நிந்தவூர்: ஊர் மக்களுக்கும் பொலிஸ் விசேட அதிரடிப் படையின ருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பில் நிந்தவூர் பிரதேசத்தில் நேற்றுக் காலையும் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது. பிரதேச மக்கள் வீதியில் இறங்கி வீதி போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்திய நிலையில் அவர்களை அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது பொலிஸாரு க்கும், எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரதேச மக்களுக்கும் இடையில் பெரும் முறுகல் நிலை தோன்றி யதுடன் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பிரயோகிக்கித்தனர்.
இதனையடுத்து பெரும் எண்ணி க்கையிலான பொலிஸாரை பயன்படுத்தி பல மணி நேரங்களுக்கு பின்னர் நிலை மையை கட்டுப்பாடடிற்குள் கொண்டு வந்துள்ளதுடன் வீதி திறந்து விடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
நிந்தவூர் பிரதேசத்தில் இரவு நேரங்களில் நடமாடிய மர்ம நபர்களை பொதுக்கள் மடிக்கிப் பிடித்த போது பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அவர்களை காப்பாற்றியதாக குற்றஞ்சாட்டி நிந்தவூர் பிரதேச பொதுமக்கள் கடந்த 17ம் திகதி முதல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் ஹர்தாலும்அனுஷ்டித்தனர். இதனால் கடைகள், வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தமையினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை 17 ஆம் திகதி முதல் கல்முனை, அக்கரைப்பற்று பிரதான வீதி மறிக்கப்பட்டு டயர்கள் எரிக்கப்பட்டிருந்தன. இதனால் வீதி போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்த பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன நேற்று மாலை விடுத்த உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, நிந்தவூரிலுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலையடுத்து பொது மக்கள் வீதிகளை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் 17ம் திகதி முதல் சுமார் 36 மணித்தியாலயங்களாக மறிக்கப்பட்டிருந்த கல்முனை, அக்கரைப்பற்று பிரதான வீதி சுமார் 300 பொலிஸாரால் நேற்றுக் காலை 10.00 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டது.
இதன்போது அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸாருக்கு கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகிக்கும் நிலைமை ஏற்பட்டன.
இதன்போது மோதல் நடவடிக்கையில் ஈடுபட்ட 21 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன் 8 மோட்டார் சைக்கிள்களையும் 20 சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
டயர்களை எரித்து வீதிகளில் இடையூறுகளை ஏற்படுத்தி பாதிக்கச் செய்தமை, பொது மக்களுக்கு போக்குவரத்து தடைகளை ஏற்படுத்தி இடையூறு செய்தமை சட்டவிரோதமாக கூடி எதிர்ப்பு நடவடிக்கைகளை ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே 21 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக் கிறது.
இதேவேளை 17ம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன் மோதல் ஏற்பட்ட சமயம் அன்றைய தினம் இரவு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் மஜீட் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் சித்தீக் ஆகிய இரு அதிகாரிகள் மீது பிரதேச மக்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப் படை அதிகாரிகளுக்கு மத்தியில் சிவில் உடை அணிந்த இருவர் காணப்பட்டதாகவும் அந்தப் பகுதியில் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு சமூக விரோத செயல்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகித்ததே இந்த பிரச்சினைக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
பிரதேச வாசிகளின் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் வி. இந்திரன் தலைமையில் விசேட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை தடுத்து நிறுத்தும் பொருட்டு கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் சிவில் சமூகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
– தினகரன்
Leave a comment