21 ஆண்டுகள் ஏக்கம் தீருமா? ஒருநாள் தொடரை வெல்ல இந்தியா தீவிரம்

indiaஜொகனஸ்பர்க்: தென் ஆபிரிக்க மண்ணில் இந்திய அணி இதுவரை, ஒருநாள் தொடரை வென்றது இல்லை. இம்முறை அசத்தல் “போர்மில்’ உள்ள இந்திய அணி, 21 ஆண்டுக்குப் பின் வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றி சாதிக்கும் என்று நம்பப்படுகிறது. 

நிறவெறிக் கொள்கை காரணமாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.) இருந்து, 1970ல் ஒதுக்கி வைக்கப்பட்ட தென் ஆப்ரிக்க அணி, 1991ல் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பியது. 21 ஆண்டுகள் கழித்து, முதன் முதலாக இந்தியாவுக்கு எதிரான கல்கத்தா ஒருநாள் போட்டியில், தென் ஆப்ரிக்கா விளையாடியது. 

எல்லாம் தோல்வி: அடுத்து 1992-93ல் இந்திய அணி, தென் ஆப்ரிக்கா சென்று 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. இதில் 2-5 அணி தோல்வியடைந்தது. அடுத்து 2006-07ல் 5 போட்டிகள் கொண்ட தொடரை 0-4 என, இழந்தது. 

2010-11ல் மீண்டும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-3 என, இந்திய அணி மீண்டும் தோற்றது. இந்த மூன்று தொடர்களில், மொத்தம் நடந்த 16 போட்டிகளில், இந்திய அணி 4ல் மட்டுமே வென்றது. 12ல் தோற்றது. 

அதாவது, 1992 முதல் இதுவரை தென் ஆப்ரிக்க மண்ணில் நடந்த இரு அணிகள் மோதிய தொடரை, இந்திய அணி வென்றதே இல்லை. 

இந்தியா மட்டுமன்றி வேறு எந்த அணி வந்தாலும், தென் ஆப்ரிக்காவை அதன் சொந்தமண்ணில் வீழ்த்துவது கடினம். இதனிடையே, தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 

இரு அணிகள் மோதும் முதல் போட்டி, டிசம்பர்  5ம் திகதி  ஜொகனஸ்பர்க்கில் நடக்கவுள்ளது. இம்முறை இந்திய வீரர்கள் உள்ள போர்மை பார்க்கும் போது, 21 ஆண்டுக்குப் பின், ஒருநாள் தொடரை இந்தியா வெல்லும் என்று நம்பப்படுகிறது. 

ஏனெனில், ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றதில்லை என்ற குறையை 2007-08ல் தீர்த்து வைத்த தலைவர்   தோனி, இந்த குறையையும் சரி செய்வார் என எதிர்பார்க்கலாம். 

இதற்கேற்ப, இந்த ஆண்டு மட்டும் 1000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து, புதிய “ஓட்ட மெஷின்களாக’ உருவெடுத்துள்ள ஷிகர் தவான், விராத் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் கைகொடுப்பர் என நம்பலாம். 

அதேநேரம், தென் ஆப்ரிக்க மண்ணில் ஒருநாள் போட்டிகளில் ஒரு முறை கூட, இந்திய அணி 300 ஓட்டங்களை (அதிகபட்சம் 279) எட்டியதில்லை. இப்போதுள்ள புதிய விதிகளால், இந்திய அணி 350 ஓட்டங்களை அடையச்  செய்கிறது. 

புதிய விதிகள்: ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் போல், ஒருவேளை இந்திய பந்து வீச்சாளர்கள் , தென் ஆப்ரிக்க ஆடுகளங்களில் சொதப்பும் பட்சத்தில், உள்வட்டத்துக்கு வெளியே நான்கு களத்தடுப்பாளர்கள் தான் நிற்க வேண்டும் என்ற விதிகள் இளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு உதவலாம். 

சமீபத்தில் பாகிஸ்தான் அணி, முதன் முறையாக ஒருநாள் தொடரை வென்று திரும்பியுள்ளது. இது போன்ற காரணங்களால், இந்திய அணி இம்முறை சாதிக்கும் என்று தெரிகிறது.  

TMR

Published by

Leave a comment