‘பட்டிப்பளை பிரதேச செயலரை அச்சுறுத்திய பிக்கு’ – பொலிஸில் புகார்

131127101103_ds_office_batticaloa_304x171_bbc_nocredit[1]மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பௌத்த பிக்குவொருவர் பிரதேச செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்ததோடு, அலுவலக உடமைகளையும் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளதாக காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள் தினமாகிய இன்று பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்த பொது மக்கள் முன்னிலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தையடுத்து நண்பகல் வரை அங்கு பதற்றமான நிலை காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் பிரதம பௌத்த பிக்குவான அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு எதிராகவே காவல்துறையில் பிரதேச செயலாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்தப் பிரதேசத்திலுள்ள கச்சைக்கொடி சுவாமிமலை கிராமத்தில் குறித்த பௌத்த பிக்குவினால் தற்போது புதிதாக விகாரையொன்று அமைக்கப்பட்டுவருகின்றது.

பௌத்த விகாரையை பதிவு செய்வது தொடர்பாக பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்த அவரிடம் பிரதேச செயலாளர் காணி உறுதி உட்பட ஆவணங்களை கோரிய போது, ஆத்திரமுற்ற பௌத்த பிக்கு தகாத வார்த்தைகளைப் பேசியவாறு அவரை தாக்க முற்பட்டதோடு அலுவலக மேசையிலிருந்த கணினி, ஃபக்ஸ், தொலைபேசி மற்றும் நாற்காலிகள் உட்பட உடமைகளையும், கோப்புகளையும் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து வெளியேறியதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம், காவல்துறையிடம் புகார் செய்துள்ளதையடுத்து காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படாவிட்டால் நாளை முதல் தாங்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக பிரதேச செயலக ஊழியர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ணவை சந்தித்து அவரது கவனதிற்கு கொண்டு வந்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக தாமதமின்றி விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கமாறு அமைச்சர் காவல் துறையினரைக் கேட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பொ. செல்வராசா கூறினார்.

மட்டக்களப்பு அரசாங்க அதிபரிடமிருந்தும் விசாரணை அறிக்கையொன்றை சம்பிக்குமாறு அமைச்சர் ஜோன் செனவிரட்ண கேட்டுள்ளார்.

– bbc

Published by

Leave a comment