கொழும்பு: மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் விசேட நடவடிக்கை ஒன்றை பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதிலும் ஆரம்பித்துள்ளது. நேற்று மாலை 6.00 மணி தொடக்கம் நாடு முழுவதிலும் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கை 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதன்படி, மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை சோதனையிட்டு கைது செய்யும் இந்த விசேட நடவடிக்கை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதுடன், இதற்கென விசேட பொலிஸ் குழுக்களும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டிகள், மோட்டார் வாகனங்கள், கார், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளை செலுத்தும் சகல சாரதிகளும் அதிரடியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர பொறுப்பற்ற விதத்தில் பஸ் வண்டிகளை செலுத்தும் சாரதிகளையும் பயணிகள் பஸ் வண்டியில் மோசமான முறையில் நடந்து கொள்பவர்களையும் தேடி கைது செய்யும் பொருட்டு பஸ் வண்டிகளில் சிவில் உடைகளில் பொலிஸார் இந்த விசேட நடவடிக்கையின் மூலம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மற்றும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்பவருக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அவர், மதுபோதையில் வாகனங்களை செலுத்திய நிலையில் கைது செய்யப்படும் சாரதிகளுக்கு இதற்குப் பின்னர் பொலிஸ் நிலையங்கள் மூலம் பிணை வழங்கப்படமாட்டாது. மாறாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவர் என்றும் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் நத்தார் பண்டிகை மற்றும் புதுவருட பிறப்பு காலப் பகுதிகளில் மதுபோதையில் வாகனங்களை செலுத்தியதன் காரணமாக கூடுதலான விபத்துக்கள் மற்றும் அனர்த்தச் சம்பவங்கள் பொலிஸில் பாதிவாகியுள்ளன.
இதன்படி 2013 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையும் ஒருவருட காலப் பகுதிக்குள் மாத்திரம் மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 1671 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் 297 பேர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மதுபோதையில் வாகனங்களை செலுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர் என 43,464 சாரதிகள் கைது செய்யப்பட்டு சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இதேபோன்று, 2012 ஆம் ஆண்டு மது போதையில் வாகனங்களை செலுத்திய 1782 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் 171 பேர் மரணமடைந்துள்ளனர்.
அத்துடன் 35502 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டு போதையில் வாகனங்களை செலுத்திய 1138 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் 168 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35785 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று வருட காலங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு விபத்துச் சம்பவங்கள், உயிரிழப்பு மற்றும் கைதுசெய்யப்பட்ட சாரதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப் பட்டதை அடுத்தே அவற்றை குறைக்கும் வகையில் பொலிஸ் திணைக்களம் பொலிஸ் மா அதிபர் என். க. இளங்ககோனின் ஆலோசனைக்கமைய இந்த விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது என்றார்.
இலங்கையின் சட்டப்படி மது போதையில் வாகனம் செலுத்தும் சாரதி ஒருவரது இரத்தத்தில் 80 மில்லி லீட்டரோ அதற்கு அதிகமாகவே போதை கலந்திருந்திருந்தால் அவர் வாகனம் செலுத்த தகுதியற்றவராவார்.
இவ்வாறான நிலையில் வாகனங்களை செலுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று தெரிவித்த அவர் இவ்வாறான நிலையில் உள்ள சாரதிகள் பலூன் ஊதுதல் போன்ற சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்றார்.
எனவே சாரதிகள் தமதும், பொது மக்களினதும் உயிரை கருத்திற் கொண்டு பொறுப்புடன் செயற்படுமாறு பொலிஸ் திணைக்களம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.TK
Published by

Leave a comment