கொழும்பு: இயங்கிய நிலையில் தரித்து நிறுத்தப்பட்டிருந்த ரயில் என்ஜின் ஒன்று சாரதி இல்லாத நிலையில் கரையோர ரயில் பாதையில் திடீரென பயணித்துள்ளது. நேற்று அதிகாலை 1.45 மணியளவில் இந்த பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெமட்டகொடை ரயில் திருத்தும் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இன்ஜினே இவ்வாறு தானாகவே இயங்கி சாரதி எவரும் இல்லாத நிலையில் சென்றுள்ளதுடன் அது இரத்மலானைக்கும் கல்கிஸ்ஸைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் வைத்து ரயில்வே அதிகாரிகள் எடுத்துக்கொண்ட பகிரத பிரயத்தனத்திற்கு மத்தியில் நிறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படாத ‘சன்டின்’ ரக இன்ஜினே இவ்வாறு சென்றுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்தச் சம்பவத்தை அடுத்து ரயில்வே பொது முகாமையாளர் பீ. ஏ. பி. ஆரியரத்னவினால் மேற்படி என்ஜினின் சாரதியும் அதன் உதவியாளரும் உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள் ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவம் ஒன்று வரலாற்றில் இதுவரை காலம் நடைபெறாத நிலையில் இந்தச் சம்பவத்திற்கு தொழில்நுட்ப கோளாரா அல்லது அதிகாரிகளின் கவனயீனமா காரணம் என்பன தொடர்பாக இந்த நிபுணத்துவக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :-
ரயில்வே திணைக்களத்திற்குச் சொந்தமான தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள ரயில் திருத்தும் தளத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த ரயில் என்ஜின் இயங்கிய நிலையில் தரித்து நிறுத்திவைக்கப்பட்டிருந்துள்ளது.
இந்நிலையில் மேற்படி ரயில் என்ஜின் அதிகாலை 1.45 மணியளவில் அதன் சாரதியோ உதவியாளரோ இல்லாத நிலையில் எதிர் பாராத விதத்தில் பயணித்துள்ளது.
என்றும் இல்லாதவாறு என்ஜின் இவ்வாறு திடீரென சாரதி இல்லாமல் செல்வதை கண்ட இரவு நேர கடமையில் இருந்த ரயில்வே அதிகாரிகள் சிறிது நேரம் அதிர்ச்சியுற்ற நிலையில் ஆச்சரியமாக பார்வையிட்டுள்ளதுடன் இந்த அனர்த்தம் ஆபத்தான ஒன்று என்பதை புரிந்து கொண்ட அதிகாரிகள் உடனடியாக அந்த ரயில் என்ஜினை தடுத்து நிறுத்த செயற்பட தொடங்கியுள்ளனர்.
என்ஜின் ஒன்று சாரதி எவரும் இல்லாமல் கட்டுப்பாடற்ற நிலையில் பயணிப்பது தொடர்பான தகவல்களை மருதானை ரயில் நிலையம் தொடக்கம் ரத்மலானை ரயில் நிலையம் வரை அறிவித்த ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகள் குறித்த இன்ஜினை ரத்மலான வரையில் பயணிக்க விட்டுள்ளதுடன் மற்றுமொரு வாகனத்தில் உடனடியாகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
மேற்படி ரயில் என்ஜின் கட்டுப்பாட்டை இழந்து மேலும் தூரம் பயணிப்பதை தடுக்கும் வகையில் இரத்மலான பிரதேசத்தில் தண்டவாளத்தில் பாரிய கட்டைகளை நிரப்பி தடுத்து நிறுத்த தயாராக்கப்பட்டுள்ள அதே சமயம் கொழும்பிலிருந்து வேறு ஒரு வாகனத்தில் சென்ற அதிகாரிகளும் இரத்மலானை ரயில் நிலைய அதிகாரிகளும் இணைந்து தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தெமட்டகொடயிலிருந்து திடீரென புறப்பட்ட இன்ஜின் மருதானை, கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை மற்றும் தெஹிவளை ஆகிய எட்டு ரயில் நிலையங்களையும் தாண்டி சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்தை 40 நிமிடங்களில் சென்ற இன்ஜின் கல்கிஸ்ஸைக்கும் இரத்மலானைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தின் ஊடாக சென்றுகொண்டிருக்கும் போது தமது உயிரையும் பொருட்படுத்தாது ஓடும் இன்ஜினில் பாய்ந்து ஏறி இன்ஜினை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
என்ஜினை இயக்க சாரதி எவரும் இல்லாதமையினால் இன்ஜின் சாதாரண வேகத்தில் வந்துள்ளதுடன் அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.
இயங்கிய நிலையில் என்ஜின்களை தரித்து நிறுத்துவது சாதாரணமாக வழக்கமான ஒரு விடயம் என்று தெரிவித்த ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர், இவ்வாறான சம்பவம் வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும் என்றார். இதேவேளை, இந்த என்ஜின் அதிகாலை வேளை இவ்வாறு பயணித்ததால் அனர்த்தங்களில் இருந்து தவிர்க்க முடிந்துள்ளது என்றும் மாறாக பகல் நேரங்களில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருந்தால் சில சந்தர்ப்பங்களில் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.
அதேநேரம் ரயில் சாரதிகளும், ரயில்வே திணைக்களத்தின் கட்டுப்பாட்டு பிரிவினரும் நித்திரையையும் பொருட்படுத்தாது உடனடியாக செயற்பட்டமையினாலேயே இந்த இன்ஜினை துரிதமாக நிறுத்த முடிந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
அதேநேரம் தானாக இயங்கிய இன்ஜின் பயணித்த தண்டவாளத்தில் வழக்கமான நேர அட்டவணைப்படி பயணிப்பதற்காக தயாராக இருந்த ரயில்களுக்கு இந்தச் சம்பவம் தொடர்பில் தெரிவித்து அதன் பயணத்தில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தி அனர்த்தத்தை தவிர்க்க ரயில்வே கட்டுப்பாட்டு அறை நடவடிக்கை எடுத்துள்ளது.
என்ஜின் கியர் மற்றும் அதன் ஸ்ரியரிங் தன்னியக்கத்தில் இருந்திருக்கலாம் என ரயில் சாரதிகள் சந்தேகிக்கின்றனர்.
மூவர் கொண்ட விசாரணைக் குழு
ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் போக்குவரத்து அத்தியட்சகர் ஏ. டி. ஜி. செனவிரத்ன தலைமையில் மூவர் அடங்கிய குழு விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் என்ஜின் பிரதி பொறியியலாளர் கீர்த்தி செனவிரத்ன, ரயில்வே இயந்திர பிரிவின் பிரதி பொறியியலாளர் லிலந்த சேனநாயக்க ஆகியோர் இதில் அடங்குவர்.
– தினகரன்
Published by


Leave a comment