கொழும்பு: பொது மன்னிப்புக் காலம் முடிவடைந்த நிலையில் இன்னும் நாடு திரும்பாமல் சவூதி அரேபியாவில் தங்கியுள்ள சுமார் 1500 இலங்கையர்களை திருப்பி அழைப்பதற்கான விசேட ஏற்பாடுகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சு செய்யவுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் சுமார் 1500 பேர் வரை இலங்கைக்கு திரும்ப முடியாமல் உள்ளமை குறித்து சவூதியிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
சவூதி அரசுடன் விசேட பேச்சுவார்த் தைகளை நடத்தியே இதற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளதாக பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு பணியாளர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கடந்த 3 ஆம் திகதி வரை பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தக் காலப் பகுதிக்குள் சவூதியை விட்டு வெளியேறாது தொடர்ந்தும் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருப் பவர்களை கைது செய்து சிறைத்தண்டனை வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
எவ்வாறாயினும், குறித்த பொது மன்னிப்புக் காலப் பகுதிக்குள் 1500 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்தின் கீழ் தங்கியிருப்பதாகவும் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரு வதாகவும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்தது.
பொது மன்னிப்புக் காலம் முடிவடைந்த பின்னரும் ஆட்களை அழைத்துவருவது மிகவும் கடினமான விடயம் என்றாலும் இது குறித்து சவூதி அரசுடன் பேசியே முடிவு எடுக்க வேண்டும் என்றும் மங்கள ரன்தெனிய தெரிவித்தார். பொதுமன்னிப்புக் காலத்தினுள் சுமார் 3000க்கும் மேற்பட்டோர் இலங்கை வந்தனர்.
பொதுமன்னிப்புக்காலத்தை பயன்படுத்தி சவூதியிலுள்ளவர்களை நாடு திரும்புமாறு அமைச்சர் டிலான் இதற்கு முன்னர் கேட்டுக் கொண்டிருந்தார். சவூதியிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாகவும் இதை அறிவித்திருந்தார்.
எனினும் சிலர் இதனைப் பொருட்படுத்தாமல் இருந்துவிட்டனர். இவர்கள் அந்நாட்டு குடிவரவு குடியகல்வு சட்டத்தின் ஊடாக தண்டப்பணத்துடன் சில வேளைகளில் சிறைத்தண்டனையையும் அனுபவிக்க வேண்டிய நிலையும் ஏற்படும் என்பதையும் அமைச்சரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. TK
Leave a comment