* பயங்கரவாதத்தை தோற்கடிப்பது மட்டுமே எனது குறிக்கோளாக இருந்தது
* புலம்பெயர் தமிழர்களுடன் பேச தயார்-நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கக்கூடாது
* பிரிட்டிஷ் பிரதமரிடம் நானும் சில விடயங்களை சொல்ல விரும்புகிறேன்
கொழும்பு: மனித உரிமை மீறல்கள் நிரூபிக்கப்படுமாயின் அதற்கு காரணமானவர்கள் மீது தராதரம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். துன்புறுத்தல்களோ, கற்பழிப்போ எதுவாகவிருந்தாலும் வெளிப்படையாக விசாரணை நடத்தப்படும். எதனையும் மூடி மறைக்க நான் விரும்பவில்லை.
ஆனால் அனைத்து முறைப்பாடுகளும் இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவும் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் தாராளமாக விஜயம் செய்யலாம் எனக் கூறிய ஜனாதிபதி எல். ரி. ரி. ஈ. ஆதரவாளர்கள் மற்றும் அனுதாபிகளுடன் மாத்திரம் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதனைத் தவிர்த்து என்னுடனும் அரசாங்க தரப்பு பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை நடத்த முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
பயங்கரவாதத்தை ஒழித்து வெற்றி காண்பது மாத்திரமே தனது ஒரே குறிக்கோளாகவிருந்ததென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ராஜபக்ஷ, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரோனை சந்திக்க நேரம் ஒதுக்கியிருப்பதாகவும், அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதே சந்தர்ப்பத்தில் தானும் சில கேள்விகளை அவரிடம் கேட்கவிருப் பதாகவும் அவர் கூறினார்.
இந்தியப் பிரதமருக்கு பதிலாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பொதுநலவாய மாநாட்டிற்கு வந்துள்ளமை யையிட்டு தான் திருப்தியடைவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்க தயாரென குறிப்பிட்ட ஜனாதிபதி, எமக்கும் அவர்கள் செவிசாய்க்க வேண்டுமென தெரிவித்தார். ஆனால் எச்சந்தர்ப்பத்திலும் நாட்டை பிரிக்க இடமளிக்க மாட்டேன் எனவும் ஜனாதிபதி உறுதியாக கூறினார்.
பொதுநலவாய அமைப்பிலுள்ள நாடுகள் தமது பொதுவான ஆர்வங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பொதுநலவாய உச்சி மாநாடு ஒரு முக்கிய இடமாகும் இலங்கையில் உச்சி மாநாட்டை
முன்னிட்டு நடத்தப்பட்ட இளைஞர், மக்கள் மற்றும் வர்த்தகப் பேரவைகள் வெற்றியளித்துள்ளன செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்கள்:
கேள்வி: இலங்கை மீது போர்க்குற் றச்சாட்டு திணிக்கப்பட்டு மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் நாடு என்ற வகையில் பிரிட்டிஷ் இளவரசர் சார்ள்ஸிடம் கைகுலுக்கும் போது நீல்கள் எதை உணருவீர்கள்?
பதில்: (கைகுலுக்குவதற்கு முன்பாக நான் (ஆயுபோவன், வணக்கம்) தான் கூறுவேன். இலங்கை வருபவர்களை நாம் வரவேற்போம். அதுவே எமது கலாசாரம் ஆகும்.
பயங்கரவாதிகளால் கடந்த 30 வருடகாலமாக நாம் சொல்லொணா துன்பங்களுக்கு முகம் கொடுத்துள்ளோம். இதன்போது பெருமளவிலான மனித உரிமை மீறல்களுக்கு எமது மக்கள் முகம் கொடுத்துள்ளனர். நான் இது குறித்து அவருடன் கலந்துரையாடுவேன்.
சிவிலியன்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள், பெண்களென அனைவரும் கொல்லப் பட்டனர். பலர் சித்திரவதை செய்யப் பட்டார்கள். மிகவும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகினோம். அச்சந்தர்ப்பத்தில் எவரும் இந்த பயங்கரவாதத்திற்கு முடிவு காண முன்வரவில்லை. நாம் அந்த பயங்கரவாதத்தை ஒழித்து வெற்றி கண்டுள்ளோம். இப்போது இதனை எமது மக்கள் தவிர வேறு எவரும் பாராட் டுவதில்லை.
கேள்வி: அப்படியானால் 2009 மோதல்களின்போது உயிரிழந்த மக்களும் இதனை பாராட்டுகிறார்களா?
இலங்கையில் ஒரு வலுவான நீதித்துறை இருக்கின்றது. அத்துடன் எமது நாட்டில் பாராட்டுக்குரிய கலாசார பாரம்பரியங்களும் நிலவுகின்றன. நாம் குற்றமிழைப்பவர்களை அவர்கள் சித்திரவதை செய்பவர்க்ளாக இருந்தாலும் கொலை செய்பவர்களாக இருந்தாலும் மனித உரிமைகளை பறிப்பவர்களாக இருந்தாலும் அவர்களை எக்காரணம் கொண்டும் மன்னிக்கத் தயாராக இல்லை. குற்றமிழைத்தவர்களை நாம் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்போம்.
பதில்: மோதல் 2009 இல் மாத்திரம் இடம்பெறவில்லை. கடந்த 30 வருடகாலமாக இங்கு மக்கள் கொல்லப்பட்டனர். இலங்கையில் எமக்கென ஒரு சட்ட வரையறையுண்டு. அதன் கீழேயே கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன இயங்குகின்றன. பொதுநலவாய அமைப்பும் இவற்றை மேலும் பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளை எமக்கு தந்துதவுகின்றது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவர் முறைப்பாடு செய்வதாக இருந்தாலும் சரி, அது துன்புறுத்தல்கள் தொடர்பிலா னாலும் கற்பழிப்பு பற்றியதானாலும் எமது சட்ட வரையறைகளுக்குட்பட்ட வகையில் முறைப்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
நீங்கள் எமது கலாசாரத்தையும் விதி முறைகளையும் மதிப்பளித்து செயற்படட வேண்டும்.
நாம் இதுகுறித்து விசாரணை நடத்த தயார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தராதரம், பாரபட்சமின்றி அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் ஒளிவு மறைவு இருக்காது. நான் வெளிப்படையாக செயற்படுவேன்.
நீங்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் விஜயம் செய்து உண்மை நிலையினை நேரில் கண்டறியுங்கள். எமது அமைச்சர்னகள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாட வேண்டும். அப்போது தான் உண்மை நிலையை புரிந்து கொள்ள முடியும்.
கேள்வி: பிரிட்டிஷ் பிரதமர் கெமரூனை சந்திப்பீர்களா?
பதில்: நிச்சயமாக நான் அதற்காக முன்கூடியே நேரத்தை ஒதுக்கியுள்ளேன். அவரது கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதே வேளை எனக்கும் அவரிடம் கேட்பதற்காக சில கேள்விகளுண்டு.
கேள்வி: தமிழ் டயஸ்போராக்களுடன் எந்தவகையில் செயற்பட விரும்புகி aர்கள்?
பதில்: எம்முடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஏற்கனவே நாம் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்களுக்கு செவிசாய்க் தயார். அதே போன்று அவ ர்களும் நாம் கூறுவதனை கேட்க வேண் டும். எமக்கும் செவிசாய்க்க வேண்டும்.
இவர்கள் எல். ரி. ரி. ஈ. யின் அனுதாபிகள். பாரிய மோதல்கள் கொலைகள், கிராமங்களை அழித்தல், அரசியல் தலைவர்களைக் கொலை செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுத்த தீவிரவாதத்திற்கெள பயிற்றுவிக்கப்பட்ட 14 ஆயிரம் முன்னாள் புலி போராளிகளை நாம் புனர்வாழ்வளித்து சமூகத்தில் இணைத்துள்ளோம்.
சிறுவர் போராளிகளை ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே புனர்வாழ்வு வழங்கி சமூகமயப்படுத்தினோம்.
ஊடகவியலாளர்களுக்கும் பிறருக்கும் இவை வெறுமனே செய்தி மட்டும்தான். ஆனால் எங்களுக்கோ இது வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையிலான போராட்டம். 30 வருடமாக நாம் இதனால் துன்புற்றோம். இதன்போது எவரும் இதனை ஒரு விவகாரமாக கருதக்கூட இல்லை. தெற்கில் அல்லது காலியில் நாளாந்தம் 10 தொடக்கம் 15 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். யாருமே இது குறித்து எம்மிடம் கேட்கவில்லை. பயங்கரவாதத்தை தோற்கடிப்பது மட்டுமே என்னுடைய குறிக்கோளாகவிருந்தது. இது குறித்து கலந்துரையாட நான் தயார். ஆனால் எச்சந்தர்ப்பத்திலும் நாட்டைப் பிரிக்க நாம் இடமளிக்க மாட்டோம்.
கேள்வி: இந்தியப் பிரதமர் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளாமை பற்றி உங்களது அபிப்பிராயம்.
பதில்: பேர்த்தில் நடைபெற்ற மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டிருக்கவில்லை. இலங்கைக்கும் பிரதமரால் வர முடியவில்லை. அதற்கு பதிலாக வெளிவிவகார அமைச்சர் இங்கு வருகை தந்துள்ளார். அதனையிட்டு நான் பூரண திருப்தியடைகிறேன்.
கேள்வி: இந்தியப் பிரதமர் தமி ழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித் துத்தான் இங்க வரவில்லை என்கி றார்கள்
பதில்: அது குறித்த எதுவும் எனக்கு தெரியப்படுத்தவில்லை.
கேள்வி: பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ளும் பலர் நாட்டை மதிப்பிடும் நோக்கிலேயே இலங்கை வந்துள்ளனர்.
பதில்: அதனையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் நிச்சயம் இலங்கையை மதிப்பிட வேண்டும். வெறுமனே எல். ரி. ரி. ஈ. அனுதாபிகள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேச்சு நடத்துவது எம்முடனும் அவர்கள் பேச்சு நடத்த முன்வர வேண்டும்.
கேள்வி: பொதுநலவாயத்தின் தலைமைத்துவ பதவியை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பதவி வகிக்க வுள்ள நேரத்தில் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள் Zர்கள்.
பதில்: எனக்கு வேண்டியவற்றை என்னால் இங்கு செய்ய முடியாது. தலைமைப் பொறுப்பு வகித்தாலும் நான் இதில் ஒரு அங்கத்தவர் மாத்திரமே. அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி நாம் எமது தொனிப்பொருளை நடைபெற சாத்தியமாக்குவோம்.
லண்டன் பொதுநலவாய செயலகத்தின் பேச்சாளரும், தொடர்பாடல் மற்றும் பொது விவகாரங்களுக்கான பணிப்பாளருமான ரிச்சட் உக்கு நெரியாள்கையில் நடைபெற்ற இந்த விஷேட செய்தியாளர் மாநாட்டில் தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, பிரதியமைச்சர் சனத் ஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச்.எம். அஸ்வர், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம, தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி சரித்த ஹேரத் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
– தினகரன்
Leave a comment