நியூயோர்க்: தேவ்யானிக்காக இவ்வளவு தூரம் போராடும் இந்தியா, அதேசமயம் இந்தியப் பிரஜையான அவரது வீட்டுப் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்க்கு நடந்த அநீதி குறித்து ஏன் ஒன்றும் கூறவில்லை என குற்றம் சாட்டியுள்ளது அமெரிக்கா. மேலும், இந்தியத்துணைத் தூதர் கைது செய்யப்பட்டபோது நடந்தது என்ன என்பது குறித்து 3 பக்க விரிவான விளக்க அறிக்கையும் அது வெளியிட்டுள்ளது.
நியூயோர்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணியாற்றி வந்த தேவ்யானி கோப்ரகடே அமெரிக்க பொலீசாரால் கைது செய்யப்பட்டார். விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நடத்தப்பட்ட விதம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் கைது விவகாரத்தில் ஆரம்பம் முதல் தனது கண்டனத்தைத் தெரிவித்து வரும் இந்திய அரசு, அவர் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என அமெரிக்காவை வற்புறுத்தி வருகிறது.
தேவ்யானிக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கிறவகையில் அவரை ஐ.நா. சபைக்கான நிரந்தர இந்தியத்தூதராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தேவ்யானி கைது குறித்து 3 பக்க விளக்கத்தை வெளியிட்டுள்ளார் அமெரிக்க அரசு வழக்கறிஞர் பிரித் பராரா. அதில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:-
தேவ்யானி கைது செய்யப்பட்டது தொடர்பான விவகாரத்தில் வெளியான தவறான தகவல்கள் குறித்து, நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தூதர்கள், தூதரக அதிகாரிகளின் வேலைக்காரர்களை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்க சட்டங்களை தேவயானி பின்பற்ற தவறி உள்ளார்.
தேவ்யானி அவரது குழந்தைகள் முன்னிலையில் கைது செய்யப்பட்டதாக தவறாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரை மற்றவர்களைப்போல அல்லாமல், முடிந்த அளவு மிகுந்த முன் எச்சரிக்கை உணர்வுடன் கைது செய்துள்ளனர். அவருக்கு அப்போது கை விலங்கிடப்படவில்லை. கட்டுக்குள் வைக்கப்பட்டு விடவும் இல்லை.
உண்மையைச் சொல்வதானால், கைது செய்த அதிகாரிகள் வழக்கமாக மற்றவர்களிடம் இருந்து செல்போனை பறித்து விடுவதைக்கூட செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் எண்ணற்ற தொலைபேசி அழைப்புகளை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. குழந்தைகளை கவனித்துக்கொள்ள அவர் யாரையெல்லாம் தொடர்பு கொள்ள விரும்பினாரோ அதற்கெல்லாம் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தேவ்யானி கைது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் ஏறத்தாழ 2 மணி நேரத்தில் முடிந்து விட்டது. கடும் குளிர் காரணமாக அவரை தங்களது காரில் வைத்து போன் செய்யவும் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். அவருக்கு காபி கூட வரவழைத்து கொடுக்கப்பட்டது. அவருக்கு உணவு தரவும் முன்வந்தனர்.
Published by

Leave a comment