பரிசை நம்பி பணத்தை இழக்காதீர்கள்-டயலொக் வாடிக்கையாளர்கள் அவதானம்

Stock-Market-Warning[1]– பழுளுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: டயலொக் நிறுவனத்தின் ‘லோர்ட் ஒஃப் த ரீலோர்ட்’ பிரிவிலிருந்து பேசுவதாகவும் பல இலட்சக்கணக்கான பரிசுகள் விழுந்துள்ளதாக கூறி டயலொக் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நிலைமைகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஏமாற்றும் சம்பவங்கள் பல இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறுபட்ட வித்தியாசமான டயலொக் இலக்கங்களிலிருந்து டயலொக் வாடிக்கையாளர்களுக்கு அழைத்து உங்களுக்கு ‘லோர்ட் ஒப் த ரீலோர்ட்டில்’ இலட்சக்கணக்கான பரிசுகள் விழுந்துள்ளதாகவும் இந்த பணப் பரிசைப் பெற்றுக் கொள்வதற்காக உங்களது பெயர்,தேசிய அடையாள அட்டை இலக்கம்,வங்கிக் கணக்கு இலக்கம் என்பவற்றை அவர்கள் அழைத்த அதே இலக்கத்துக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்புமாறும் பின்னர் உங்களுக்கு அருகிலுள்ள பூட் சிட்டிக்கு வந்து ‘ஈ சி கேஸ்’ எனும் முறையில் ஒரு தொகையைக் குறிப்பிட்டு (அவர்கள் 10ஆயிரம் அல்லது விரும்பிய தொகையை குறிப்பிடுவார்கள்)அந்த தொகையைச் செலுத்தினால் உங்களது வங்கி இலக்கத்திற்கு குறித்த இலட்சக் கணக்கான தொகையை உடனடியாக போடுவதாகவும் டயலொக் வாடிக்கையாளர்களை இந்தக் கும்பல் ஏமாற்றி வருகின்றனர்.

இந்த அழைப்பின் உண்மை நிலை அறியாது முழுமையாக நம்பி தமக்கு இலட்சக்கணக்கான பணம் கிடைக்கப்பெறப் போகின்றது எனும் சந்தோசத்தில் தம்மிடத்தில் பணம் இல்லாவிட்டாலும் மற்றவர்களிடம் கடன் வாங்கி அவர்கள் குறிப்பிடும் தொகையை அழைப்பு விடுக்கப்பட்ட டயலொக் வாடிக்கையாளர்கள் ‘ஈ சீ கேஸ்’ முறையில் அனுப்பி வைக்கின்றனர். ‘ஈ சீ கேஸ்’ முறையில் அவர்கள் கேட்ட தொகையை அனுப்பிய பின்னர் அவர்களது தொலைபேசி இலக்கம் செயலிழந்து விடுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பிரிவிலும் அவர்கள் குறிப்பிடும் பணத்தை ‘ஈ சீ கேஸ்’ முறையில் சிலர் அனுப்பி ஏமாற்றமடைந்து பாதிக்கப்பட்டு தம்மிடம் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு வரும் அழைப்புகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் என பாதிக்கப்பட்டவர்கள் ஏனையோரை கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் பாதிக்கப்பட்ட ஒருவர் ‘ஈ சீ கேஸ்’ மூலம் பணம் அனுப்புவதற்கு முன் குறித்த விடயத்தை உறுதிப்படுத்துவதற்காக டயலொக் வாடிக்கையாளர் சேவை முகவர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அது ஏமாற்றுத் தகவலாகும் என அவர்கள் பதிலளித்ததால் அவர் குறித்த பணத்தை அனுப்பாமல் தப்பியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் டயலொக் வாடிக்கையாளர்கள் மிகக் கவனமாக செயற்படுமாறும் உங்களது தொலைபேசிக்கு வரும் அழைப்புக்கள் தொடர்பில் மிகக் கூடுதல் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

ஆகவே இவ்விடயம் தொடர்பில் டயலொக் நிறுவனம் தமது சிம் அட்டைகளை பாவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு இது தொடர்பில் குறுஞ்செய்தி மூலமோ அல்லது வேறுவிதங்கள் ஊடாகவோ விழிப்புணர்வு செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட டயலொக் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

Published by

Leave a comment