எதிர்பார்த்த சுபீட்சமும் அபிவிருத்தியும் கிடைக்காமல் மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்: கிண்ணியா பொதுக்கூட்டத்தில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

rahmanPMGG ஊடகப்பிரிவு

கிண்ணியா: யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் அனைத்து மக்களாலும் பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சுபீட்சமும், அபிவிருத்தியும் இன்று வரை அனைவருக்கும் ஏமாற்றத்தையே அளித்திருக்கின்றது. ஆளுந்தரப்பிலுள்ள ஆட்சியாளர்களும், அரச அதிகாரத்திலுள்ளவர்களும், அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர்களும் என்ற ஒரு சிறிய வட்டத்தினர்தான் எல்லாவித சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டு கவலையில்லாத மனிதர்களாக இன்று இராஜ வாழ்க்கை வாழுகின்றனர். இந்நாட்டின் பெருந்தொகையான குடிமக்கள் வறுமையிலும் பயங்கரமான பொருளாதார பிரச்சினைகளிலும் சிக்கித் தவிக்கும் நிலைமையிலேயே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதுவே இன்றைய நாட்டின் யதார்த்தமான நிலவரமாகும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும்இ முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.

கடந்த 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிண்ணியாவில் நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பின் கிண்ணியா பிரதேச உறுப்பினர் மொஹமட் இர்ஷாத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது:

இந்த நாடு நான்கு வருடங்களுக்கு முன்னர் யுத்தம் என்ற இருண்ட யுகத்தில் இருந்து மீண்டு வந்தது. 30 வருட காலமாக இந்த யுத்தம் நமது நாட்டை அழிவுக்குள்ளாக்கியதுடன் குறிப்பாக வட கிழக்கிலே வாழும் நாமெல்லாம் பயங்கரமான இன்னல்களையும் துயரங்களையும் சந்தித்ததன் பின்னர் இந்த யுத்தம் முடிவுக்கு வந்தது.

தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த யுத்தத்தை நாங்கள்தான் முடித்தோம் என்று சொந்தம் கொண்டாடி அதனை அரசியல் மூலதனமாக்கி இன்று பெரும் பெரும் அதிகாரங்களைப் பெற்று சுகபோகமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் குடிமக்களின் துயரங்களோ நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் கூடிக்கொண்டே செல்கின்றன.

இந்த பயங்கரவாத யுத்தத்தை தோற்கடித்து முடிவுக்குக் கொண்டு வந்ததற்கான பங்களிப்பை இந்த நாட்டின் குடிமக்களான நாம் ஒவ்வொருவரும் செய்திருக்கின்றோம் என்பதை மறந்து விட முடியாது.

வட கிழக்கிலே இருக்கின்ற எங்களைப் போன்ற மக்கள் அதற்கான விலையை அதிகமாகக் கொடுத்திருக்கின்றோம். அதேபோன்று தெற்கிலே இருக்கின்ற சிங்கள மக்களும் அதற்கான விலையைக் கொடுத்திருக்கின்றார்கள். யுத்தம் ஏற்படுத்திய பொருளாதாரச் சுமைகளை நமது நாளாந்த வாழ்க்கையிலே சுமந்து கொண்டு பல இன்னல்களை அனுபவித்த வண்ணம் இந்த நாட்டின் சுபீட்சத்திற்காகப் பொறுமை காத்து பங்களிப்புச் செய்ததானது, இந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் இக்கொடிய யுத்தத்தை வெல்வதற்காகச் செய்திருக்கின்ற குறைந்தபட்சப் பங்களிப்பாகும்.

எனவேதான் இந்த யுத்தம் முடிந்ததன் பின்னர் இந்த நாட்டிலே ஒரு நிரந்தரமான இன ஐக்கியம், சமத்துவம், ஒரு அர்த்தமுள்ள சமாதானம், இதையெல்லாம் அடிப்படையாகக் கொண்ட ஒரு சுபீட்சமான பொருளாதாரம், அனைத்து மக்களும் வறுமையிலும், பசியிலும், பட்டினியிலும் பொருளாதாரக் கஷ்டத்திலிருந்தும் மீண்டு சந்தோஷமாக வாழக்கூடிய நிலை உருவாகும் என்று எல்லோருமே எதிர்பார்த்தார்கள்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. எல்லோருக்கும் ஏமாற்றமே கிடைத்திருக்கின்றது.

கடந்த நான்கு வருடங்களை நாம் திரும்பிப் பார்த்தால் அரசாங்கம் பல பிரமாண்டமான அபிவிருத்திகளைச் செய்ததாக பட்டியல் போட்டுக் காட்டுகின்றது. கண்ணுக்குத் தெரியும்படியாக புதிய விமான நிலையம் கட்டி முடித்துத் திறக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அங்கு பறப்பதற்கு விமானங்களைக் காணவில்லை. புதிய துறைமுகம் கட்டப்பட்டிருக்கின்றது. ஆனால் கப்பல் போக்குவரத்திற்கு அந்தத் துறைமுகம் உதவாது என நிபுணர்கள் கூறுகின்றார்கள். பெரும் பெரும் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தப் பாதை நிர்மானங்களில் நாட்டின் வரலாறு காணாத பெரும் ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

அண்மையில் பெரும் ஆராவாரமாகத் திறந்து வைக்கப்பட்ட கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்வதற்கான அதி வேகப் பாதை நிர்மானம் என்பது வரலாற்றிலே எப்போதுமில்லாத ஊழல் மோசடிகள் நிறைந்த ஒரு அபிவிருத்திப் பணியாகும் என்று பலரும் ஆதாரபூர்வமாக இப்போது பேசத் தொடங்கியிருக்கின்றார்கள். இது ஒரு பக்கம்.

இன்னொரு பக்கத்தில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின் இந்த நாட்டிலே சட்டமும், ஒழுங்கும் மிகவும் பாரபட்சமான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஒரு சூழல் தோன்றியிருக்கின்றது. ஒரு அரசாங்க அதிகாரி தனது கட்டளைக்கு கட்டுப்படவில்லை என்பதற்காக அவரை பட்டப்பகலிலே மரத்திலே கட்டி வைத்து தண்டனை கொடுத்தாலும் கூட அந்த அரசியல்வாதியை இந்த அரசாங்கம் ஏனென்றும் கேட்காது என்கிற அளவுக்கு இந்த நாட்டினுடைய சட்டமும் ஒழுங்கும் சிதைந்து போயிருக்கின்றது.

யுத்தம் நடந்த காலத்திலே அனுபவிக்காத பல புதிய பிரச்சினைகளை நாம் இப்போது பார்க்கின்றோம். யுத்த காலத்திலே பயங்கரவாதிகள் பள்ளிவாசல்களை உடைத்தார்கள். பள்ளிவாசல்களுக்கு உள்ளே வந்து சுட்டார்கள். கொலை செய்தார்கள். முஸ்லிம்களை விரட்டினார்கள். சிங்கள தமிழ் மக்களையும் கொன்றார்கள் என்ற வரலாறு நம்முன்னே இருந்து கொண்டிருக்கிறது.

அவர்கள் பயங்கரவாதிகள். பயங்கரவாதிகள் எந்தச் சட்டத்திற்கும் கட்டுப்படாதவர்கள். பயங்கரவாதிகளை எந்த மக்களும் நீங்கள் இந்த நாட்டின் பயங்கரவாதிகள் என்று நியமிக்கவில்லை. ஜனநாயகபூர்வ தேர்தல்கள் மூலமாக மக்கள் எவரும் அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கியிருக்கவும் இல்லை. ஆயுத பலத்தின் காரணமாக பயங்கரவாதிகள் அதிகாரத்தைப் பிடித்தார்கள்.

ஆனால் இன்றிருப்பது ஜனநாயகத் தேர்தல்கள் மூலமாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமாகும். சட்டத்தையும், ஒழுங்கையும் நிலை நிறுத்தி நியாயமான ஆட்சியை அனைவருக்கும் சமத்துவமாக வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் இவர்களைத் தெரிவு செய்து அதிகாரத்தில் அமர்த்தினார்கள். இருப்பினும் கூட மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான மதச் சுதந்திரத்திற்காக நாம் இந்த நாட்டில் நித்தமும் போராட வேண்டியுள்ளது.

இந்த நாட்டினுடைய நிலைமை இன்று எப்படியாகிவிட்டதென்றால், தீமைகளும், குற்றச் செயல்களும் கணிசமாக அதிகரித்து எதற்குமே தீர்வுகள் காணப்படாத நிலையில் இப்போது அது மக்களுக்கும் பழக்கப்பட்டுப் போய் விட்ட ஒன்றாகவே ஆகி விட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு பள்ளிவாசல் அல்லது ஒரு வணக்கஸ்த்தலம் தாக்கப்பட்டதென்ற செய்தி பத்திரிகைகளிலே, ஊடகங்களிலே மிகவும் பரபரப்பான செய்தியாகப் பேசப்பட்டது. கண்டிக்கப்பட்டது. ஆனால், இந்த அரசாங்கம் அவற்றைக் கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்தத் தவறியிருப்பதனால் அவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதன் காரணமாக இன்று அது ஒரு சாதாரண சம்பவமாக, செய்தியாக ஊடகங்களுக்கும், நமக்கும் பழக்கப்பட்டு விட்டது. பரபரப்பும், முக்கியத்துவமும் இல்லாமல் போய் விட்டது.

ஆக, இந்த நாட்டைப் பொறுத்த வரை எமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகள் எவற்றுக்கும் ஆட்சியாளர்கள் உரிய தீர்வுகளைப் பெற்றுத் தராத நிலையில் பிரச்சினைகளை அனுசரித்து வாழப் பழகிக் கொள்வதுதான் மக்களுக்குள்ள ஒரே தீர்வாக மாறியிருக்கின்றது. அந்த வகையில் வறுமையை ஏற்றுக் கொண்டு வாழப் பழகிக் கொள்வது, ஊழல் மோசடிகளை அனுசரித்து வாழப் பழகிக் கொள்வது, பள்ளிவாசல்களில்மதத்தலங்களில் உருவாகும் பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு வாழப் பழகிக் கொள்வது என்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காணாமல் அவற்றோடு சமரசமாகி வாழப் பழகிக் கொள்வதுதான் தீர்வு என்றாகி விட்டது.

யுத்தத்தின் பின் இந்த நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றமடைந்திருப்பதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் புள்ளி விபரங்களோடு தெரிவிக்கின்றன. ஆனால் மக்கள் எதிர்பார்க்கின்ற பொருளாதார அபிவிருத்தி என்பது புள்ளி விபர அறிக்கைகளிலே காட்டப்படுகின்ற அபிவிருத்தியை அல்ல. ஒவ்வொரு குடிமகனும் கடந்த மாதத்தை விட இந்த மாதம் என்னால் சந்தோஷமாக வாழ முடிந்தது, நிம்மதியாகச் சாப்பிட முந்தது, எனது பிள்ளைகளுக்கு தரமான உணவை, வாழ்வை வழங்கக் கூடியதாக இருந்தது என்று எப்போது அவனது அன்றாட வாழ்வில் அபிவிருத்தியை உணர்கின்றானோ அதுதான் ஒரு நாட்டினுடைய உண்மையான பொருளாதார அபிவிருத்தியாகவும், முன்னேற்றமாகவும் இருக்க முடியும்.

அறிக்கைகளிலே, பேட்டிகளிலே, மேடைப் பேச்சுக்களிலே, செய்தித் தாள்களிலே அரசியல்வாதிகளும் அரசாங்கமும் எதைச் சொல்லுகின்றனர் என்பல்ல முக்கியம். நாம் எதை அனுபவ ரீதியாக உணர்கின்றோம்? எப்படி அன்றாடம் வாழுகின்றோம்? நமது மக்களின் உணவும் வாழ்க்கைத் தரமும் எப்படி இருக்கின்றது? சட்டமும், ஒழுங்கும் எப்படியிருக்கின்றது? என்பதை மக்கள் அனுபவித்து உணர்வதுதான் முக்கியம்.

அந்த வகையிலே கடந்த நான்கு வருடங்களிலே முழு நாட்டு மக்களும் பல்வேறு தியாகங்களையும் செய்து வெல்லப்பட்ட அந்த யுத்தமானது, முழு நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எதிர்பார்க்கப்பட்ட அந்த உண்மையான சுபீட்சத்தையும், அபிவிருத்தியையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டமுமாகும்.

என்றலும் ஆளுங்கட்சியிலுள்ள ஆட்சியாளர்கள், அதிகாரத்தைப் பெற்றவர்கள், அதிகாரத்தைப் பெற்றவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றவர்கள் என்கிற ஒரு சிறிய வட்டத்தினர் மாத்திரம் தான் இந்த நாட்டிலே அத்தனை வசதி வாய்ப்புக்களையும் பெற்றவர்களாகவும், கவலையில்லாத மனிதர்களாகவும் இன்று இராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். – இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Published by

Leave a comment