– CMM. அமானி
காத்தான்குடி: அண்மையில் காலஞ்சென்ற மூதறிஞர் அஷ்ஷெய்க் ரியாழ் கபூரி அவர்களின் மறைவையொட்டி காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா அதன் ஆழ்ந்த மனக்கவலையைத் தெரிவித்து ஓர் அனுதாபச் செய்தியை அறிக்கையிடுவதென 23.12.2013ல் இடம்பெற்ற செயற்குழு அமர்வில் தீர்மானிக்கப்பட்டது.
அறிவியலில் மட்டுமின்றி ஆன்மீகத்துறையிலும் அரும்பணியாற்றி உலமா சமூகத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் ரியாழ் ஹஸ்ரத். அவர்கள் நீண்ட காலம் இஸ்லாம் பாட பரிசோதகராகக் கடமையாற்றி மூத்த உலமாக்களின் முழு அளவிலான அன்பையும் அபிமானத்தையும் பெற்றவர்.
சமூகப்பணியே தனது இலட்சியம் என்ற தோரணையில் அகில இலங்கை ஜம்இய்யாவை வளர்த்தெடுப்பதில் அதீத ஆர்வம் கொண்டார். அவர் ஜம்இய்யாவின் செயலாளராக பல வருடங்கள் (பாரபட்சமின்றி) அனைத்து உலமாக்களையும் ஒரே கயிற்றில் பிணைத்துக் கொண்டு செயல்பட்டதால் நாடளாவிய பேர்புகழுக்கு இலக்கானார்.
அவர் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவை அதிகம் நேசித்தார். அதனால்தான் இஸ்லாத்துக்கு முற்றிலும் மாறுபட்ட அத்துவைதம், பயில்வானிசம், காதியானிசம் முதலியன தலைதூக்கிய வேளையில் காத்தான்குடி ஜம்இய்யாவுக்கு பக்க பலமாகயிருந்து போராட்டத்தில் பங்கு பற்றினார். அதுவுந்தவிர, ‘ஏகத்துவத்தில் ஊடுருவல்’ எனும் நூலுக்கு கருவாகவும் குருவாகவும் பணியாற்றியதோடு, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சார்பில் அதை வெளியிடவும் அனுசரணை வழங்கினார்.
இத்தகைய மாமேதையின் மறைவு உலமா சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றால் அது மிகையாகாது. எங்கு சென்றாலும் ஜம்இய்யாவின் ஆவணங்களை கைப்பையிலே சுமந்து சென்று அவ்வப்போது சாதனை புரிந்த மகான் ரியாழ் ஹஸறத்தின் ஆத்ம சாந்திக்காகவும், அவரது மனைவி மக்கள் குடும்பம்எல்லோரினதும் சகிப்புத்தன்மைக்காகவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Published by

Leave a comment