டுபாய்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக சதம் அடித்ததற்கு பலனாக, ஐசிசியின் டெஸ்ட் சகலதுறை ஆட்டக்காரருக்கான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் பிடித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 51 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அப்போட்டியில், இந்திய அணி இக்கட்டான சூழலில் இருந்தபோது, ரோஹித் சர்மாவுக்கு பக்கபலமாக இருந்ததுடன், சதம் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார் அஸ்வின். அந்த ஆட்டத்தில் அஸ்வின் 124 ஓட்டங்கள் குவித்ததுடன், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனால் சகலதுறை ஆட்டக்காரருக்கான தரவரிசையில் அஸ்வின் 81 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தைப் பிடித்தார். முன்னிலையில் இருந்த வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ஜேக்ஸ் காலிஸ் பின்னுக்குத் தள்ளப்பட்டனர். தற்போது, 2-ம் இடத்தில் உள்ள ஹசனை விட 43 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார் அஸ்வின்.
அதேபோல், டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசைப் பட்டியலிலும் அஸ்வின் 18 இடங்கள் முன்னேறி 45-வது இடத்தையும், பந்து வீச்சுப் பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறி 6-ம் இடத்தையும் பிடித்துள்ளார்.
கொல்கத்தா போட்டியில் அறிமுகமான ரோஹித் (177 ஓட்டங்கள்), முகமது சமி (9 விக்கெட்டுகள்) ஆகியோரும் தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளனர். துடுப்பாட்ட தரவரிசையில் ரோஹித் 63-வது இடத்தையும், பந்து வீச்சில் சமி 53-வது இடத்தையும் பிடித்துள்ளனர். LS
Leave a comment