மும்பை: இந்தியா உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களின் ஒருவரும், அந்நாட்டின் மிகப்பெரும் விளையாட்டு நாயகருமான, சச்சின் டெண்டுல்கருக்கு, பிரியாவிடை தந்துகொண்டிருக்கிறது. சச்சின், தனது கடைசி மற்றும் 200வது டெஸ்ட் போட்டியில் இன்று விளையாடிக்கொண்டிருக்கிறார்.
தனது சொந்த நகரான மும்பையில்,தனது இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆடவந்த சச்சினுக்கு , இன்று பெருத்த ஆரவாரத்துடன் ரசிகர்கள் வரவேற்பளித்தனர்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இன்று இந்திய இன்னிங்ஸில் விளையாடிய, சச்சின், ஆட்ட நேர முடிவில் 38 ஓட்டங்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.
டெண்டுல்கர் விளையாட களமிறங்கியதும், காதைச் செவிடாக்குமளவுக்கு, ஆரவாரம் விண்ணைப் பிளந்தது. சச்சினின் ஒவ்வொரு அடிக்கும், ரசிகர்கள் பெரும் உற்சாகக் குரலெழுப்பினர்.
40 வயதாகும் சச்சினின் இந்த இறுதி டெஸ்ட் இப்போது இந்தியாவின் மும்பை நகரில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக நடந்துகொண்டிருக்கிறது.
24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடிய சச்சின் எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளார்.
இந்தப்போட்டிக்கு முன்னதாக நடந்த அவரது இறுதி பயிற்சி அமர்வில், விளையாட்டரங்கில் இருந்த அவரது ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்கள் மத்தியில் பெரும் உணர்ச்சிகரமான சூழ்நிலை நிலவியது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான இந்த இரு டெஸ்ட் போட்டித்தொடரில் இந்தியா ஏற்கனவே 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இன்றைய போட்டியில், பூவா தலையாவில் வென்ற இந்தியா, பீல்ட் செய்ய முடிவெடுத்தது.
முன்னதாக , மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 182 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
bbc

Leave a comment