கொழும்பு: புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சுதந்திர போராளியாக சித்தரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் நேற்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு ஆளும் தரப்பு எம்.பிக்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு முரணாக அவர் உரையாற்றியதாகவும் அதனால் அவரின் உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறும் ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் கோரினார். இதற்குப் பதிலளித்த குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஸ்ரீதரன் எம்.பி.யின் உரை நிலையியற் கட்டளைக்கு முரணாக இருந்தால் அவற்றை ஹன்சாட்டிலிருந்து நீக்குவதாக தெரிவித்தார்.
தமிழ் மக்களை கொன்றுகுவித்த பிரபாகரனை சுதந்திர போராளியாகவும் வீரராகவும் சித்தரிப்பதை கண்டித்த அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, வெள்ளைக் கொடி ஏந்திச் சென்ற மக்களை பிரபாகரனே கொன்றதாகவும் அத்தகைய நபரை போராளியாக கூறவேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.
பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவும் ஸ்ரீதரன் எம்.பியின் உரையை விமர்சித்தார். புலிகளின் மாவீர தினத்தை அனுஷ்டிக்க அனுமதிக்காதது குறித்தும் ஸ்ரீதரன் எம்.பி. சபையில் உரையாற்றினார்.TK
Leave a comment