7500 ஆண்டுகளில் இந்தோனேசியாவைத் தாக்கிய 11 சுனாமிகள்!

sunami– SHM

ஜகார்த்தா: கடந்த 7500 ஆண்டுகளில் இந்தோனேசியாவை 11 கடும் சுனாமிகள் தாக்கி இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு முனையில் கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி 9.1 அதிர்வெண் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து சுமார் 100 அடி உயரத்திற்கு எழுந்த சுனாமி அலைகளின் கோரத் தாண்டவத்தால் இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த 230,000 மக்கள் செத்து மடிந்தனர். இதில் பாதி பேர் இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள். 

சுனாமி நினைவு நாளின் 9வது ஆண்டு. இந்நிலையில் சமீபத்தில் இந்தோனேசியாவில் உள்ள குகை ஒன்றை ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளார்கள், இதுவரை அங்கு 11 சுனாமிகள் நடந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில், பண்டா ஏசஹ் கடற்கரை அருகே உள்ள 3 மீட்டர் ஆழம் கொண்ட சுண்ணாம்பு குகை ஒன்றை சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அந்தக் குகை புயலால் பாதிக்கப்படாதவாறு பாதுகாப்பாகவும், அதேசமயம் பேரலைகள் மட்டுமே உள்ளே நுழையும் வகையிலும் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1000 ஆண்டுகளுக்கு முன் உள்ள மணற் படிவங்களை, மட்டைகளை அடுக்கி வைத்தது போன்று கேக் வடிவில் காணப்படும் இக்குகையிலுள்ள மணற்படிவங்கள், சிப்பி ஓடுகள், எஞ்சியுள்ள நுண்ணிய உயிரினங்களின் மாதிரி சேகரிக்கப் பட்டது.

tsunami

பின்னர், அவற்றை கதிரியக்கக் கரிம ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, 2004க்கு முன் அப்பகுதியில் 11 முறை சுனாமி ஏற்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2800 ஆண்டுகளுக்கு முன் பேரழிவு ஏற்படுத்திய சுனாமி தாக்கியதாகவும், சென்ற 500 ஆண்டுகளில் 4 சுனாமிகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

1393 மற்றும் 1450 ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய அசுர பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் குகையைத் தாக்கிய சுனாமி அலைகளின் உயரம் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பல நூற்றாண்டுகளாக சுனாமியின் தாக்கம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருப்பதால், அதில் சிக்கி கோடிக்கணக்கான மக்கள் பலியாகியிருக்கலாம் என்ற அதிர்ச்சி யூகங்களையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சியாளர் ரூபின் கூறும்போது,

‘2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதால் இன்னும் 500 வருடங்களுக்கு சுனாமி வர வாய்ப்பில்லை என உறுதியாக கூற முடியாது, உடனடியாக பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறமுடியாது’ என்றார்.

மேலும், 500 வருடங்களுக்கு முன் சுனாமி ஏற்பட்டதை உணர்ந்தவர்கள் யாரும் இல்லாததால் 2004 ஆம் ஆண்டு பேரிழப்பை சந்திக்க நேர்ந்ததாகவும், ஆனால் 2004-க்குப் பிறகு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் சுனாமி ஏற்படப்போகும் வாய்ப்பை முன்னதாக அறிந்து கொள்ள முடியும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கதிரியக்கக்கரிம ஆய்வு செய்ததில் எவ்வளவு அதிர்வெண் கொண்ட பூகம்பங்கள் இதற்கு முன் ஏற்பட்டது என்பதை அறிய முடிந்ததென்றும், ஆனால் சுனாமியின் அளவை அறியமுடியவில்லை என்றும் மற்றொரு ஆராய்ச்சியாளர் கேத்ரின் மொனெக்கெ தெரிவித்துள்ளார்.

இவ்வாராய்ச்சியில் ஈடுபட்ட சிங்கப்பூர் குரூப் என்ற ஆராய்ச்சி குழுமத்தின் தலைவரான புவியியல் வல்லுனர் கெர்ரி சீஹ் கூறுகையில்,

‘இன்னும் பல பத்தாண்டுகளில் அசுர பலம் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் எப்போது பூகம்பம் ஏற்படும் என்பதை உறுதியாக கூறமுடியாது. அதே சமயத்தில் சுனாமியால் பாதிப்பு ஏற்படாத வகையில் நாம் நடவடிக்கை எடுத்துக்கொள்ள நல்ல வாய்ப்புள்ளது’ என எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment