புயலாக மாறிவரும் வங்கக்கடல் காற்றழுத்தம்!

daily_painting_901_windy_day_on_the_ocean_acf65a267c441329be646b90f23e5c63[1]– SHM

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது தற்போது வலுவடைந்து வருவதாகவும், இது புயலாக மாறும் வாய்ப்பிருப்பதாகவும்,  இதனால் தமிழக கடலோரப் பகுதிகளில் கன மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில்,  அந்தமான் தீவுக்கு அருகே உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்து, சென்னைக்கு 800 கிலோ மீட்டர் தொலைவில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருவெடுத்துள்ளது.

இன்று அது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாற அதிக வாய்ப்புள்ளது.

அத்தகைய சூழலில் தாழ்வு பகுதி நகரும் திசையைப் பொறுத்து மழை பெய்ய வாய்ப்பு இருக்கும். அந்தத் தாழ்வு பகுதி மேலும் தீவிரமடைந்து புயலாக மாறவும் வாய்ப்புள்ளது. இன்று அது நகரும் திசையைப் பொருத்தே தெளிவான நிலைப்பாட்டுக்கு வர முடியும் என்றார்.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக,  கடலுக்குள் வடக்கு, வடகிழக்கு திசையில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்லும் போது கவனமாக இருக்குமாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Published by

Leave a comment