PMGGயின் வருடாந்த இலவச அப்பியாசக் கொப்பி விநியோகம் 2014ம் ஆண்டு 2ம் தவணைக்கு மாற்றம்

PMGG-Logo[1]– PMGG ஊடகப்பிரிவு

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கல்விப் பிரிவு மற்றும் சமூக சேவைப்பிரிவு என்பன இணைந்து  வருடாந்தம் நடைமுறைப்படுத்தி வருகின்ற இலவச அப்பியாசக் கொப்பி விநியோகமானது இம்முறை டிசம்பர் மாதத்தில் இடம்பெறமாட்டாது என்பதனை கவலையுடன் அறியத்தருகின்றோம்.

 

இவ் இலவச அப்பியாசக்கொப்பி விநியோகமானது கடந்த 4வருடங்களாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் வறிய நிலையிலுள்ள ஏழை மாணவர்களுக்கு வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் பாடசாலை உபகரணங்களை தமது பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதில் வசதி குறைந்த பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சுமைகளைக் குறைப்பதற்கான ஒரு பங்களிப்பாகவே நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இவ் இலவச அப்பியாசக்கொப்பி விநியோகத்தினை மேற்கொண்டு வருகின்றது.

 

கடந்த 2009ம் ஆண்டு இத்திட்டம் PMGGயினால் ஆரம்பிக்கப்பட்டபோது அவ்வாண்டில் தெரிவு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு இலவச அப்பியாசகொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இத்திட்டத்தின் மூலம் 2010ம் ஆண்டில் 5000 மாணவர்களும், 2011ம் ஆண்டில் 8000 மாணவர்களும், 2012ம் ஆண்டில் 12000 மாணவர்களும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டது.

 

கடந்த 2011ம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்டம் தழுவியதாக மேற்கொள்ளப்பட்டு வந்த இவ் இலவச அப்பியாசக்கொப்பி விநியோகமானது கடந்த ஆண்டில் திருகோணமலை மாவட்டம் மற்றும் கொழும்பின் பின்தங்கிய பகுதிகளில் வாழுகின்ற மாணவர்களும் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்டதோடு முஸ்லிம் மாணவர்கள் மாத்திரமல்லாது தமிழ்,  சிங்கள மாணவர்களும் பயன்பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

இவ்வருடம் எமது இயக்கத்தின் விரிவு படுத்தப்பட்ட அரசியல் செயற்பாடுகளில் கூடுதலான பொருளாதாரப் பங்களிப்புக்களைச் செய்யவேண்டி இருந்ததன் காரணமாக அடுத்த ஆண்டிற்கான இவ் இலவச அப்பியாசக்கொப்பி விநியோத்தினை வழமைபோன்று வருட ஆரம்பத்தில் மேற்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றோம்.

 

எனவே, அடுத்த ஆண்டிற்கான இலவச அப்பியாசக்கொப்பி விநியோகத்தினை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2014ம் ஆண்டின் பாடசாலை 2ம் தவணைக் காலப்பிரிவில் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றோம்.

வருட ஆரம்பத்தில் இவ்விநியோகத்தினை மேற்கொள்ள முடியாமல் போனதையிட்டு வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு திட்டமிட்டபடி அடுத்த ஆண்டில் இலவச அப்பியாசக்கொப்பி விநியோகத்தினை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான உதவிகளை பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.

Published by

Leave a comment