கெப்டவுண்: மறைந்த நெல்சன் மண்டேலாவுக்கு உலகெங்கிலிருந்தும் அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா , நெல்சன் மண்டேலா, பிறர் விடுதலைக்காக, தனது சுதந்திரத்தைத் தியாகம் செய்தவர் என்று கூறியிருக்கிறார்.
நெல்சன் மண்டேலா காட்டிய உதாரணம் இல்லாமல் இருந்தால், தன்னால் தனது வாழ்க்கையையேகூட கற்பனை செய்ய முடியாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
நெல்சன் மண்டேலா ஒரு தலைவராகவும், தனிப்பட்ட மனிதராகவும், மிகவும் பிரத்யேகமான ஒருவர் என்று இந்தியப் பிரதமர் மன்மோஹன் சிங் கூறினார்.
மேலும் மன்மோஹன் சிங் கூறுகையில், மண்டேலா உலகின் மனசாட்சியாகத் திகழ்ந்தவர் என்றும்,அவரது தென்னாப்ரிக்க மக்களை அவர் தடைகளைக் கடக்க தலைமை தாங்கி நடத்திய பின்னரும், உலகெங்கும் ஒடுக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராகப் போராடி வரும் மக்களுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றாகத் திகழ்ந்தார் என்று கூறினார்.
பிரிவினையால் சிதறிக்கிடக்கும் உலகில், அவர் நல்லிணக்கத்துக்கும் , சமாதானத்துக்கும் உழைப்பதற்கு ஒரு உதாரணமாகத் திகழ்ந்தார் என்றும் அவரைப் போல ஒருவரை இனி இன்னும் நீண்ட காலத்துக்குப் பார்க்க முடியாது என்றும் கூறினார் மன்மோஹன் சிங்.
நைஜீரிய அதிபர் குட்லக் ஜோனாதன் உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஒரு உத்வேகத்தை அளிப்பவராக விளங்கினார் என்று கூறினார்.
நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய நண்பரும் , நோபல் சமாதானப் பரிசு பெற்றவருமான பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு, கேப் டவுனில், நெல்சன் மண்டேலாவுக்காக பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
தென்னாப்ரிக்க நிறவெறி அரசின் கடைசி அதிபரான எப்.டபுள்யூ.டி கிளார்க் ( மண்டேலாவை 30 ஆண்டு சிறைவாசத்திலிருந்து விடுதலை செய்தவர்) தென்னாப்ரிக்கர்கள் நெல்சன் மண்டேலாவை ஒரு பெரிய ஒற்றுமைப்படுத்தியவராகவே நினைவு கூர்வார்கள் என்றார்.
மண்டேலாவை சந்தித்தது, தனது வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த ஒரு பெரிய கௌரவம் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறினார்.
சீனா மானுட குலத்தின் முன்னேற்றத்துக்கு மண்டேலாவின் பங்களிப்பை ஒருபோதும் மறக்காது என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறினார். BBC
![mandela_2111519b[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/12/mandela_2111519b1.jpg?w=300&h=187)
![_68548433_68548428[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/12/68548433_685484281.jpg?w=464&h=261)
Leave a comment