கொழும்பு: உணவு தயாரிக்கும் மற்றும் விநியோகிக்கும் இடங்கள் குறித்து ஆராய்வதற்காக நேற்று ஆரம்பிக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கை மூலம் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் நாள் சோதனையின் போது பொதுமக்கள் பாவனைக்கு உவப்பற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு பல வாரங்கள் பழைய ரொட்டித்துண்டுகளே கொத்துரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.
உணவுப் பொருட்களின் உற்பத்தி விநியோகம், விற்பனை மற்றும் தயாரிப்பு என்பன தொடர்பாக நேற்று முதல் திடீர் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன.
பொது மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சுகாதார அமைச்சு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை கொழும்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார திணைக்களம் என்பன இணைந்து இந்தத் திட்டத்தை ஆரம்பித்திருந்தன. இந்தத் திட்டத்தின் கீழ் மருதானை பிரதேசத்திலுள்ள, ஹோட்டல்கள், சிற்றுண்டிச்சாலைகள்,வாசனைத் திரவியங்கள் விற்கும் இடங்கள் அடங்கலான 150 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.
இவற்றில் 99 வீதமான இடங்கள் மோசமான நிலையில் காணப்பட்டதோடு உணவு தயாரிக்கப்பயன்படுத்தும் பொருட்கள் அவற்றை களஞ்சியப்படுத்தி வைத்துள்ள இடங்கள் என்பன பொதுமக்கள் பாவனைக்கு உவப்பற்ற முறையில் இடம்பெறுவதாகக் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மேற்படி கடைகள் அனைத்திற்கும் எதிராக வழக்கும் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகதார அமைச்சு கூறியது.
கொத்து ரொட்டி தயாரிப்பதற்காக பல வாரங்கள் பழைய ரொட்டித்துண்டுகளே பயன் படுத்தப்பட்டிருப்பது இந்த சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. சிலிபேஸ்ட் (ChiliPasts) தயாரிப்பதற்காக, மீன், அப்பளம், ரோல்ஸ் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிப்பதற்காக உபயோகிக்கும் எண்ணெய்யே பயன்படுத்தப்பட்டுள்ளது.
சிறுவர்கள் மத்தியில் பிரபலமான கடலை மாவினால் தயாரிக்கப்படும் முறுக்கு செய்வதற்காக வண்டுகள், பூச்சிகள் நிறைந்த பழைய மாவே உபயோகிக்கப்பட்டிருப்பது பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேங்காய் துருவுவதற்காக பயன்படுத்தப்படும் தேங்காய் துருவிகள் ஒரு போதும் சுத்தம் செய்யப்படாமலே உபயோகிக்கப்பட்டுள்ளன. சில கடைகளில் பழச்சாறு தயாரிப்பதற்காக பழுதடைந்த பழ வகைகளே பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
நாடு பூராவுமுள்ள சகல நகரங்களிலும் உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யும் மற்றும் தயாரிக்கும் இடங்களை பரீட்சிக்குமாறு சுகாதார சேவைப் பணிப்பாளர் மஹிபால ஹேரத் சுற்றுநிருபம் மூலம் அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாவனைக்கு உவப்பற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் இடங்கள் குறித்து அறிவிப்பதற்காக மூன்று அவசர இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அத்தகைய உணவுகளை விற்கும் நபர்கள் மற்றும் இடங்கள் தொடர்பான சகல தகவல்களையும் 0113-071073, 0112-676161, 1977 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கு 24 மணி நேரமும் அறிவிக்க முடியும் என சுகாதார சேவைப்பணிப்பாளர் தெரிவித்தார்.
திடீர் சோதனை நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்ட அவர் பொதுமக்களின் ஒத்துழைப்பு இதற்கு அவசியம் எனவும் தாம் பொருட்கள் வாங்கும் கடைகளில் சுத்தமாக உணவு தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து அறியும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
பண்டிகைக் காலத்தையொட்டி மேற்கொள்ளப்படும் இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டம் மேலும் 5 தினங்கள் இடம்பெறும். tk
Leave a comment