பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் முன்மாதிரியை நமது மக்கள் பின்பற்ற வேண்டும்! – பொறியியலாளர் அப்துர் றஹ்மான்

rahuman[1]– PMGG ஊடகப்பிரிவு

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, 18,20,000 ரூபா பணமோசடி தொடர்பாக அண்மையில் மேற்கொண்ட அதிரடியான தேடுதல் நடவடிக்கைகள் சமூகத்திற்கு முன்மாதிரியானவையாகும். அவரது இந்த நடவடிக்கையை இப்பிரதேச மக்களும் தமது கவனத்திற்கு எடுத்துக்கொண்டு ஏனைய சமூக விவகாரங்களிலும் தமது கேள்விகளையும், விசாரிப்புக்களையும்,

தேடல்களையும் மேற்கொள்ள வேண்டுமென நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா உறுப்பினரும், முன்னாள் காத்தான்குடி நகர சபை எதிர்க்கட்சித் தலைவருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர்றஹ்மான் தெரிவித்தார்.

கடந்த வாரம் வெளியான ‘வார உரைகல்’ 281வது பதிவில் இடம்பெற்றிருந்த ‘18,20,000 ரூபா பணம் மாயமான விவகாரத்தால் அரை யமைச்சர் ஹிஸ்புல்லாவின் மெய்யடியார்க ளுக்குள் விரிசல்’ எனும் தலைப்பில் வெளியான செய்தியைப் பார்வையிட்ட பொறியியலாளர் அப்துர் றஹ்மான், அச்செய்தி தொடர்பில் ‘வார உரைகல்’லிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவ்வாறு தெரிவித்ததுடன் அவர் மேலும் கூறியதாவது:

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் விசுவாசிகளான றஹீம் மௌலவிக்கும், றபீக் என்பவருக்கும் இடையில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட 18,20,000 ரூபா பணத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதில் அவர் காட்டிய கரிசனையும், தேடுதல் வேகமும் அபாரமானது.

இறுதியில் காணாமல் போன அப்பணத்தை அவர் கண்டுபிடித்து விட்டதனால் இந்த விடயத்தில் பொலிசாருக்கோ அல்லது புலனாய்வுப் பிரிவினருக்கோ வேலையில்லாமலும் போய் விட்டது.

அத்தோடு இத்தனை காலமும் தனது விசுவாசியாக உடனிருந்து இப்பணத்தினை மோசடி செய்த அந்த நபரை தண்டிக்கும் வகையில் அதிரடியான நடவடிக்கைகளையும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மேற்கொண்டிருக்கிறார் எனவும் தெரிய வருகிறது.

இதுபோலவே, நமது மக்களுக்காக அரசாங்கமும், பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்களும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக வழங்குகின்ற கோடிக்கணக்கான ரூபாய்களிலும் ஏராளமான இலட்சங்கள் காணாமல் போயுள்ளன. வெளிப்படையான கணக்கு விபரங்களின்றி மாயமாகியுள்ளன. இவ்வாறான நிதி மாயங்கள் பற்றியும், மோசடிக் கணக்குப் பதிவுகள் குறித்தும் நாம் பல தடவை பிரதியமைச்சரின் கவனத்திற்கும், காத்தான்குடி மக்களின் கவனத்திற்குமாகக் கொண்டு வந்திருக்கின்றோம்.

உதாரணமாக, சுனாமி வீடமைப்புத் திட்டத்திற்காக சம்மேளனத்திலிருந்து பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா பெற்ற பெருந்தொகைப் பணம், அப்பணத்தில் வாங்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம், அக்காணிகளில் அமைக்கப்பட்ட சுனாமி வீடுகள், அவ்வாறு கட்டப்பட்ட வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்பட்ட விதம் குறித்தெல்லாம் நாம் கேள்வி எழுப்பியதுடன், சம்மேளனம் விசாரணையொன்றை நடாத்தி உண்மைகளைத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டிருந்தோம்.

எமது கோரிக்கை தொடர்பில் சம்மேளனம் கண் துடைப்பான விசாரணையொன்றை மேற்கொண்டாலும், அந்த விசாரணை அறிக்கையை வருடங்கள் பலவாகியும் இன்னமும் வெளியிடாமலுள்ளது.

இதுபோலவே முதலாவது நகரசபைக் காலத் தில் சுனாமி அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக அரசாங்கமும், உலக நாடுகளும் நமது மக்களுக்காக வழங்கியிருந்த பல மில்லியன் ரூபாய்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பான கணக்கறிக்கைகள் முறையாக ஆய்வு செய்யப்படாமல் ஆளுந்தரப்பினரின் அரசியல் அதிகாரத்தினால் பூசி மெழுகி மூடி மறைக்கப்பட்டன.

கடந்த நகர சபைத் தேர்தல் பிரச்சாரக் காலத்தில் எமது இயக்கத்தின் செலவில் அக்கணக்கறிக்கைகளை முறையாக ஆய்வுக்குட்படுத்துவதற்கு பிரதியமைசச்ர் தரப்பினர் தயாரா? என்று கூட நாம் பகிரங்கமாகச் சவால் விட்டுக் கேட்டிருந்தோம். எனினும் அவர்கள் இச்சவாலுக்கு முறையாக முகங்கொடுத்து பொதுமக்களின் பணம் தொடர்பான வெளிப்படைத்தன்மையை நிரூபிக்க முன்வாரமல் எமது மக்களைத் திசை திருப்பும் வகையில் பல்வேறு பொய்ப்பிரச்சாரங்களைச் செய்து தப்பித்துக் கொண்டனர்.

rahuman[1]
பொறியியலாளர் அப்துர் றஹ்மான்

தற்போதைய இரண்டாவது நகர சபையின் காலத்திலும் பல நிதி மோசடிகள் ஆளுந்தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதை நாம் பல தடவைகளில் சுட்டிக்காட்டியுள்ளோம். எனினும் அவை தொடர்பிலும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவோ, அல்லது இக்காத்தான்குடிச் சமூகமோ காணாமல் போன 18,20,000 ரூபா விடயத்தில் அக்கறை எடுத்து தேடிக்கண்டு பிடித்து உண்மையை அறிந்து கொண்டது போல் அக்கறை எதுவும் எடுக்கவில்லை.

இவ்வாறான அக்கறை இன்மையினால்தான் சில வருடங்களுக்கு முன் நமது பிரதேசத்தில் பொருளாதாரத்தில் சாதாரண நிலையிலிருந்த பலரும் இன்று மாட மாளிகைகளினதும், கன ரக ஆடம்பர வாகனங்களினதும் சொந்தக்காரர்களாகவும், பெரும் கோடீஸ்வரர்களாகவும் மாறியிருக்கின்றனர்.

இந்த 18,20,000 ரூபா விடயத்தில் துரித அக்கறை எடுத்துக் கொண்ட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, நாம் தெரிவித்துள்ள கோடிக்கணக்கான ரூபாய்கள் சம்பந்தப்பட்ட விடயங்களிலும், அவையும் நமது மக்களின் பணமே என்ற கரிசனையுடன் அக்கறையுடன் இவ்வாறான தேடுதல்களையும், விசாரிப்புக்களையும் கறாராக முன்னெடுத்திருந்தால் இன்று நமதூரின் பெரும்பாலான அபிவிருத்தி வேலைகள் மக்களுக்கு நூறு வீதமும் பயன் உடையதாகவும், நீண்ட காலப் பாவனைக்கு உகந்ததாகவும் நடைபெற்றிருக்கும்.

ஆனால் தம் விசுவாசிகளின் சொந்தப் பணத்தில் அக்கறையெடுத்துக் கொண்ட அவர், அரசாங்கத்தினதும் மக்களினதும் பொதுப் பணத்தில் அவ்வாறு அக்கறை எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் கொள்ளையிடும் கொங்றீட் கொந்தராத்துக்காரர்கள் நம் பிரதேசத்தில் பெருகி கொழுத்துப் போய் உள்ளனர். அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அவிபிருத்திகள் பலவும் தேய்ந்தும், சீரழிந்தும், சின்னாபின்னமாகி இப்பிரதேசமெங்கும் பரவலாகக் காணப்படுகின்றன.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, அவரது மெய்விசுவாசியின் சொந்தப்பணம் மாயமான விடயத்தில் எடுத்துக் கொண்ட தேடுதல் அக்கறையை இனிமேலாவது இப்பிரதேச மக்களும், சமூக இயக்கங்களும், தஃவா அமைப்புகளும் ஒரு நல்ல முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதிகளும், ஊடகங்களும் சுட்டிக்காட்டுகின்ற பொதுமக்களின் பணம் மோசடியாக மாயமாகும் விடயங்களிலும், தரமற்ற அபிவிருத்தி வேலைகள் தொடர்பாகவும் இதே முன்மாதிரியைப் பின்பற்றி விசாரணைகளையும், தேடல்களையும் மேற்கொள்ளவும் அவர்களுக்கெதிராக நடவடிக்கைகள் எடுக்கவும் முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Published by

One response to “பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் முன்மாதிரியை நமது மக்கள் பின்பற்ற வேண்டும்! – பொறியியலாளர் அப்துர் றஹ்மான்”

  1. niyasmafa@gmail.com Avatar
    niyasmafa@gmail.com

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

Leave a reply to niyasmafa@gmail.com Cancel reply