பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாமென வேலைவாய்ப்புப் பணியகம் வேண்டுகோள்
கொழும்பு: மலேசியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பலர் சுற்றுலா வீஸாவில் அனுப்பப்படுவதனால் அது குறித்து விழிப்புணர்வுடன் செயற்படுமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி சுற்றுலா வீஸாவில் சென்ற ஆயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் மலேசியாவில் நிர்க்கதி நிலைக்குள்ளாகியிருப்பதாகவும் பணியகத்தின் பேச்சாளர் ரந்தெனிகல தெரிவித்தார்.
மலேசியாவில் அதிக சம்பளத்துக்கு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தெரியாமல் சுற்றுலா வீஸாவில் அனுப்பும் பல போலி முகவர்கள் குறித்து தகவல் கிடைத்திருப்பதுடன் அவர்களைத் தேடி பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், மலேசியாவில் எவரேனும் தொழில்வாய்ப்பு தருவதாக உறுதி மொழி வழங்கினால் அவர்கள் பெற்றுத் தரவுள்ள வீஸா குறித்து விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுற்றுலா வீஸாவில் செல்லும் எவருக்கும் மலேசியாவில் தொழில் செய்ய அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்காது. இதனை மறைத்து தொழில் செய்ய முடியுமெனக்கூறி மலேசியாவில் இவர்களைப் பொறுப்பேற்பதற்கு விசேட குழுவொன்றுமிருப்பதாக போலி முகவர்கள் பிரசாரங்கள் செய்து வருவது தெரிய வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
போலி வார்த்தைகளை நம்பி ஏமாறும் பலர் இரண்டு அல்லது மூன்று இலட்சம் ரூபாய் வரையிலான பணத்தை வழங்கியே இவர்கள் சுற்றுலா வீஸாவை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இதனால், இவர்கள் பாரிய நட்டத்தை எதிர்நோக்க வேண்டியிருப்பதாகவும் அவ்வதிகாரி வலியுறுத்தினார்.
முகவர்கள் பெற்றுத் தருவதாக கூறும் தொழிலை நம்பி சுற்றுலா வீஸாவில் மலேசியா செல்லும் இலங்கையர்கள் தொழிலுமின்றி கையில் பணமுமின்றி மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தஞ்சமடைவதனால், அவர்களை நாட்டிற்கு திருப்பியனுப்பி வைப்பதற்காக எமது இலங்கை அதிகாரிகள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி கூறினார்.
சட்டவிரோதமாக சுற்றுலா வீஸாவில் மலேசியாவுக்கு தொழில் செய்ய வருவோருக்கு சிறைத் தண்டனை வழங்குவதனைத் தவிர அந்நாட்டினால் வேறு எந்த ஏற்பாடுகளும் செய்யப் படவில்லை. சுற்றுலா வீஸாவில் மலேசியா சென்ற பலர் அங்கு நிர்க்கதி நிலைக்குள்ளாகியிருப்பதாகவும் அவர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைத்து தருமாறும் அவர்களது உறவினர்கள் பணியகத்திற்கு தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வருகின்றனர்.
இவர்களை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கும் போலி முகவர்கள் தலை மறைவாகியிருப்பதனால் பணியகத்தினால் நேரடியாக அவர்களுக்கெதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாதிருப்பதாக கூறிய ரந்தெனிகல மலேசியா தொழில்வாய்ப்புத் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
– தினகரன்
Leave a comment