கொழும்பு: கிறிஸ்தவ சமய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் எஸ். ஹைனா அன்வர் என்ற முஸ்லிம் பெண்மணியின் ஜனாஸா நீதிமன்றக் கட்டளையின்படி பல நாட்;களின் பின்னர் தோண்டியெடுக்கப்பட்டு உரிய விசாரணைகளின் முடிவில் மாளிகாவத்தையில் இஸ்லாமிய முறைப்படி மீண்டும் நல்லடக்கம் செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (20) கடவத்தை நீதவான் தர்ஷிகா விமலசிரியினால் அனுமதி வழங்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த 18 ஆம் திகதி புதன் கிழமை அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் புதிய மரபணு பரிசோதனை கூடத்தை திறந்து வைப்பதையொட்டி நிபுணர்களுடன் இடம் பெற்ற முக்கிய கூட்டத்தில் நீதியமைச்சரும், ‘ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டி, இந்த விவகாரம் நீதிமன்றத்தின் முன்னிருப்பதன் காரணமாக பூர்வாங்க தகவல்கள் சிலவற்றை மட்டும் குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சர் ஹக்கீமின் கூற்றின்படி, மஹர கடவத்தை பிரதேசத்தில் பெண்ணொருவரின் பூதவுடல் அவரின் குடும்பத்தினர் என கூறப்பட்டவர்களால் கிறிஸ்தவ முறைப்படி நவம்பர் மாத நடுப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
பின்னர், அந்த பெண்மணி முற்றிலும் எதிர்பாராத விதத்தில் உயிருடன் வீடு திரும்பிய நிலையில், அச் செய்தி ஊடகங்களில் வெளிவந்ததைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிச் சென்று காணாமல் போன முஸ்லிம் பெண்ணொருவரின் பிள்ளைகளின் முறைப்பாட்டை அடுத்து நீதவானின் உத்தரவின்படி புதைகுழியில் தோண்டியெடுக்கப்பட்ட சடலம் உறவினர்கள் தெரிவித்த உடல் அடையாளங்கள் குறிப்பாக அவரது இடது கையில் காணப்பட்ட முறிவு, அவர் மரணித்த பொழுது அணிந்திருந்த சட்டை மற்றும் உள்ளங்கியின் நிறம் என்பவற்றுடன் ஏனைய காரணிகளையும் கவனத்தில் கொண்டு றாகம சட்ட மருத்துவ அதிகாரியினால் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், சட்ட மருத்துவ அதிகாரி மரபணு (டிஎன்ஏ) பரிசோதனையின் ஊடாகவே அதனை திட்டவட்டமாக தீர்மானிக்க முடியுமென களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுப்பியுள்ளார். அந்த மரபணு பரிசோதனையின் முடிவு வெளிவர மூன்ற வாரங்கள் ஆகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரபணு பரிசோதனைகள் தற்பொழுது தனியார் நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்படுவதால் இவ்வாறான தாமதம் ஏற்படுவதாக சுட்டிக்காட்டி, தமது அமைச்சின் கீழ் உள்ள அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நிறுவப்பட்டுள்ள நவீன உபகரணங்களுடன் கூடிய டீஎன்ஏ (மரபணு) ஆய்வு கூடம் மிக விரைவில் செயல்பட்டு, இவ்வாறான பரிசோதனை முன்னெடுக்கப்படும் போது இவ்வாறான கால தாமதத்தை வெகுவாகக் குறைக்க முடியுமென்றும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
இதுபற்றி மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், காணாமல் போயிருந்த முஸ்லிம் பெண்மணியின் நெருங்கிய குடும்ப உறவினர்களால் இந்த விடயம் நீதியமைச்சர் என்ற முறையில் தமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்ததாகக் கூறினார். அத்துடன் தோண்டியெடுக்கப்பட்ட பெண்மணியின் சடலம் முஸ்லிம் ஒருவரது என்ற காரணத்தினால் அதனை டீஎன்ஏ பரிசோதனை முடிவு வெளிவரும் வரை நல்லடக்கம் செய்யாமல் பிரேத அறையில் வைத்திருப்பது இஸ்லாமிய சமய ரீதியில் முறையற்றதென்றும் கூறினார்.
இவ்வாறிருக்க, கடவத்தை பொலிஸார் நெறிப்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கடவத்தை நீதவான் தர்ஷிகா விமலசிரி வழங்கினார். அவரது தீர்ப்பின் பிரகாரம் மேரி மெடில்டா என்ற பெண்ணின் சடலம் என்று அவரது மகள் என். சோமலதா என்பவரால் உரிமை கோரப்பட்ட சடலம் நவம்பர் 15 ஆம் திகதி பட்டுவத்த மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.
பின்னர் மேரி மெடில்டா என்ற அந்தப் பெண்மணி ஆச்சரியப்படத்தக்க விதத்தில் உயிருடன் வீடு திரும்பியதாக வெளிவந்த ஊடகச் செய்திகளையடுத்து காணாமல் போன தமது தாயான எஸ். ஹைனா அன்வர் உடைய ஜனாஸாவே அதுவென ஆறு ஆண் பிள்ளைகளும் மூன்று பெண் பிள்ளைகளும் சத்தியக் கடதாசியின் மூலம் இம் மாதம் 4 ஆம் திகதி நீதிமன்றத்தை அணுகி நீதி கோரி நின்றனர்.
அதனடிப்படையில் மிகவும் சர்ச்சைக்குரியதும், பரபரப்பானதுமான இந்த விவகாரம் தொடர்பில் கடவத்தை நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்வதற்காக இந்த ஜனாஸாவை 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹைனா அன்வருடைய மகன் முஹம்மத் அன்வர் முஹம்மத் ஹூசைனிடம் கையளிக்குமாறு நீதவான் தர்ஷிகா விமலசிரி உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன் மரபணு பரிசோதனையின் முடிவு கிடைத்த பின்னரே இறப்பு சான்றிதழ் வழங்கப்படுமென்றும் நீதவான் குறிப்பிட்டிருந்தார். இந்த ஜனாஸாவுக்கு முன்னர் மேலும் சிலரும் உரிமை கோரியதாக நீதிமன்ற வட்டாரம் தெரிவித்தது.
Published by

Leave a comment