபையின் ஊடாக முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணுகின்ற ஓர் அவசியம் இருப்பதை என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகின்றது.
இதில் நான் மிகவும் திட்டவட்டமான நிலைப்பாட்டில் இருக்கிறேன். அடுத்த இரண்டு மாத காலத்திற்குள் நாவிதன்வெளி பிரதேச சபையில் ஓர் நடமாடும் சேவையை எனது நேரடிக் கண்காணிப்பில் நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை நான் மேற்கொண்டுள்ளேன். அந்த நடமாடும் சேவையில் எங்கள் கட்சியை சேர்ந்த எல்லாப் பாராளுமன்ற உறுப்பினர்களையும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களையும், மாவட்டத்திலுள்ள எங்களது ஏனைய பிரதேச சபைகளின் உறுப்பினர்களையும் ஈடுபடுத்த நான் திட்டமிட்டுள்ளேன். அதில் இப் பிரதேசத்தில் வாழும் மக்களது தேவைகளை நிறைவேற்றுவதில் முழுக் கவனமும் செலுத்தப்படும். எல்லா திணைக்கள அதிகாரிகளையும், மாவட்டத்திலுள்ள ஏனைய பிரதேசச் செயலாளர்களையும் அழைத்து இதனை செய்யவிருக்கிறோம்.
காணிப்பிரச்சினைகள் நிறையவுள்ளன. அவ்வாறே ஏனைய வாழ்வாதார பிரச்சினைகளும் உள்ளன. அரசியல்வாதிகளை தேடி பொது மக்கள் வரவேண்டிய நிலைமையை மாற்றி, மக்களைத் தேடி நாங்கள் சென்று அவர்களது அவசிய தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுத்தப்படும்.
விவசாயத்துறை சம்பந்தமான ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. மாகாண விவசாய, கால்நடை, மீன்பிடி, சுற்றாலாத்துறை அமைச்சு கூட எங்களது பொறுப்பில் இருக்கின்றது. மாகாண சுகாதார அமைச்சும் எங்களிடமே இருக்கின்றது. ஆனால், மாகாண சுகாதார அமைச்சர் நான் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்திற்கு வருகை தராதது ஒரு தவறான காரியமென என்னிடம் சுட்டிக்காட்டப்பட்டது. 5 ஆம் கொலனியில் நான் அதிதியாக கலந்து கொண்ட இவ்வாறான ஒரு நிகழ்விலும் அவர் கலந்துகொள்ளாததை அந்த மேடையிலும் குறிப்பிட்டார்கள்.
மத்திய முகாம் வைத்தியசாலையின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றதென என்னிடம் எடுத்துக் கூறப்படும் பொழுது எங்களுக்கு வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது. குறைந்த பட்சம் அவர் வைத்தியசாலையை பார்வையிட்டாவது இருக்க வேண்டும். எனவே அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் இந்த நடமாடும் சேவையில் மாகாண சுகாதார அமைச்சரையும் முக்கியமாக பங்குகொள்ள வைக்க எண்ணியுள்ளேன். அதற்கான பணிப்புரையை நான் விடுக்கவுள்ளேன்.
சில விடயங்களை சாதிப்பதானால், கட்டுக்கோப்பான நிலைக்கு இக் கட்சியை கொண்டுவரவில்லையென்றால், மக்களின் எதிர்ப்பார்ப்புகள் எவற்றையுமே இந்தக் கட்சியினால் தீர்க்க முடியாது என்ற மனப்பதிவு ஏற்பட்டுவிடும் ஆபத்து நிலவுகின்றது.
நாவிதன்வெளி பிரதேச சபையின் எங்களது கட்சி உறுப்பினர்கள் இருவர் இடம்பெற்றிருக்க வேண்டியிருந்த நிலையில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர் ஒரேயொருவரைக் கூட இந்தக் கூட்ட மேடையில் காணமுடியாதிருப்பது மிகவும் விசனிக்கத்தக்கது.
இன்று காலையில் எங்களது கட்சியின் மாவட்ட மேல்மட்ட உறுப்பினர்கள் தற்போதைய கள நிலைவரத்தின் யதார்த்தத்தை பிரதேச சபையின் எமது உறுப்பினருக்கு உணர்த்தினோம். சில விடயங்கள் தொடர்பில் அவர் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என சில அறிவுறுத்தல்களை அவருக்கு வழங்கினோம்.
அந்த அறிவுறுத்தல்களை மீறி நடக்கின்ற நிலைப்பாட்டில் அவர் இருக்கிறார் என்பதை காணும் பொழுது நாங்கள் மனவேதனைப்படுகிறோம். பிரதேச அபிவிருத்தி சம்பந்தமான விடயங்களை காரணங்களாக காட்டுவதன் மூலம் இரண்டு இனங்களுக்கிடையிலான பிரச்சினையாக அது வந்துவிடக் கூடாது. இரண்டு சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ‘ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பன எங்களுக்கிடையிலான பிரச்சினைகளை சுமூகமாக பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். தனிப்பட்டவர்கள் தன்னிச்சையாக அவ்வாறான விடயங்களில் முடிவுகளை மேற்கொள்ளாமல் கூட்டாக தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
அந்த அடிப்படையில் காலையில் இருந்து கட்சியின் அம்பாறை மாவட்ட மேல்மட்;ட உறுப்பினர்கள் பலர் தம்பி தஜாப்தீன் உடன் கதைத்தோம். ஆனால் எங்களுக்கு வாக்குறுதி அளித்திருந்த நிலையில் இன்று பிற்பகல் அதற்கு மாற்றமாக அவர் பிரதேச சபைக் கூட்டத்தில் பேசினார் என்பதை எங்களது கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி, எம்.பி யும், நிலைமையை கண்காணிப்பதற்காக நாம் அங்கு அனுப்பி வைத்த மாகாண சபை உறுப்பினர் ஜெமீலும் நாவிதன்வெளி பிரதேச சபையில் அவர் நடந்து கொண்ட விதத்தை என்னிடம் கூறினார்கள்.
ஆகவே மசூராவின் அடிப்படையில் நாங்கள் எங்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்தோம். அதாவது கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அவரை இடைநிறுத்துவது என்ற தீர்மானத்திற்கு நாங்கள் வந்தோம்.
கட்சியின் உறுப்பினராக இருக்கின்ற போது தலைமையின் கட்டுப்பாட்டுக்கு அமைய அவர் செயல்படுவாராக இருந்தால், அதனை எந்தவிதத்திலும் அங்கீகரிக்க முடியாது என்ற காரணத்தினால் மிகவும் மனவேதனையுடன் அவரை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்துவதற்கு திட்டவட்டமான முடிவுக்கு நான் வந்துள்ளேன்.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நாவிதன்வெளி பிரதேச சபை கூட்டத்தில் கட்சியின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர் செயல்படவில்லையென்றால், அவருக்கு எதிரான குற்றப்பத்திரத்தை தயாரித்து, உரிய விசாரணை நடாத்தி அதன் முடிவில் அவரை கட்சியில் இருந்து நீக்க கூடிய நிலைமை ஏற்படுமென எச்சரிக்கின்றேன்.
இந்த இயக்கத்தை கட்டி வளர்க்கின்ற முயற்சியின் ஓர் அங்கமாகத்தான் சூசகமாக, இதனை ஓர் அரசியல் சார்பான விடயமாக நாங்கள் செய்யாவிட்டாலும், இந்த பிரதேசத்தில் இருந்து தங்களது அரசியலை நிலைநிறுத்திக்கொண்டிருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தினர் எங்களை புறக்கணித்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கூட்டத்தில் இதனை என்னால் கூறாமல் இருக்க முடியாது.
இப் பிரதேச புத்திஜீவிகளையும், கல்விமான்களையும், பல்வேறு துறைகளில் முன்னேறி வருபவர்களையும் பாராட்டுவதோடு சின்னஞ்சிறு சிறார்களையும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றச் செய்து நடாத்தும் கூட்டத்தை மிகச் சிறப்பான ஏற்பாடு செய்து நடாத்தியமைக்காக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி. ஹஸன் அலி, எச்.எம்.எம். ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல், ஏ.எல். தவம், ஏ.எல்.எம். நஸீர், நிந்தவூர் பிரதேச சபைத் தலைவர் தாஹிர், அட்டாளைச் சேனை பிரதேச சபைத் தலைவர் அன்ஸில், தொழில் அதிபர் சித்திக் நஸீர், பிறை எப்.எம். வானொலி அப்துல் கையூம், நாவிதன்வெளி முஸ்லிம் காங்கிரஸ் இணைப்பாளர் நிஸார் ஹாஜியார் உட்பட ஊர் மக்கள் அநேகர் கலந்து கொண்டனர்.
டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
சிறி.ல.மு.கா. தலைவர் அமைச்சர்
ரவூப் ஹக்கீம் அவர்களின் ஊடக ஆலோசகர்
Published by


Leave a comment