நிந்தவூர்: அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு காரணமாக அந்த பிரதேசத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பொது மக்களுக்கும் சிறப்பு அதிரடிப்படை வீரர்களுக்குமிடையிலான முறுகல் நிலையின் போது நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள்
மீதான தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையில் இந்த ஹர்த்தால் மற்றும் கடையடைப்புக்கான அழைப்பு பிரதேச இளைஞர் அமைப்பொன்றினால் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் ஒன்றான நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக இரவு நேரங்களில் வீடுகளுக்கு கல் வீச்சு மற்றும் வீட்டுக் கதவுகளை தட்டுதல் போன்ற அச்சுறுத்தல் செயல்பாடுகளினால் மக்களிடையே ஒருவித அச்சநிலை காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நிந்தவூர் கடற்கரைப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் ஐந்து பேர் பிரதேச மக்களால் சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டதாகவும் இவர்களை மீட்பதற்கு மேலதிகமாக சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் விரைந்த போதுஇ பொது மக்களுக்கும் சிறப்பு அதிரடி படையினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டதாகவும் தொடர்பாக கூறப்படுகின்றது.
சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் எனக் கூறப்படுவோர் வாகனத்திலிருந்து இறக்கப்பட்டவுடன் அவர்கள் தாம் அணிந்திருந்த சீருடைகளுக்கு பதிலாக வேறு உடைகளை அணிந்ததாகவும் அவர்களது செயல்பாடுகளின் எழுந்த சந்தேகம் காரணமாகவே தாம் இவர்களை பிடித்ததாகவும் பிரதேச மக்கள் கூறுகிறார்கள்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பள்ளிவாசல்களிலிருந்து ஒலிபெருக்கிகள் மூலம் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூடியதாகவும் சிறப்பு அதிரடிப்படையினர் கூட்டத்தை கலைப்பதற்காக ஆகாயத்தை நோக்கியும் தரையை நோக்கியும் துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்ததாகவும் நள்ளிரவு வரை பதற்றநிலை காணப்பட்டதாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றார்கள்.
பொது மக்களின் தகவல்களின்படி நிந்தவூர்ப் பிரதேச உள்ளுராட்சி மன்ற தலைவர் எம். ஏ. எம். தாஹிர் உட்பட சிலர் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளார்கள்.
நிந்தவூர் பிரதேசத்தின் தற்போதைய நிலவரத்தை பொறுத்தவரை கல்முனை- அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் டயர்களும் மரக்கட்டைகளும் போட்டு எரிக்கப்பட்டுள்ளதால் அவ் வழியாக போக்கு வரத்து சேவைகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளது. அரசாங்க தனியார் அலுவலகங்கள், வங்கிகள் மூப்பட்டுள்ளன. பாடசாலைகள் இயங்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோகண கூறுகையில், குறித்த சிறப்பு அதிரடி படை வீரர்கள் ரோந்து நடவடிக்கைக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பொது மக்களுக்கும் அவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாக கூறுகின்றார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சம்மாந்துறை காவல்துறையினர் அங்கு சென்றிருந்தவேளை, பொது மக்களால் தாக்கப்பட்டு இருவர் காயமடைந்துள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிந்தவூர் பிரதேசத்தில் தற்போது உருவாகியுள்ள பதற்ற நிலையை நீக்கி இயல்வு நிலையை ஏற்படுத்துவது தொடர்பாக பிரதேச செயலகத்தில் இன்று மாலை விஷேட கூட்டமொன்று கூட்டப்பட்டுள்ளது.
– BBC Tamil
Leave a comment