‘வீதி விளக்குகளை எரிய விடுவதில் மட்டக்களப்பு மாநகர சபை பாரபட்சம் காட்டி வருகின்றது’ – முன்னாள் மாநகர சபை உறுப்பினர் றம்ழான்

ramlan– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: வீதி விளக்குகளை எரிய விடுவதிலும் மட்டக்களப்பு மாநகர சபை பாரபட்சம் காட்டி வருவதாக முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதி விஸ்தரிக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட பின்னர் புதிதாக நடப்பட்ட நவீன மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள வீதி விளக்களை மாநகர சபை பொறுப்பேற்று எரிய விட்டும் நிறுத்தியும் வருகின்ற அதே சமயம் மாநகர சபைக்குட்பட்ட காத்தான்குடியின் எல்லைப்பிரதேசமான மஞ்சந்தொடுவாய் பிரதேசத்திலுள்ள வீதி விளக்குகளை எரிய விடாமல் பாரபட்சம் காட்டி வருகின்றது இதனால் வீதி விளக்குகள் இருந்தும் மஞ்சந்தொடுவாய் பிரதேசம் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது.

அண்மைக்காலமாக புதிதாக நிறுவப்பட்ட மின் கம்பங்களில் மட்டக்களப்பு, கல்லடி போன்ற பிரதேசங்களில் ஒரு கம்பம் விட்டு ஒரு கம்பமாக மின் விளக்குகளை எரிய விடப்பட்டிருந்த போதிலும் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் இரண்டு கம்பம் விட்டு ஒன்றும் மூன்று கம்பம் விட்டு ஒற்றுமாகவுள்ள மின் விளக்குகளையே எரிய விடப்பட்டு வந்தது ஆனால் அதுவும் கடந்த மாதங்களாக எரிய விடப்படாமல் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதனால் வீதி முழுமையாக இருள் சூழ்ந்து காணப்படுவதோடு  வீதிகளில் நடமாடும் கட்டாக்காளி மாடுகள், நாய்கள் பிரயாணம் செய்பவர்களின் கண்களுக்கு புலப்படாமல் போவதால் அதிகமானவர்கள் விபத்துக்குள்ளாகியும் வருகின்றனர்.

அவ்வாறு கடந்த வாரம் வீதி விளக்குகள் எரிய விடப்படாத காரணத்தாலும் கட்டுப்படுத்தப்படாத கட்டாக்காளி மாடுகளாலும் வீதியின் நடுவே நின்று கொண்டிருந்த கட்டாக்காளி மாடு ஒன்றில் மோட்டார் சைக்கிளில் செய்தி சேகரிக்கச் சென்று கொண்டிருந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவர் மோதி பாரிய விபத்துக்ளாகிருந்தார். இவ்வாறு பல்வேறு வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது.

அது மாத்திரமின்றி மாநகர சபை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களில் மஞ்சந்தொடுவாய், பூநொச்சுமுனை, நாவற்குடா கிழக்கு போன்ற முஸ்லிம்கள் வசிக்கும் பிரதேசங்கள் மீது பாரபட்சம் காட்டி வருகின்றது இன்று வரை மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் சுனாமி பேரலையினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பூநொச்சுமுனை மீன்பிடிக்கிராமத்திற்கு ஒரு கொங்ரீட் வீதியையோ அல்லது தார் வீதியையோ அமைத்துக் கொடுக்கவில்லை.

மாறாக பிரதேச செயலகத்தினால் தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தில் ஒரு கொங்ரீட் வீதி மாத்திரம் கடந்த மாதம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் மீன்பிடித்துறைமுகத்திற்கு செல்லும் அத்தியாவசியமான கிரவல் வீதி அன்று தொடக்கம் இன்று வரைக்கும் புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது.

அத்தோடு நாவற்குடா கிழக்கு கிராமம் ஒரு தாழ்நிலை பிரதேசம் மழைகாலங்களில் வெள்ளநீர் வழிந்தோட வசதியின்றி தேங்கி நிற்கின்ற யுத்தத்தினால் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் குடியமர்த்தப்பட்ட ஒரு கிராமமாகும் அக்கிராமத்தில் ஒரு சிறிய 50 மீற்றர் கொங்ரீட் வீதியை தவிர அனைத்து வீதிகளும் கிரவல் மற்றும் மணல் வீதியாகும்.

ஆனால் எத்தனையோ வடிகாலமைப்பு மற்றும் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் மாநகர சபைக்கு வழங்கப்பட்டிருந்த போதிலும் ஒரு சிறியளவிலான வடிகாலமைப்பையோ அல்லது ஒரு தார் வீதியையோ அல்லது  அக்கிராமத்;திற்கு செல்கின்ற பிரதானமான நீளமான வீதிக்கோ கொங்ரீட் இட்டுக் கொடுக்கவில்லை. இன்றும் அதிகமான வீதிகள் மணலாகவும் சேதமடைந்த கிரவல் வீதியாகவுமே காணப்படுகின்றது 

அதுபோன்று மஞ்சந்தொடுவாய் பிரதேசம் இங்கு சுமார் 40க்கும் மேற்பட்ட பெரியளவிலான வீதிகளும் 20க்கும் குறைவில்லாத சிறிய வீதிகளும் காணப்படுகின்ற போதிலும் கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டத்தினுடாக சுமார் ஐந்து வீதிகளும்  தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டதில் பிரதேச செயலகத்தினால் சிறிய ஐந்து வீதிகளும் மாநகர சபையின் ஒதுக்கீட்டினுடாக ஒரு சில கிரவல் வீதிகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் பாரியளவிலான நீளமான வீதிகளையும் வடிகான்களையும் அமைத்துக் கொடுக்கும் நிதி நிறுவனங்களான நெல்சிப், ஜெபிக், ஜெயிக்கா, ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி (ADB Fund) குறித்து ஒதுக்கப்படும் மாகாண சபை நிதி (PSDG) ஆகிய திட்டங்களில் ஒரு வீதியோ அல்லது ஒரு வடிகானோ இன்று வரைக்கும் அமைத்துக் கொடுக்கவில்லை.

ஆனால் அவ்வாறான வேலைத்திட்டங்கள் முஸ்லிம்கள் அல்லாத பிரதேசங்களில் இடம்பெற்று வருகின்றது அது மாத்திரமின்றி மட்டக்களப்பு மாநகர சபைக்கு இவ்வருடம் வருமானமாகக் கிடைக்கும் நிதியிலிருந்து மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்களை இனம் கண்டு அதன் வேலைத்திட்டங்களுக்கு மதிப்பீடுகளும் செய்யப்பட்டு இறுதியாக சபையினால் வீதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிக்கான வேலைத்திட்டங்களைக் கூட இன்னும் குறித்த முஸ்லிம் பிரதேசத்திற்கு மாநகர சபை மேற்கொள்ளாமல் பாரபட்சம் காட்டி வருகின்றது

ஆனால் இக்குறித்த பிரதேசங்களின் ஆளுமையை தன்னக்கதே கொண்டுள்ள மட்டக்களப்பு மாநகர சபை சோலைவரி, விளம்பரவரி, வியாபாரவரி மற்றும் கட்டிட விண்ணப்ப கட்டணம், காணி உப பிரிவிடுகைக் கட்டணம் என பல்வேறு வருமானங்களை ஈட்டி வருகின்றது  ஆனால் தின்மக்கழிவகற்றல் சேவையையேனும் சிறப்பாக செய்வதை  அவதானிக்க முடியவில்லை

இவ்வாறான பாராபட்சமான மாநகர சபையின் செயற்பாட்டின் மூலம் குறித்த பிரதேசங்கள் எதிர் காலத்தில் தனியாக பிரிந்து நிலத்தொடர்புரீதியாக அருகிலுள்ள காத்தான்குடி நகர சபையுடன் இணைக்கப்படுவதற்கான சந்தர்ப்பமும் வேண்டுகோலும் வலுப்பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும், எனவும் தெரிவித்தார். 

முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான்
முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான்

Published by

Leave a comment