கொழும்பு: தொழில் வாய்ப்புக்காக கொரியா செல்லும் நோக்கில் கொரிய மொழி பரீட்சையில் தோற்றி சித்தியடைந்தவர்களுக்கு அடுத்த வருட இறுதிக்குள் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
நேற்று (05) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்- இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை சுமார் ஆறாயிரம் இலங்கையருக்கு கொரிய அரசு தொழில்வாய்ப்புக்களை வழங்கி வருகிறது. எனினும் கடந்த 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2011ஆம் ஆண்டில் சித்தியடைந்தோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. எனவே அனைவருக்கும் தொழில்வாய்ப்பை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது நாம் அல்ல. அவர்களை இணையளத்தினூடாக கொரிய அரசே பணிக்கு இணைத்துக்கொள்கிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு பரீட்சையில் சித்தியடைந்தோர் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் அந்நாட்டுக்குச் செல்லும் சந்தர்ப்பத்தைப் பெறுவர். பரீட்சையில் சித்தியடைந்த அனைவரும் தொழில்வாய்ப்பை பெறுவர் என்று நான் நம்புகிறேன்.
தற்போது இ-10 வீசா பற்றிய பேச்சொன்று பரவி வருகிறது. அப்படியெல்லாம் எதுவும் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. மீன்பிடி- கட்டுமானம் போன்ற பணிகளுக்கு மொழிப் பரீட்சையில் சித்தி அவசியமென்பதில்லை என்பது எனதும் ஜனாதிபதியினதும் கருத்து. அதற்காக அந்நாட்டு அரசாங்கத்துடன் நாம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். அந்த முயற்சி வெற்றியளிக்குமானால் மட்டுமே , 10 என்ற புதிய வீசா என்ற நடைமுறை பரீட்சை எழுதாதவர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும். அப்படி மாற்றம் வருமாக இருந்தால் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து நாம் மக்களுக்கு அறிவிப்போம்.
கொரியா செல்வதற்கு கொரிய மொழி பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். அப்படியில்லாம் பணத்தைக் கொடுத்து போகலாம் என்று சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை. எனவே சித்தியடையாதவர்களாயிருந்தாலும் சித்தியடைந்தவர்களாயிருந்தாலும் முகவர்களிடமோ – இடைத் தரகர்களிடமோ பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அமைச்சர் தெரிவித்தார்.lk
Published by
![korean_letters[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/10/korean_letters1.jpg?w=150&h=98)
Leave a comment