கொழும்பு: தனது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை விநியோகிக்கும் குடும்ப ஒன்றிணைவு நிகழ்வொன்றை ஹியுமன் கெப்பிட்டல் சொலூஷன்ஸ் (HCS) நிறுவனத்தின் நலன்புரிச் சங்கம், ஜா-எல, குருகே நேச்சர் பார்க் பகுதியில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
தொடர்ச்சியான 5ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு, நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆர்.ஜி.ரூபசிங்கேன்டிஸ் அவர்களின் சிந்தனை வெளிப்பாட்டில் தோற்றம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வின் நோக்கம், ஊழியர்களின் பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளுக்கு உதவிகளை வழங்குவதன் மூலமாக ஊழியர்களின் குடும்ப வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் கம்பனியின் நோக்கத்தை நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளது.
இந்த திட்டத்துக்கு அமைவாக, நிறுவனம் அப்பியாசக் கொப்பிகள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை பொதிகள் போன்றன பாடசாலை செல்லும் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கையளிக்கப்பட்டிருந்தன. தரம் 1 முதல் 13 வரை பயிலும் HCS நிறுவனத்தின் ஊழியர்களின் பிள்ளைகள் சுமார் 750 பேருக்கு இந்த திட்டத்தினூடாக பாடசாலை உபகரணங்கள் கையளிக்கப்பட்டிருந்தன.
5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மற்றும் க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர் தரம் ஆகிய பரீட்சைகளில் சிறப்பு சித்தியெய்திய தெரிவு செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு அவர்களின் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் விசேட புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் குழந்தை நரம்பியல் சிகிச்சை நிபுணரான வைத்தியர். அனுருத்த பாதெனிய கருத்து தெரிவிக்கையில், ‘இது போன்ற செயற்பாடுகளின் மூலமாக தமது ஊழியர்களின் பிள்ளைகளின் கல்வி செய்றபாடுகளை ஊக்குவிக்கும் HCS நிறுவனத்தின் நடவடிக்கைகளை நான் மிகவும் போற்றுகிறேன். இந்த செயற்பாடுகளின் மூலமாக நிறுவனத்தினதும் ஊழியர்களிடையேயினதுமான உறவு மேம்படுத்தப்படுகிறது. அத்துடன், நாட்டின் எதிர்கால சந்ததியான பிள்ளைகளின் எதிர்காலத்துக்கும் சிறந்த பங்களிப்பாக இது அமைகிறது’ என்றார்.
வைத்தியர் பாதெனிய தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்க முறைகள், ஆரோக்கியமான நித்திரை வேளைகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் கல்வி செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான சிறந்த நேரத்தை இனங்காண்பது போன்ற பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்த கருத்துக்களை முன்வைத்திருந்தார். மேலும் வளரும் பராயத்தில் மேலதிக செயற்பாடுகளில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் விளக்கியிருந்தார்.
மேலும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதிநிதியான இந்திக ஜயவர்தன இந்த நிகழ்வில் பங்கேற்று, இன்றைய காலகட்டத்தில் காணப்படும் துரதிர்ஷ்ட நிகழ்வாக சிறுவர் தொழிலாளர்கள் நிலை தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தார். அத்துடன், பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தவிர்ப்பதன் முக்கியத்துவம் குறித்த விளக்கங்களையும் அவர் தெரிவித்திருந்தார்.
குடும்ப அங்கத்தவர்களுக்கு மதிய உணவு பரிமாறப்பட்டிருந்ததுடன், புகழ்பெற்ற மெஜிக் வல்லுநரின் மெஜிக் வித்தை நிகழ்வும் காண்பிக்கப்பட்டிருந்தது. மினி மிருகக்காட்சிசாலைக்கான விஜயம், ஜுராசிக் பார்க் மற்றும் சரதியல் புகையிரத சவாரி ஆகியனவும் பூங்கா பகுதியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வை தொடர்ந்து, தென் மாகாணத்தை சேர்ந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு பாடசாலை உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வொன்று ஹம்பாந்தோட்டை நகரில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கான அனுசரணையும் HSC நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டிருந்தது.
புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை புத்தக பொதிகள் ஆகியவற்றுடன் புலமைப்பரிசில்களும் தென் மாகாணத்தைச் சேர்ந்த ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டிருந்தன.
Published by

Leave a comment