மொஸ்கோ: ரஷ்யாவின் வோல்கோகிராட் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் தற்கொலைப்படைத் தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். வடக்கு காகாஸஸ் பகுதியில், கடந்த 3 ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய குண்டுவெடிப்புச் சம்பவம் இது என்று ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் தெற்கு ரஷ்யாவில் கடந்த 3 நாட்களில் நடந்த 2வது தாக்குதல் இது. சமீபத்தில்தான் சோச்சி என்ற நகரில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருந்தனர் என்பது நினைவிருக்கலாம்.
வோல்கோகிராட் ரயில் நிலையத்தின் நுழைவாயிலுக்கு வந்த பெண் தற்கொலைப்படைத் தீவிரவாதி, அங்குள்ள மெட்டல் டிடெக்டர் கருவி முன்பு நின்றபடி தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பில் ரயில் நிலையத்தின் முகப்புப் பகுதி சேதமடைந்து போனது. வோல்கோகிராட், சோச்சி என்ற வட கிழக்கு நகரிலிருந்து கிட்டத்தட்ட 690 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நகரில்தான் பிப்ரவரி 7ம் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ளன.
இந்தப் போட்டியை அதிபர் புடின் தனது கெளரவப் பிரச்சினையாக கருதுகிறார். இந்த நிலையில்தான் ரயில் நிலையக் குண்டுவெடிப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a comment