வரவு செலவுத் திட்டம்-2014

mahindaஓய்வூதியக் கொடுப்பனவு அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கும் ரூ 1,200 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு

விவசாயிகளுக்கு ரூ 1,250 ஓய்வூதியம்

கொழும்பு: கல்வி, சுகாதார, வீடமைப்பு, உட்கட்டமைப்பு, கிராமிய அபிவிருத்தி அடங்கலான சகல துறைகளையும் இணைத்த மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத் திட்டமாக 2014ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட 2014 ம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் கடந்த காலங்களைப் போன்று இலக்கங்களுக்குள் மட்டுப்படுத்தப்படாமல் சிறப்பாக தயாரிக்கப்பட்டிருப்பதாக ஆய்வாளர்களும் பொருளியல் நிபுணர்களும் வரவேற்றுள்ளனர். ஜனாதிபதியினால் சபையில் முன்வைக்கப்பட்ட 2014 ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளை ஒரே பார்வையில் தருகிறோம்;

* புதிய சம்பள கொடுப்பனவு பரிந்துரைகளை முன்னெடுக்க நடவடிக்கை

* பெருந்தோட்ட மக்களுக்கு 50 ஆயிரம் அலகுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதிகள்

* 350 ரூபா உரமானியம் தொடரும்; 20,000 உயர் தர பசுக்கள் இறக்குமதி

* சிறு தொழில் முயற்சியில் ஈடுபடும் பெண்களுக்கு வட்டியில்லாக் கடன்

* சிறந்த 5 திவிநெகும தோட்ட குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா ஊக்குவிப்பு

* 2014 முதல் வெளிநாட்டவர்கள் காணிகளை பெற்றுக் கொள்வதைக் கட்டுப்படுத்த குத்தகை ஒப்பந்தம். இதற்காக 15 வீத வரி விதிக்கப்படும்

* ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மிஹின் எயாருக்கு 50 மில்லியன் டொலர்களும் நிதி ஒதுக்கீடு

* இ.போ.சவுக்கு 2 ஆயிரம் பஸ்களை கொள்வனவு செய்ய ஆயிரம் மில். ரூபா ஒதுக்கீடு

* வங்கித் தொழில் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு 2 வீத தேசக் கட்டுமான வரி அதிகரிப்பு

* பெருந்தோட்டத்துறை குத்தகை ஏற்பாடுகளில் திருத்தம்; புதிய நிபந்தனைகள் உள்ளடக்கம்

* ஜனவரி முதல் 63 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு 1,250 ரூபா மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவு

* மிருக வைத்தியர்களுக்கு 7500 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு

* 5 இலட்சம் கிராமங்களை இணைக்கும் வகையில் 2014ல் ஆயிரம் பாலங்கள் அமைப்பு

* கிராம மைய பணிகளை ஒருங்கிணைக்கும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் பிரதான கணக்காளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

* மாதாந்தம் 50 ஆயிரத்திற்கும் குறைந்த வருமானம் ஈட்டும் வியாபாரங்களுக்கு உள்ளுராட்சி மன்றங்கள் விதிக்கும் அனைத்து தீர்வைகளிலிருந்தும் விலக்களிப்பு

* பிரதேச சபைகளை வலுவூட்டுவதற்காக சகல பிரதேச சபைகளுக்கும் மாதாந்தம் ஒரு மில்லியன்

* வடமத்திய மாகாணத்திலுள்ள கிராமங்களுக்கு நீர் சுத்திகரிப்பு தொகுதி அமைக்க ரூ900 மில். ஒதுக்கீடு

* பிரிவேனா கல்வி மேம்பாட்டிற்காக ஒவ்வொரு பிரிவேனாவுக்கும் தலா 5 இலட்சம் ரூபா

* பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 5 வீத கல்விக் கொடுப்பனவு

* மருத்துவத்துறையில் பட்டப்பின் படிப்பு கற்கைகளுக்கான அனுமதி இரட்டிப்பு; பட்டப் பின் படிப்பு மருத்துவ நிறுவனம் அமைக்க 2500 மில்லியன் ஒதுக்கீடு

* மருத்துவ பயிலுநர்களுக்கு 750 ரூபா கொடுப்பனவு

* இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீதான வரி 10 வீதத்தால் குறைப்பு

* கொழும்பில் பணியாற்றும் பொலிஸாருக்கென 3 புதிய வீடமைப்புத் தொகுதிகள்

* 2014ல் நடைபெறும் உலக இளைஞர் மாநாட்டிற்கு 250 மில்லியன்

* சகல அரசாங்க ஊழியர்களுக்கும் 1250 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு

* 2006 ம் ஆண்டிற்கு முன் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு 500 ரூபாவும் அதற்குப் பின் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு 350 ரூபாவும் அதிகரிப்பு

* தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை பொருத்தமான வகையில் அதிகரிக்க பரிந்துரை.

* திவிநெகும திட்டத்தின் கீழ் 125,000 பண்ணைகள் அமைத்து ஒவ்வொரு பண்ணை உரிமையாளர்களுக்கும் மாதாந்தம் 10,000 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவு

* தளபாடங்கள் போக்குவரத்து திட்டத்தை ரத்து செய்ய அனுமதி. முடிந்தளவு உள்நாட்டு உற்பத்தி மரத்தளபாடங்களை பயன்படுத்த ஊக்குவிப்பு

* வைத்தியசாலை ஊழியர்களுக்கான சீருடை கொடுப்பனவு 500 ரூபாவில் இருந்து 1500 ரூபாவிற்கு அதிகரிக்கப்படும்

* 2016 இல் துண்டு விழும் தொகை 3.8 வீதமாக குறைப்பு

* இலங்கையின் இரண்டு பெரிய சிறுவர் வைத்தியசாலைகள் ஆய்வு மத்திய நிலையமாக விரைவில் மாற்றம்.

* கலைஞர்களுக்கு ஐந்து ஓய்வு விடுதிகள்

* பிரிவெனா கல்வி நவீனமயப்படுத்தப்பட்டு அனைத்து பிரிவெனா ஆசிரியர்களுக்கும் ஏனைய ஆசிரியர்கள் பெறும் சலுகைகள்

Published by

Leave a comment