சூரியனை நெருங்கிய ஐசானைக் காணவில்லை: சிதறி இருக்கலாம் என நாஸா சந்தேகம்!

isan– SHM

வாஷிங்டன்: சூரியனை நோக்கி படு வேகமாக பாய்ந்து சென்ற ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை சுற்றிச் சென்ற பின்னர் மாயமாகி விட்டது. அனேகமாக அது சிதறுண்டு ஆவியாகிப் போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், விறுவிறுப்பான எதிர்பார்ப்பையம் ஏற்படுத்திய ஐசான் வால் நட்சத்திரம், சூரியனை நெருங்கிய அடுத்த சில நிமிடங்களில் காணப்படவில்லை.

ஐசானை மீண்டும் பார்க்கவில்லை என்று நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே ஐசான் சிதறுண்டு சூரியனின் வெப்ப அலையில் சிக்கி பொசுங்கி ஆவியாகிப் போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அதேசமயம், சூரியனை நெருங்கி மாயமான பின்னர் ஐசானின் சிதறல் தப்பிப் பிழைத்துள்ளதாக புதிய செய்தி வெளியாகியுள்ளது. இதனால் ஐசான் முழுமையாக பொசுங்கிப் போய் விட்டதா அல்லது அதன் சிதறலில் சில தப்பிப் பிழைத்ததா என்ற விவாதம் எழுந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஐசான் வால் நட்சத்திரம் சூரியனுக்கு வெகு அருகே போய் அதைக் கடந்து செல்ல முற்பட்டது.

ஆனால் சூரியனை கடந்த சில நிமிடங்களிலேயே அதைக் காணவில்லை. மாயமாகி விட்டது.

சூரியனைக் கடந்த அடுத்த சில விநாடிகளிலேயே ஐசான் சிதறுண்டு போனதாக பெரும்பாலான விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாசா விஞ்ஞானிகள் இதுகுறித்துக் கூறுகையில், ஐசான் வால் நட்சத்திரம் சூரியனைக் கடந்த பின்னர் மீண்டும் காணப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். அனேகமாக அது சிதறுண்டு ஆவியாகியிருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஐசான் வால்நட்சத்திரம் முழுமையாக அழிந்து போகவில்லை. அதன் சிதறலின் ஒரு பகுதி தப்பிப் பிழைத்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளதால், ஐசான் முழுமையாக அழியவில்லையோ என்ற விவாதம் எழுந்துள்ளது.

தப்பிப் பிழைத்த ஐசானின் பகுதியை மீண்டும் காண முடியும் என்ற நம்பிக்கையிலும் இவர்கள் உள்ளனர். இந்த சிதறல் தப்பிப் பிழைத்தது உண்மை என்றால் டிசம்பர் மாதத்திலும் ஐசானின் ஒரு பகுதியைக் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும் என்பது இவர்களின் கருத்தாகும்.

நாசாவின் ஐசான் வால் நட்சத்திரத்தைக் கண்காணிக்கும் குழுவில் இடம் பெற்றிருந்த கார்ல் பட்டம்ஸ் என்ற விஞ்ஞானியின் புதிய கருத்தும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், பெரிஹீலியனில் நுழைந்து மாயமான ஐசான் முழுமையாக அழியவில்லை. அதன் ஒரு பகுதி தப்பிப் பிழைத்துள்ளது.

கார்ல் மேலும் கூறுகையில், நாசாவின் சோஹோ தொலைநோக்கியின் லாஸ்கோ சி2 கமராவின் பதிவின்படி ஐசானின் மிக மிக சிறிய தூசி மண்டலத் துண்டு தப்பியுள்ளதாக நம்பப்படுகிறது.

isan (2)

isan

Published by

Leave a comment