நிந்தவூரில் கைதானவர்களில் 7 பேர் பிணையில் விடுவிப்பு: மர்ம நபர்களினால் தொடர்ந்தும் பதற்றம்!

நிந்தவூர்: நிந்தவூரில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 21 சந்தேக நபர்களில் 07 பேரை இன்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரீ.கருணாகரன் தலா ரூபா 50 ஆயிரம் சரீர பிணையில் விடுவித்தார்.

 
இந்த 07 பேரில் 06 பேர் 18 வயதிற்கு குறைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 21 ஆவது சந்தேக நபர் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தபோதிலும் அவர் ஒரு மனநோயாளி என அவர் சார்பில் வாதிட்ட சட்டத்தரணிகள் குறிப்பிட்டதனைத் தொடர்ந்து அவருக்கும் சரீர பிணை வழங்கப்பட்டது.
 
இதேவேளை ஏனைய 14 பேரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
 
நிந்தவூரில் தற்போது அமைதி நிலவுவதுடன் போக்குவரத்தும் சீரடைந்து காணப்படுகிறது. வர்த்தக நிலையங்கள் அரச மற்றும் தனியார் துறை காரியாலயங்கள் பாடசாலை என்பன இன்று வழமை போன்று இயங்கின.
 
இதே வேளை நிந்தவூர் பிரதேசத்தில் இரவு வேளைகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் தொடர்ந்தும் இருப்பதாகவும் வீடுகளுக்கு கற்களை வீசி மக்களை அச்சத்திற்குள்ளாக்கியும் மக்கள் தங்களிடம் முறைப்பாடு செய்துள்ளதாக நிந்தவூர் ஜும்ஆ பள்ளி வாசல் நம்பிக்கையாளர் சபையின் செயலாளர் எம்.ஏ.எம்.றஸீன் தெரிவித்தார்.
 
பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற இம்முறைபாடு தொடர்பாக தாம் சம்மாந்துறை பொலிஸிற்கு அறிவித்திருப்பதாகவும் கூறினார்.
 
இன்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்திற்கு வழமைக்கு மாறாக அதிகளவிலான பொது மக்கள் வருகை தந்திருந்தனர்.
 
நிந்தவூர் மர்ம நபரின் நடமாட்டம் இரவுவேளைகளில் தொடர்ந்தும் இருப்பதனால் இரவு வேளைகளில் நிந்தவூர் பிரதேசத்தில் ஒரு பதட்டமான நிலை காணப்படுகிறது. 
VKRI

Published by

Leave a comment