ஹெரோயின் ரக போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார முனசிங்க உட்பட ஐவர் கைது

300px-Arrest.svg[1]கொழும்பு: ஹெரோயின் ரக போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார முனசிங்க உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மனைவியும், குடு வியாபாரத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ இல்லத்திலுள்ள அலுமாரியில் மறைத்துவைக்கப் பட்டிருந்த நிலையில் இருந்த 42 கிராம் எடையைக் கொண்ட ஹெரோயின் ரக போதைப் பொருளையும், ஒரு இலட்சத்து 81 ஆயிரம் ரூபா பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் பொறுப்பதி காரியின் மனைவியை தவிர பொறுப்பதிகாரி உட்பட நான்கு சந்தேக நபர்களையும் புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தி ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை நடத்த பொலிஸார் நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளதாகவும் நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற போதைப் பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் ஒன்று நேற்று முன்தினம் (31ம் திகதி) கிடைத்துள்ளது. இதனை யடுத்து விசாரணைகளை ஆரம்பித்த விசேட பொலிஸ் குழு, குடு விற்பனையில் ஈடுபட்டு வரும் வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் பெண் ஒருவரும் அடங்குவார். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது ஹெரோயின் விற்பனைதொடர்பில் இடைத் தரகராக செயற்பட்டு வந்த நபர் ஒருவர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவரையும் கைது செய்த பொலிஸார் அவரிடமும் விரிவான விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இடைத்தரகறாக செயற்பட்ட சந்தேக நபர் வழங்கிய வாக்கு மூலத்தின் படி மேற்படி பெண்ணை அனுப்பி 1 இலட் சத்து 50 ஆயிரம் ரூபாவை கொடுத்து முதலாவது ஒரு தொகை போதைப் பொருளையும் மற்றைய வரை அனுப்பி 30 ஆயிரம் ரூபா கொடுத்து இரண்டாவது ஒரு தொகை போதைப் பொருளையும் பொலிஸ் பொறுப்பதிகாரியிடமிருந்து பெற்றுக் கொண்டதாகவும் இந்த விற்பனை நடவடிக்கைக்கு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் தொடர்பு உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்த திடுக்கிடும் தகவல் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் உடனடியாக பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவை அடுத்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரிடம் (சி.சி.டி.) இந்த விசாரணை நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சி.சி.டியின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நுவன் வெதசிங்க தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் வெல்லம்பிட்டியிலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன் அங்குள்ள அலுமாரியிலிருந்து 42 கிராம் எடையுள்ள ஹெரோயினையும் 1 இலட்சத்து 81 ஆயிரம் ரூபா பணத்தையும் மீட்டெடுத்துள்ளனர்.

அத்துடன் போதைப் பொருளை அருகில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார முனசிங்கவை கைது செய்துள்ளனர். இதேவேளை இந்தச்சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்த வேண்டியுள்ளதால் சந்தேக நபரான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை புதுக்கடை நீதிமன்றில் நேற்றுக் காலை ஆஜர்படுத்திய பொலிஸார் ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து தொடர்ந்தும் விசாரணை நடத்த அனுமதிபெற்றுள்ளனர்.

இது ஹெரோயின் அல்ல மாறாக ஒருவகை மூலிகை என்றும் இதனால் தான் இதனை அருகில் வைத்திருந்ததாகவும், பல்வேறு சோதனை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டவை என்றும் பொறுப்பதிகாரி தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் பொறுப்பதி காரியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டவை உண்மையில் ஹெரோயினா மூலிகையா என்பன தொடர்பில் பகுப்பாய்வு நடத்தும் பொருட்டு அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அதன் மாதிரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் பகுப்பாய்வு அறிக்கையில் ஹெரோயின் என உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட அதிகாரியை சேவையிலிருந்து நீக்கவும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எந்த தரத்தில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக தராதரமின்றி நடவடிக்கை எடுப்பதே பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோனின் இலக்கு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பொலிஸ் பொறுப்பதிகாரி இம்மாதம் 10ம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் நடைபெறவிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதவிக்கான தெரிவும் பரீட்சைக்கு தோற்ற இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த ஹெரோயின் பொதி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மனைவியிடமே கொடுக்கப்பட்டு அவர் மூலம் அலுமாரியில் வைக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து நேற்றுக் காலை அவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் பொறுப்பதிகாரியின் மனைவி பெண் பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையாற்றி ஓய்வுபெற்றவராவார் இவர் இந்தப் பொதியை தெரிந்து எடுத்து வைத்தாரா அல்லது தெரியாமல் எடுத்து வைத்தாரா என்பன தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பல கோணங்களில் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.TK

Published by

Leave a comment