கொழும்பு: வட மாகாண சபை உருவானதிலிருந்து மக்களுக்கான நல்ல செய்திகள் எதுவுமே இல்லை. அரசுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பனிப்போர் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆடு அறுக்க முதல் “எதையோ” அறுப்பதுபோல சபை கூடுவதற்கு முன்பே ஆளுநரிடம் சத்திய பிரமாணம் எடுக்க மாட்டோம் என்று தொடங்கிய கூட்டமைப்பினர் ஆளுனரை மாற்றுவோம் இராணுவத்தை வெளியேற்றுவோம் என்று ஓடி இன்று தேசியக்கொடியை ஏற்ற மாட்டோம் என வந்து நிற்கிறது. மன்னார் – வெள்ளாங்குளம் அ.த.க. பாடசாலையில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் பிரதமவிருந்தினராக அழைக்கப்பட்டிருந்த வட மாகாண விவசாய அமைச்சரிடம் தேசியக்கொடியை ஏற்றிவைக்குமாறு ஒலிபெருக்கியில் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை அவர் நிராகரித்து 60 வருடத்துக்கு முந்திய காலத்துக்கு தமிழ் மக்களை அழைத்து செல்ல முற்பட்டுள்ளார்.
இன்று தேசியக் கொடியை ஏற்ற மறுப்பவர்கள் வெகு விரைவில் கறுப்புக்கொடியை ஏந்துவார்கள் எனவும் எதிர்பார்க்கலாம். ஒருவேளை அரசாங்கம் ஓய்வு பெற்ற ஒரு சிவில் அதிகாரியை வடக்குக்கு புதிய ஆளுநராக நியமிக்கும் நிலை ஏற்பட்டால் கூட அதையும் ஒருபோதும் கூட்டமைப்பினர் வரவேற்கப்போவதில்லை என்பதுமட்டும் நிச்சயம். ஏன் தமிழர் ஒருவரை எமக்கு ஆளுநராக நியமிக்க கூடாது? புதிய ஆளுனரின் வருகையை கறுப்புக்கொடி கொண்டு எதிர்ப்போம் என்பதுதான் அப்போதைய கூட்டமைப்பின் கோசமாக இருக்கும்.
ஏனெனில் தமிழரசு கட்சியின் வரலாறு என்பது கறுப்பு கொடிகளினூடாகவே தொடங்கியது. அதனூடாகவே வளர்ந்தது. தமிழரசுக் கட்சி நடத்திய முதலாவது தேசிய மாநாடு இலங்கையின் (சிங்கத்தின் உருவம் பதித்த) தேசியக் கொடியை தமிழர்கள் ஏற்றுகொள்ள முடியாது. அது தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை. என்கின்ற கண்டன தீர்மானங்களை நிறைவேற்றியது. இம்மாநாடு 1951ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருகோணமலையில் இடம்பெற்றது. அன்று முதல் தேசிய ரீதியிலான பொது நிகழ்வுகளை பகி„;கரிப்பதும் அவற்றில் பங்கெடுக்கும் நாட்டின் பிரதான தலைவர்களுக்கு கறுப்புக்கொடி காட்டுவதுமே தமிழர்களின் கடமை என்றுணர்த்தியது தமிழரசுக்கட்சி. அதனூடாக பிரிவினைக்கு தூபமிடுவதே தமிழரசுகட்சியின் பிரதான அரசியல் நடவடிக்கைகளாயின.
இத்தகைய பிரச்சாரங்கள் பல இளைஞர்களின் உணர்வுகளை கிளறிவிட காரணமாயின. இலங்கையின் 9வது சுதந்திர தினத்தை பகி„;கரிக்க வேண்டும். தேசிய கொடிக்கு பதிலாக கறுப்புக்கொடிகளை பறக்க விடவேண்டும் என்று பிரச்சாரங்களை தமிழரசுகட்சி மேற்கொண்டது. இந்த உசுப்பேற்றல்களின் விளைவு 1957ம் ஆண்டு திருமலை நடராஜனின்(22 வயது) உயிரை காவுகொண்டது. திருகோணமலை நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறி தேசியக்கொடிக்கு பதிலாக கறுப்புக்கொடியை கட்டும்போது நடராஜன் சுடப்பட்டான். அதுவே தமிழ் தேசிய விடுதலையின் பெயரில் கொடுக்கப்பட்ட முதலாவது உயிர்ப்பலியாகும். அன்று கறுப்புக்கொடியுடன் தொடங்கிய பலியிடல்கள் ஒன்று, பத்து, நூறாகி ஆயிரமாய் வடக்கு கிழக்கை சுடுகாடாக்கிவிட்டு 2009ம் ஆண்டு மே மாதம் புலிகளின் தலைமை வெள்ளை கொடிகளுடன் சரணடையும் வரை தொடர்ந்தது.
இந்த வரலாற்று சம்பவங்கள் எமக்கு எதையும் கற்றுத்தராவிட்டால் தமிழினம் ஈடேற வழியேதும் கிடை யாது.இந்த போராட்டம் எமது மக்களின் சக்திக்கு அப்பால் சென்றுவிட்டது. இது இத்தனை பாடங்களுக்கு பின்னரும் புரியாவிடின் எமதினத்தை என்னசொல்லுவது? . வட மாகாண சபையை கூட்டமைப்பினர் பொறுப்பெடுக்க முன்வந்தமையே இந்த வரலாற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களினால்தான் என நம்பிய எமது மக்களுக்கு ஐயோ கேடு.
எப்படியோ மாகாண சபை என்பது தேசிய கொடியை மாற்றுவதற்கோ இராணுவத்தை அகற்றுவதற்கோ உரிய களம் அல்ல.அது எமது மக்களின் வாழ்வாதாரங்களை மீள கட்டியெழுப்ப குறைந்த பட்ச அதிகாரங்களுடனான வாய்ப்புகளை கொண்ட ஒரு சிறு கட்டமைப்பாகும்.அதில் செய்யப்படுகின்ற இணக்கப்பாடுகளும் பரஸ்பரம் கட்டி எழுப்பப்படும் நம்பிக்கைகளுமே அச்சபையை மென்மேலும் வலுப்படுத்த உதவும்.இவையெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தெரியாத விடயதானங்கள் அல்ல. அப்போது ஏன் கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தலில் போட்டியிட முன்வந்தனர்? இந்த இடத்தில்தான் தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது.
இறுதியுத்தத்துக்கு பின்னர் தமிழ் மக்களுக்கு வயிற்றுக்கான போராட்டம் பற்றி மட்டுமே கவலையிருந்தது.தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மக்களின் இந்த அவல நிலையை போக்க எதுவுமே செய்ய முடியவில்லை.அரசுடன் இணைந்து இணக்க அரசியல் செய்பவர்கள் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வந்தனர். குறிப்பாக கிழக்கு மாகாண தேர்தலை முதலில் கூட்டமைப்பினர் புறக்கணித்த போது தாங்கள் இல்லாமல் இந்த மாகாணசபை முறைமை தேறாது என கணிப்பிட்டனர்.
போதாக்குறைக்கு எமது பத்திரிகையாளர்களும் “சின்னபொடியன் பிள்ளையான்” முதலமைச்சராகி எதை கிழித்துவிட முடியும் என்று தப்புக்கணக்கு போட்டனர். ஆனால் பத்திரிகையாளர்களின் நகைப்பையும் கூட்டமைப்பினரின் சாபத்தையும் கடந்து கிழக்குமாகாண சபை சாதித்துத்தான் காட்டியது. அதனால்பிள்ளையானை எப்படியாவது அரசியலில் இருந்து ஒழித்து கட்டிவிட இரண்டாவது மாகாணசபை தேர்தலில் கூட்டமைப்பு களமிறங்கி தமிழ் மக்களின் வாக்கு வங்கியை உடைத்து கிழக்குமாகாண சபையை தமிழர்கள் பயன்படுத்தமுடியாதவாறு சீர்குலைத்தது.
முதலமைச்சர் மட்டுமல்ல ஏனைய நான்கு அமைச்சர்களில் ஒருவர்கூட தமிழர் இல்லாத நிலைமையை ஏற்படுத்தியது தமிழரின் வரலாற்றின் பக்கங்களில் கூட்டமைப்பினர் அடைந்த இமாலைய சாதனையே ஆகும். அதனூடாக தங்களால் செய்யமுடியாத சேவைகளை வேறு யாரும் தமிழ் மக்களுக்கு செய்து விட கூடாது என்கின்ற தமது எண்ணத்தை ஈடேற்றுவதில் கூட்டமைப்பினர் பெருவெற்றி கண்டனர்.
இதே போன்றுதான் எத்தனையோ துரோகப்பட்டங்களை சுமந்து கொண்டு கடந்த இருபது வருடங்களாக தம்மால் முடிந்த சேவைகளை ஆற்றி வந்த டக்ளஸ் தேவானந்தாவின் செயல்பாடுகள் ஏதோ ஒரு வகையில் அவருக்கான வாக்கு வங்கியொன்றை யாழ்ப்பாணத்தில் உருவாக்குவதினை கூட்டமைப்பினரால் தடுக்கமுடியவில்லை.இந்த நிலையில் தான் வடமாகாணசபையை டக்ளசின் கரங்களில் கொடுத்து விட்டால் அது தமது அரசியல் எதிர் காலத்தை சு+னியமாக்கிவிடும் என கூட்டமைப்பினர் கணிப்பிட்டனர்.கிழக்கு மாகாண சபையின் முதலாவது தேர்தலில் தாம் விட்ட தவறை வடமாகாணசபையினை பகி„;கரிப்பதன் ஊடாக செய்து விட கூடாது என்பதில் கவனமாயிருந்தனர். இதன் காரணமாகவே கூட்டமைபினர் வட மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டனர்.ஆனால் அது மக்களுக்கு புரியாது போனதுதான் கொடுமை. இனியாவது இவர்கள் ஏதாவது உருப்படியாக செய்வார்கள் என நம்பியது வீணே.
இல்லாவிட்டால் இத்தனை அழிவுகளுக்கு பின்னர் கிடைத்திருக்கின்ற இந்த சபையைகூட அடாவடித்தனம் பண்ணும் ஒன்றாக சவால்விடும் மையமாக மீண்டும் கறுப்புக்கொடிகளை உருவாக்கும் எதிர்ப்பு அரசியல் புள்ளியாக மாற்ற முனைவார்களா? இது நல்ல சகுனம் அல்ல.மிக விரைவில் இலங்கை சுதந்திரதினம் வருகிறது மீண்டு கறுப்பு கொடியை ஏந்த சொல்லி வட மாகாண சபை தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஏனன்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வட மாகாண சபையை கைப்பற்றியது தாங்கள் மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும்படியான கருமங்களை ஆற்றுவதற்கல்ல. அதுபோன்ற கருமங்களை தமது அரசியல் எதிரிகள் யாரும் ஆற்றிவிடகூடதிருக்கவேயாகும்.
இனி அவர்கள் கறுப்புகொடியில் தொடங்கி வெள்ளை கொடியில் முடிந்த வரலாற்றை மீண்டும் ஒருமுறை உருவாக்க முனையும் தமிழ் தலைவர்களாக வலம்வரப் போகிறார்கள். தமிழ் மக்களே தயாராகுங்கள்.
– தினகரன்
Published by
![249px-Black_flag_waving.svg[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/249px-black_flag_waving-svg1.png?w=139&h=150)
Leave a comment