இணையத்தில் உலவும் குழந்தைகள் ஆபாசப்படங்கள்: ஆசிரியர், பெற்றோர் உட்பட 348 பேர் கைது

internet_keyboar-100008909-large[1]– SHM

டொராண்டோ: இணையத்தில் குழந்தைகள் ஆபாசப் படத்தை வெளியிட்டதாகக் கூறி அமெரிக்கா, ஸ்பெயின், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மொத்தமாக 348 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் ஆபாசப்படங்கள் இணையதளத்தில் வெளிவருவது குறித்து தொடர்ந்து வந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்,  கனடா நாட்டில் செயல்பட்டுவரும் அசோவ்பிலிம்ஸ் நிறுவனத்தின் மீது பொலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் காவல்துறையினர் அந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தனர். அதனடிப்படையில் தற்போது 348 குற்றவாளிகள் கைது செய்யப் பட்டுள்ளதாக டொராண்டோ பொலீசார் நேற்று தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று வருடமாக நடைபெற்ற விசாரணையின் மூலம் குழந்தைகள் ஆபாசபடத்தை இணையத்தில் உலவ விட்ட குற்றத்திற்காக கனடாவில் 108 பேர், அமெரிக்காவில் 76 பேர், ஸ்பெயின், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 164 பேர் என்று மொத்தம் 348 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

குழந்தைகளுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் பணியில் இருந்து வந்த 40 பள்ளி ஆசிரியர்கள், 9 மருத்துவர்கள், 32 செவிலியர்கள்,  6 சட்ட அமலாக்க அதிகாரிகள், 9 மத போதகர்கள்,  3 வளர்ப்பு பெற்றோர்கள் போன்றவர்களும் குற்றவாளிகள் பட்டியலில் அடக்கம். இதனை செக்ஸ் குற்றவியல் பிரிவின் தலைவரான இன்ஸ்பெக்டர் சோனா பெவன் டெஸ்ஜார்டின்ஸ் உறுதி படுத்தியுள்ளார்.

இந்த ஒபரேஷனில் அவுஸ்திரேலியா, ஸ்பெயின், அயர்லாந்து, கிரீஸ், தென் ஆப்பிரிக்கா,  ஹொங்கங், மெக்சிகோ,  நோர்வே மற்றும் அமெரிக்காவில் இருந்து 30காவல்துறைப் படையினர் பயன்படுத்தப் பட்டுள்ளனர்.

தீவிர தேடுதல் வேட்டையில் 350,000 மேற்பட்ட புகைப்படங்களும், 9,000 வீடியோக்களும் சிக்கியதாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இணையதள நிறுவனம் மூடப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் குற்றவாளிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.

இதுவரை 386 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் இந்த நடவடிக்கை மூலம் காப்பாற்றப்படும் என்றும் பொலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Published by

Leave a comment