காத்தான்குடி: அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் இலங்கை சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டலில் சுமார் 80 இலட்சம் ரூபாய் செலவில் காத்தான்குடி தள வைத்தியசாலையில் முதற்தடவையாக நோயாளிகளின் நன்மை கருதி நவீன வைத்திய சாதனங்களுடன் அமைக்கப்பட்ட விபத்து மற்றும் காயங்கள் சிகிச்சைப் பிரிவு,மத்திய கிருமி நீக்கல் வழங்கல் பிரிவு,வைத்தியசாலை துணிகள் வழங்கல் பிரிவு என்பன மூன்று வைத்திய பிரிவுகளை திறந்து வைக்கும் நிகழ்வு 22-12-2013 நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
இதன் போது வைத்தியசாலையின் மூன்று பிரிவுகள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
காத்தான்குடி தள வைத்தியாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,காதி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி), மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் டாக்டர் சதுர்முகம் ,பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யு.எல்.நஸீர்தீன் , காத்தான்குடி தள வைத்தியாலை அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் நிஹாஜ் உட்பட உலமாக்கள் .இராணுவ அதிகாரிகள்,ஊர் பிரமுகர்கள்,புத்திஜீவிகள், காத்தான்குடி வைத்தியசாலை வைத்தியர்கள்,வைத்திய தாதிகள், வைத்திய ஊழியர்கள,அபிவிருத்திச் சங்க ஊழியர்கள்; என பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீரின் முயற்சியினால் நேற்று திறந்து வைக்கப்பட்ட இவ் மூன்று பிரிவுகளுக்கும் நிதி உதவிகளை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,கிழக்கு மகாண சுகாதார அமைச்சு,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை,காத்தான்குடி வாழ் மக்கள் ஆகியோர் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் வைத்தியசாலையில் குறித்த மூன்று பிரிவுகள் திறக்கப்பட்டுள்ளதால் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள மக்களும் அதனை அண்டியுள்ள ஆரையம்பதி, பாலமுனை, கர்பலா,காங்கேயனோடை, ஒள்ளிக்குளம்,சிகரம் ஆகிய கிராம மக்களும் பெரிதும் நன்மையடையவுள்ளதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் செய்யக்கூடிய சில வைத்திய சேவைகளை நவீன வைத்திய சாதனங்களுடன் இங்கு செய்ய முடியும் என்பதும் குறிபிடத்தக்கது.
Published by

Leave a comment