லண்டன்: 1980ம் வருட ஆரம்பத்தின் பின்னர் இலங்கை உலகில் பிரபல்யம் பெற்றது. அது தமிழ் எனும் ஓர் இனத்துக்கும் சிங்கள எனும் இன்னுமொரு இனத்துக்கும் சண்டை நடைபெற்று வரும் ஓர் நாடு என உலக மக்கள் தெரிந்துகொண்ட காலம்.
இன்றும் உலகில் இலங்கை இதே போன்று பிரபல்யமடைந்திருக்கின்றது. உலகில் வாழும் இலங்கை புலம் பெயர் தமிழர்களின் ஒருமித்த குரலில் இலங்கை அரசாங்கம் கடந்த 4 ஆண்டுகளாக ஆட்டம் கண்டு வருகின்றது.
அரசியல் பின்புலங்களும் சக்திவாய்ந்த பண பரிமாற்றங்களுக்கும் மத்தியில் இன்று இலங்கை தமிழ் மக்களுக்கான குறிப்பாக வடக்கு தமிழர்களுக்கான குரல்கள் உலகமெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
யுத்தத்தால் வட-கிழக்கு தமிழர்களும், முஸ்லிம்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது வரலாறு. எனினும், இலங்கை தமிழ் அரசியல் கட்சியும் புலம் பெயர் தமிழர்களும் வடக்கு தமிழ் மக்களுக்கு மாத்திரமே குரல் கொடுத்து வருவதைப் பார்க்கும் போது ஐரோப்பாவின் பணச் சுகங்கள் மறைந்திருப்பது தெட்டத்தெளிவு!
இந்தப் பலம், இன்று கனடா, இந்தியத் தலைவர்கள் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதைத் தடுத்திருக்கின்றது.
இலங்கையில் தமிழ் இனம் இருப்பதை இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்களும், புலம் பெயர் தமிழர்களும் நிரூபித்து வருகின்றமையின் அழுத்தம் இன்று பிரித்தானியாவை மீண்டும் இலங்கையின் பக்கம் திசை திரும்பச் செய்திருக்கின்றது.
நேற்று வெளியாகிய பிரித்தானியாவின் பிரபலமான பத்திரிகைகளில் இலங்கை தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அழுத்தங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தன.
பிரித்தானியாவின் பிரதமருக்கு எதிரான போராட்டங்கள் செல்லாக் காசாகி, மென்மேலும் தற்போதைய அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் கொடுக்கப்படவேண்டிய நியாயத்தையும் கோடிட்டுக் காட்டிருந்தன.
இலங்கையில் முஸ்லிம்கள் இருக்கின்றனரா என்று தேடிப்பார்க்க வேண்டி இருக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் பாதிக்கப்படும்போது குரல் கொடுப்பதற்கு அரபு நாடுகள் முன்வரப் போவதில்லை.
அண்மைக் காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் அச்சுறுத்தல்களைக் கோடிட்டுக்காட்ட முஸ்லிம் தலைமைகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர். உலகில் புலம் பெயர்ந்து வாழும் முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்கு வரும் தலைவர்களுடன், முஸ்லிம்களின் சமகாலப் பிரச்சினைகள் பற்றி பேசாமல், அவர்களுடன் விருந்துண்டு புகைப்படம் எடுத்து பெருமைக்கு ஊடகங்களிலும், முகநூல்களிலும் பிரசுரிக்கும் கோமாளித்தனமான விடயங்களை மாத்திரமே இன்றுவரைக்கும் கடைப்பிடித்து வருகின்றனர்.
தமிழ் இனத்தின் ஒற்றுமை வடக்கை ஆழுகின்றது. அரசாங்கத்தைப் பகைத்தால் பதவி, அந்தஸ்த்து, பணம், சுகம் எல்லாம் போய்விடுமே என அரசாங்கத்தின் ஆசனங்களில் இருக்கும் முஸ்லிம்கள், தங்களது உரிமைகள் விடயத்தில் உறங்கிக் கிடக்கின்றனர்.
‘பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டதற்கான ஆதாரங்களை முடியுமானால் முன் வையுங்கள்’ என அரசாங்கம் கேட்ட போதிலும், மார்க்க தலைமை சபையோ, தூங்கும் அரசியல்வாதிகளோ அல்லது பாதிக்கப்பட்ட பள்ளிவாயல் நிருவாகிகளோ ஆதாரங்களை முன்வைக்கத் தயங்குவது, எதிர்கால முஸ்லிம்களின் பலவீனத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாக அமைகின்றது.
இலங்கையில் தமிழ் மக்கள் சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்களது இனத்தின் பாதிப்புக்களை தட்டிக்கேட்க முன்வந்ததாலும், அநீதிக்கு எதிராக குரல்கொடுக்க முன்வந்ததாலும், இலங்கையின் தமிழ் இனத்துக்கான இருப்பிடத்தை தக்கவைத்துள்ளதுடன், உலக செல்வாக்கையும் பெற்றிருக்கின்றது.
இலங்கை தமிழ் அரசியல்வாதிகளுக்கு உரிமையின் மேல் பற்று. முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு பதவியின் மேல் பற்று. ஆபத்தான பாதையில் இலங்கையில் முஸ்லிம் சமூகம் வழிநடாத்தப்படுவது மறைமுகமான உண்மை!
![945481_10200931949960421_1194912688_n[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/945481_10200931949960421_1194912688_n1.jpg?w=150&h=112)
Leave a comment