கல்முனை மாநகர சபை பட்ஜட் கூட்டம் திடீர் ஒத்திவைப்பு; எதிர்ப்பு நடவடிக்கையில் பரபரப்பு

Kalmunaiகல்முனை: கல்முனை மாநகர சபைக்கூட்டத்தை நேற்று திடீரென ஒத்திவைத்ததைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை மாநகர சபை கூட்ட மண்டபத்திற்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கையொன்று இடம்பெற்றது.

நேற்று பி.ப. 2.30 மணிக்கு அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் முதல்வர் நிஸாம் காரியப்பரால் சமர்ப்பிக்கப்பட இருந்தது. இருப்பினும் திடீரென இக்கூட்டம் ஒரு கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உறுப்பினர்களுக்கு மாநகர சபை அலுவலகத்திலிருந்து தொலைபேசியூடாக அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு திடீரென கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதை ஆட்சேபித்து முன்னாள் முதல்வரும் தற்போதைய பிரதி முதல்வருமான சிராஸ் மீராசாஹிப் தலைமையில் ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்

சிலரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரும் ஐக்கிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த ஒருவரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு அமைதியற்ற சூழல் உருவானதையடுத்து கல்முனை பொலிஸார் வந்து அமைதியைக் கடைப்பிக்குமாறு உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

இதேவேளை எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் சமர்ப்பிக்கப்படவிருந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் பிரதிகளை கிழித்தெறிந்ததுடன் தைரியமிருந்தால் இன்று வாக்கெடுப்பை நடத்தி வென்று காட்டட்டும் எனத் தெரிவித்ததுடன் தம்முடன் 10 உறுப்பினர்கள் ஒன்றாகவுள்ளதாக பிரதி மேயர் சிராஸ் மீராசாஹிப் கருத்துத் தெரிவித்தார்.

இவ்வேளை மாநகர அலுவகலத்தில் இருந்த முதல்வர் சபை மண்டபத்திற்கு முன்னால் வந்து கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் இக்கூட்டம் எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

இதனைத்தொடர்ந்து பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.tk

Published by

Leave a comment