அநாமதேய தொலைபேசி அழைப்புகள் குறித்து அவதானம் பேணுங்கள்

Stock-Market-Warning[1]கொழும்பு: பொலிஸ் உயர் அதிகாரிகள் எனக்கூறி தொலைபேசி ஊடாக பணம் பறிப்பவர்கள் பற்றி கவனமாக இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் பதவி வகிக்கும் உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களைக் கூறிக் கொண்டு பணம் பறிக்கும் மோசடிக் கும்பல் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எந்தவொரு பொலிஸ் அதிகாரியும் தொலைபேசியூடாக பணம் வசூலிப்பது இல்லை ஆகையினால் அவ்வாறான அநாமதேய தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் உடனடியாக அருகிலிருக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த சில காலமாக பலருக்கு இவ்வாறான தொலைபேசி அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிட்டிகல, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர்.

பொலிஸ் அத்தியட்சகர் அசங்க கரவிட்ட கல்கிஸ்ஸ பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர கரவிட்ட ஆகிய பொலிஸ் அதிகாரிகள் அழைப்பினை ஏற்படுத்துவது போல் தொலைபேசியினூடாக உரையாடி தமக்கு வேண்டிய பணத்தை வங்கியிலோ அல்லது ஈஸி கேஷ் மூலமாகவோ உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.

இதேவேளை நேற்றும் மேல் மாகாண வடக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் எல். ஜி. குலரத்ன அவர்களது தனிப்பட்ட தேவையெனத் தெரிவித்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் கந்தேவத்த கதைப்பதாக கூறிக்கொண்டு பணம் கேட்டு அநாமதேய அழைப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. மத்துகமவிலும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரேமலால் ரணகல என்னும் பெயரைக் கூறிக்கொண்டு பணம் பறிக்கும் மோசடி செயற்பாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

இத்தகைய பண மோசடியானது அனைத்து தரப்பினரிடமும் மேற்கொள்ளப்பட மாட்டாதெனத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் குற்ற விசாரணைகள் மற்றும் வழக்கு விசாரணைகளுடன் தொடர்புபட்டவர்களை சம்பந்தப்பட்ட வழக்கு அல்லது விசாரணையிலிருந்து விடுவித்து தருவதாக கூறியே இப்பணம் பறிக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் இத்தகைய தொலைபேசி அழைப்புக்களை நம்பாது உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். TK

Published by

Leave a comment