யாழ்ப்பாணம்: வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார முன்னேற்றம் என்பவற்றிற்காக ஆணைக் குழுவொன்றை அமைக்க இருப்பதாக முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபை தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும் நல்லிணக்கத்திற்கான மக்கள் இயக்க தலைவருமான ஐய்யூப் அஸ்மின் அடங்கலான முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் முதலமைச்சருக்குமிடை யிலான சந்திப்பு யாழ். நூலகத்தில் நடைபெற்றது. வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் வட மாகாண முஸ்லிம்கள் முகம் கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் என்பன தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
இதன் போதே, வட மாகாண முஸ்லிம்களுக்காக ஆணைக் குழுவொன்றை உருவாக்கி, அதன் பரிந்துரைகளினூடாக முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் உரிய தீர்வு வழங்க இருப்பதாக வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த மாகாண சபை அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான யோசனை முன்வைத்து ஆராயப்படும் என முதலமைச்சர் உறுதியளித்ததாக வட மாகாண தமிழரசுக் கட்சி உறுப்பினர் ஐய்யூப் அஸ்மின் தெரிவித்தார்.
வடக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக் கிடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து இங்கு ஆராயப்பட்டுள்ளது. வடக்கில் மீள்குடியேற வரும் முஸ்லிம்கள் தொடர்பில் தவறான அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு உதவித் திட்டங்கள், காணி, வீட்டு வசதி என்பன கிடைப்பதில் நெருக்கடி நிலை காணப்படுவது தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் எடுத்துரைத்துள்ளனர்.
இது தொடர்பில் உள்ள உண்மை நிலையை அவர்கள் விளக்கியதாக வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் கூறினார்.
இந்த ஆணைக் குழுவில் வடக்கிலுள்ள 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவ ப்படுத்தும் இணைப்பாளர்கள் ஐவர் நியமிக்கப்பட உள்ளனர். இந்த சந்திப்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க செயலாளர் பிர்தெளஸ், நீதிக்கும் சமாதானத்திற்குமான அமைப்பின் சார்பில் நஜா மொஹமட், முஜீப் ஆகியோரும் பங்கேற்றனர்.
Leave a comment