அபூஜா: நைஜீரியாவின் ‘மகப்பேறு தொழிற்சாலை’யில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 கர்ப்பிணி பெண்கள் பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்காவின் எண்ணை வளம் மிக்க நாடுகளில் ஒன்று நைஜீரியா. ஆனால் இங்கு வாழும் மக்களில் பெரும்பாலான ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் அங்கு விபச்சாரம், கள்ளத் தொடர்பு, திருமணத்துக்கு முந்தைய பிள்ளைப்பேறு போன்றவை அதிகம். இதன் காரணமாக தகாத உறவுகளில் பிறக்கும் குழந்தைகளை விற்பதை அங்குள்ள சிலர் தொழிலாகவே செய்து வருகிறார்கள். அதற்கென அங்கு பிரத்யேக மகப்பேறு தொழிற்சாலைகள் இயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அத்தகைய ரகசிய மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 கர்ப்பிணிகளை பொலீசார் மீட்டுள்ளனர்.
17 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நைஜீரியாவில், ஏழை மக்களின் சராசரி வருமானம் நாளொன்றுக்கு 2 டொலர்களை விட குறைவாகவே மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அங்குள்ள மக்களில் சிலர் பணம் ஈட்டுவதற்காக பிறந்த குழந்தைகளை விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருமணத்துக்கு முன்னர் கருத்தரிக்கும் இங்குள்ள பெண்களில் சிலர், சமூகத்தின் ஏச்சுப் பேச்சுக்களுக்கு பயந்து, உள்ளூரை விட்டு வெளியேறி, ரகசியமான இடங்களில் சில மாதங்கள் தங்கியிருந்து, பிள்ளைகளை பெற்றெடுக்கின்றனர்.
பிரசவத்துக்கு பின்னர் பெற்றெடுத்த குழந்தைகளை சிலரிடம் அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு, மீண்டும் ஒன்றும் அறியாத கன்னிப் பெண்களைப் போல் தங்கள் வீடு வந்து சேர்ந்து விடுவது அங்கு வாடிக்கையாகி விட்டது.
இத்தகைய பெண்களுக்கு அடைக்கலம் தருவதற்கென்றே சிலர் ‘மகப்பேறு தொழிற்சாலை’களை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் வறுமை நிலையில் உள்ள இளம் பெண்களை வற்புறுத்தி பிற ஆண்களுடன் உடலுறவில் ஈடுபடுத்தி, கருத்தரிக்கச் செய்வதாகவும் கூறப்படுகிறது.
இவ்வகையில் பிறக்கும் குழந்தைகளை உள்நாட்டில் வசிக்கும் பிள்ளை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கோ, வெளிநாட்டினருக்கோ விற்று விடுவார்களாம் இத்தொழிலில் உள்ளவர்கள். கிடைக்கும் லாபத்தில் சிறு தொகையை பிரசவிக்கும் தாய்மார்களுக்கு பங்காக அளித்து விடுவது வழக்கமாம்.
இந்நிலையில் தற்போது, இதுபோன்ற ரகசிய பிரசவ கூடங்களை தேடி கண்டுபிடித்து, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் நைஜீரிய பொலீசார்.
அதன்படி, பொலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் தென்கிழக்கு மாநிலமான அபியாவின் தலைநகர் உமுவாஹியாவில் உள்ள ஒரு வீட்டில் 15 முதல் 23 வயதுக்குட்பட்ட 19 கர்ப்பிணி பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டு பிடித்தனர்.
அப்பகுதியில் பொலீசார் சோதனை நடத்த வருவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட அந்த குழந்தை விற்பனை மையத்தின் இடைத்தரகரும், காப்பகத்தின் ஒரு பெண், பொலீசாரின் கைகளில் சிக்காமல் தப்பி தலைமறைவாகி விட்டார்.
அதன்பிறகு, அந்த மகப்பேறு தொழிற்சாலையில் இருந்த 5 மாதம் முதல் நிறைமாதம் வரை பல்வேறு கர்ப்ப நிலையில் இருந்த அந்த 19 பெண்களையும் மீட்ட பொலீசார், அவர்களை பாதுகாப்பான இடங்களில் சேர்த்தனர்.
பெண்களின் தாய்மை எனும் மகத்துவத்தை வியாபாரமாக்கிய அந்த மகப்பேறு மருத்துவமனையின் உரிமையாளரான தப்பிச் சென்ற பெண்ணின் மகன் மற்றும் மருமகளை கைது செய்து பொலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by

Leave a comment